கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

சுமார் 2 மாதங்களுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டன.

அதே வேளையில் கோவில்களை திறந்து அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று ஆகம விதிப்படி, வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர். வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வந்தனர்.

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுமையாக திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலையிலேயே கோவில்களில் திரண்ட திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபாடு செய்து வருகின்றனர்.

கோவில் நுழைவு வாயிலில் பக்தர்களின் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்கும் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் பக்தர்கள் பூ, பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு வர அனுமதி கிடையாது. விபூதி, குங்குமம் ஆகியவை பிரசாத தட்டில் வைக்கப்பட்டு இருக்கும். அதை பக்தர்கள் எடுத்துக்கொள்ளலாம். கொரோனா தடுப்பு விதிகளை பக்தர்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு தனி வழியும், செய்யாதவர்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கோவிலில் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

maalaimalar