தடுப்பூசி கொள்முதலில் ஊழல்; நெருக்கடியில் பிரேசில் அதிபர்

ரியோ டி ஜெனிரோ-பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, தடுப்பூசி கொள்முதலில் ஊழல் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, இதுகுறித்து விசாரிக்க, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அவருக்கு எதிராக நாடு முழுதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், தென் அமெரிக்க நாடான பிரேசிலும் ஒன்று.இங்கு கொரோனாவால் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிக பலியில், அமெரிக்காவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்காததால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தடுப்பூசி வழங்குவதும் மந்தமாக உள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் நம் நாட்டின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும் ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரிக்கும் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை வாங்குவதற்காக, அந்த நிறுவனத்துடன் பிரேசில் அரசு ஒப்பந்தம் செய்தது.இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

இந்த ஊழலில் அதிபர் போல்சனாரோவின் தொடர்பு குறித்து விசாரிக்க, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.இதையடுத்து அதிபர் பதவியில் இருந்து அவரை நீக்கக் கோரி, நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

dinamalar