பாட்டாளிகள் பணத்தில் வாங்கப்பட்ட ரினி தோட்ட நிலம், இப்போது அவர்களுக்குச் சொந்தமில்லை!

நாமதி | 1978-ல், ஜொகூர், ஸ்கூடாய், ரினி தோட்டத்தில், 6.5 ஏக்கர் நிலத்தை வாங்கியவர்கள், தற்போது அந்நிலம் தங்களுக்குச் சொந்தமானதாக இல்லை என்பதை மலேசியாகினியிடம் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

2021, ஜூலை 2-ம் தேதி, தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகம் (கே.பி.ஜே.) மற்றும் அதன் தலைமைச் செயலாளர் எஸ் கோபாலகிருஷ்ணன் மீது, நூசா பெஸ்தாரி காவல் நிலையத்தில் நிலத்தை வாங்கிய முன்னாள் ரினி தோட்டத் தொழிலாளர்கள்  போலிஸ் புகார் ஒன்றினைப் பதிவு செய்துள்ளனர்.

சபாபதி, தங்கராஜா, தேவராஜு, இராமன், சுகுமாறன்

1978-ல், அத்தோட்டத்தின் உரிமையாளர் (ஒரு வெள்ளைக்காரர்), அங்கு வேலை செய்த தங்களுக்கு, 6.5 ஏக்கர் நிலத்தை வீடுகள் கட்டிக்கொள்ள வழங்கியதாகவும், அப்போது தோட்டத்தில் மண்டோராகவும், ம.இ.கா. கேலாங் பாத்தா கிளைத் தலைவராகவும் இருந்த முனுசாமியிடம் அதற்காக தாங்கள் பணத்தைச் செலுத்தியதாகவும், பணம் போட்ட 46 பேரைப் பிரதிநிதித்து போலிஸ் புகார் அளித்த பெரியவர் இராமன் அர்ஜுணன், 70, மலேசியாகினியிடம் சொன்னார்.

ரினி தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் குடும்பங்களுக்குச் சொந்தமான அந்நிலத்தில், தற்போது கேபிஜே இரண்டு மாடி, இரட்டை வீடுகளைக் கட்டி, விற்பனை செய்து வருவதாக, பணம் செலுத்திய முன்னாள் தோட்டத் தொழிலாளி, மருதாயி (தற்போது உயிருடன் இல்லை) அவர்களின் மகன், எம் சுப்பிரமணியம், 66, தெரிவித்தார்.

“அந்தக் காலகட்டதில், கே.பி.ஜே. தலைவராக இருந்த எஸ் சாமிவேலு, RM 15,000-க்கு, நிலத்தோடு வீடு கட்டிதருவதாக எங்களுக்கு உறுதி அளித்தார். ஆனால், தற்போது அந்நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டு, RM 480,000-க்கு விற்கப்படுகின்றன.

“தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகமான கே.பி.ஜே., தொழிலாளர்களுக்காக அல்லாமல், பணக்கார வர்க்கத்திற்கு வீடுகளைக் கட்டி விற்று கொண்டிருக்கிறது.

“பி40 வர்க்கத்தைச் சார்ந்த தோட்டத் தொழிலாளர்களால், RM 480,000-க்கு வீடுகளை வாங்க முடியுமா?” என்றும் சுகு என்று நன்கு அறிமுகமான சுப்ரமணியம் கேள்வி எழுப்பினார்.

தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகத்தை, ம.இ.கா.வின் முன்னாள் தேசியத் தலைவர் எஸ் சாமிவேலு 1978-ல் தோற்றுவித்தார். 41 ஆண்டுகளாக அதன் தலைவர் பதவியையும் அவரே வகித்து வந்தார்.

2019-ம் ஆண்டு, கே.பி.ஜே.வின் புதியத் தலைவராகப் பதவி ஏற்ற ம.இ.கா. துணைத் தலைவர் எம் சரவணன், கே.பி.ஜே. தொடர்ந்து ம.இ.கா.வின் கீழ் செயலாற்றி வரும் என்றும், நாட்டிலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் நலனைப் பேணும் வகையில், வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும் என்றும், கடந்தாண்டு “கேபிஜே விஸ்மா துன் எஸ் சாமிவேலு” கட்டடத் திறப்பு விழாவின் போது அவர் கூறியிருந்தார். (OneNews, 27 செப்டம்பர், 2020)

அன்றைய தினம் அவர் பட்டியலிட்ட இடங்களில், ஸ்கூடாய் ரினி தோட்டமும் அடங்கும், ஏறக்குறைய RM 480,000 விலையில் விற்கப்படும் அவ்வீடுகள் தோட்டப் பாட்டாளிகளுக்காகக் கட்டப்பட்டவையா என்பதே, பணத்தைப் போட்ட ஏழை தோட்டத் தொழிலாளர்களின் தற்போதையக் கேள்வி.

இன்று, அந்த வீடமைப்புத் திட்டத்தில் வீடு வாங்க முடியாமலும், போட்டப் பணத்தைத் திரும்பப் பெற முடியாமலும் அவர்கள் தவித்து வருகின்றனர். 46 பேரில் தற்போது 9 பேர் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மற்றவர்கள் காலமாகிவிட்டனர். தற்போது அந்நிலத்திற்கான உரிமை கோரி, 3-ஆம், 4-ஆம் தலைமுறையினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

“1978-ல், அந்நிலம் எங்களுக்கு RM32,000 விலையில் விற்கப்பட்டது. அதன் பின்னர், இரண்டரை ஆண்டுகளில், நிலத்தோடு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தோடு, கேபிஜே-வுக்கு நில உரிமை மாற்றப்பட்டது,” என்று சுகு மலேசியாகினியிடம் கூறினார்.

சுகுமாறன் என்ற சுப்ரமணியம்

அந்த வாக்குறுதியைக் கொடுத்தது, அப்போது கேபிஜே தலைமை பொறுப்பில் இருந்த எஸ் சாமிவேலு என்றும் அவர் சொன்னார்.

அன்றிலிருந்து, தங்கள் நிலத்தில் வீடுகள் கட்டுவதில் தாமதம் குறித்து கேட்டபோதெல்லாம், கேபிஜே பல்வேறு காரணங்களைத் தெரிவித்து வந்தது என்று சுகு சொன்னார்.

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அந்நிலத்தில் 64 வீடுகள் கட்டும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக எங்களுக்குத் தெரிய வந்தது. நில உரிமையாளர்களான எங்களுடன் கலந்து பேசாமல், அந்நிலத்தில் கேபிஜே எப்படி வீட்டுத் திட்டத்தைத் தொடங்கியது?

“ஒரு வீட்டின் விலை, ஏறத்தாழ RM480,000-லிருந்து RM500,000 வரையில், இது எங்கள் தகுதிக்கு அப்பாற்பட்டது, இந்த விலையை நிர்ணயித்தது யார் என்றும் எங்களுக்குத் தெரியவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

சாமிவேலு உட்பட, கே.பி.ஜே.-உடன் பல சந்திப்புகளை நடத்திய பின்னர், கூட்டுறவு கழகம் இறுதியாக இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தது என்று சுகு கூறினார்.

“இருப்பினும், ஒரு குடும்பத்திற்கு RM35,000 மட்டுமே வழங்குவதாக அவர்கள் உறுதியளித்தபோது, நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்,” என்ற அவர், அந்தச் சலுகையை அவர்களில் சிலர் நிராகரித்ததாகச் சொன்னார்.

“இது எங்கள் நிலம், நாங்கள் பணம் செலுத்தி வாங்கினோம். 41 வருடங்களுக்குப் பிறகு, குடும்பத்திற்கு RM35,000 மட்டும் வழங்குவது நியாயமா?” என்று அவர் கேட்டார்.

சில வாக்குவாதங்களுக்குப் பிறகு, 2016, நவம்பரில் RM45,000-மும், பிறகு 2017, பிப்ரவரியில் RM50,000 வழங்கவும் கேபிஜே முன் வந்ததாக டி தேவராஜு, 70, மற்றும் அ இராமன் இருவரும் கூறினர். ஆனால், இதுவரையில் அவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இராமன்

“நிலத்தின் தற்போதைய மதிப்பிற்கு ஏற்ற விலையைக் கொடுத்தால், வாங்கிக் கொள்ள நாங்களும் தயார். ஆனால், அடிமட்ட விலையை நிர்ணயிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்று தேவராஜுவின் மகன், டி தங்கராஜா, 43, தெரிவித்தார்.

“எங்களுக்கு இப்போது வீடுகள் வேண்டாம், அவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தி வீடு வாங்க எங்களால் இயலாது, பணத்தைக் கொடுத்தால் போதும்,” என்றும் தங்கராஜா கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக, தற்போதைய ம.இ.கா. கேலாங் பாத்தா தொகுதி தலைவர் வள்ளுவனைச் சந்தித்து இதுகுறித்து கேட்டபோது, “அது கொஞ்சம் சிக்கலான விஷயம், தீர்வுகாண சிரமம்,” என்று அவர் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

தொடக்கக் காலத்தில், கேபிஜே-வில் அவர்கள் பணம் செலுத்தியபோது, முனுசாமி ம.இ.கா. கேலாங் பாத்தா கிளைத் தலைவராகவும் (தற்போது உயிருடன் இல்லை), வள்ளுவன் செயலாளராகவும் இருந்தனர் என்றும், வள்ளுவனுக்கு இந்த வீடமைப்புத் திட்டம் பற்றி தெரியும், ஆனால் அவர் எங்களுடன் ஒத்துழைக்க மறுக்கிறார் என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

ஆனால், ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும், ‘விரைவில் இந்தச் சிக்கல் தீர்க்கப்படும், பணம் கொடுக்கப்படும்’ என்று தங்களுக்குப் பல வெற்று வாக்குறுதிகளை (ம.இ.கா.வினர்) வழங்கி வருவதாக அவர்கள் மேலும் சொன்னார்கள்.

இதற்கிடையே, இது குறித்து மேலும் தகவல் பெற, தற்போது ம.இ.கா. கேலாங் பாத்தா தொகுதி தலைவராக இருக்கும் கே வள்ளுவனை மலேசியாகினி தொடர்புகொண்டது.

1978-ல், ம.இ.கா. கேலாங் பாத்தா கிளை, ரினி தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலத்தை வாங்க மட்டுமே உதவி செய்தது, மாறாக, அவர்களுக்கும் கேலாங் பாத்தா கிளைக்கும் இடையே எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை என்று வள்ளுவன் சொன்னார்.

“அவர்கள் RM18,000 மட்டுமே செலுத்தினர், மீதப் பணத்தை கேபிஜே அவர்களுக்காகச் செலுத்தியது. தற்போது வீட்டின் விலை அதிகம் என்றால், அவர்கள் அதை கேபிஜே-விடம்தான் கேட்க வேண்டும்,” என்றார் அவர்.

“இப்போதுகூட அவர்களுக்கு வீடுகள் வழங்க கேபிஜே தயாராக உள்ளது,” என்றும் அவர் சொன்னார்.

இந்த வீடமைப்புத் திட்டத்தில் பெரிய இலாபம் ஏதும் இல்லை, இருப்பினும் அவர்களுக்கு நிலத்திற்கான பணத்தை வழங்க கேபிஜே தயாராக உள்ளது. ஆனால், அதற்கு சிறிது காலம் எடுக்கும் என்ற அவர், அவ்வீடுகளில் குடியமர்வதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை, அது கிடைத்துவிட்டால் பணம் போட்டவர்களுக்கான தொகையை கேபிஜே கொடுத்துவிடும் என்றார்.

“கேபிஜே செய்த ஒரே தவறு, அந்நிலத்தில் வீடுகள் கட்டுவதற்கு முன், அவர்களிடம் கலந்துபேசி, அனுமதி வாங்காததே,” என்றும் வள்ளுவன் சொன்னார்.

பி மோகன், பி.எஸ்.எம்.

இதற்கிடையே, நேற்று காலை, முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுடன் நூசா பெஸ்தாரி காவல் நிலையம் சென்ற ஜொகூர், மலேசிய சோசலிசக் கட்சியைச் (பி.எஸ்.எம்.) சேர்ந்த பி மோகன், வாக்குறுதி அளித்தபடி அவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்காதது அநீதியானது என்றார்.

மேலும், தற்போதைய நில மதிப்பிற்கு ஏற்ப, அவர்களுக்குப் பணத்தை வழங்குவதே நியாயம் என்றும் அவர் சொன்னார்.

“நிலத்திற்காகப் பணம் போட்டவர்களில் சிலர், ஜொகூர் பி.எஸ்.எம்.-ஐத் தொடர்பு கொண்டனர். தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவுக் கழகம் அவர்களை ஏமாற்றியதாக இருக்கக்கூடாது. அத்தொழிலாளர்கள் நிலத்தில் உருவாக்கப்பட்ட வீடுகள், இன்று பணக்கார வெளி ஆட்களுக்கு விற்கப்படுகின்றன, ஆக இந்த வீடுகள் யாருக்காகக் கட்டப்பட்டன,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளி, RM480,000-க்கு வீடு வாங்குவது என்பது சாத்தியமானதா?” என்றும் அவர் கேட்டார்.

இவர்களுக்கு நியாயமான ஒரு தீர்வு கிடைக்க, ஜொகூர் பி.எஸ்.எம். இயன்ற உதவிகளை வழங்க முயற்சிக்கும் என்றும் அவர் சொன்னார்.

ஏற்கனவே, பேராக், சுங்கை சிப்புட்டில், ஏழை இந்தியர்களுக்கு வீடுகள் கட்டித்தர பேராக் மாநில அரசால் கே.பி.ஜே.-க்கு வழங்கப்பட்ட 77 ஏக்கர் நிலம், அடிப்படை வாக்குறுதிகள் மீறப்பட்டதால் தடை உத்தரவு பெற்றது குறிப்பிடத்தக்கது.