மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம்

சிங்கப்பூர் : உலகின் பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம் சிங்கப்பூரில் நேற்று திறக்கப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் பரப்பளவில் சிறிய நாடு. இடப்பற்றாக்குறை, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நீர்நிலையின் மேல், மிதக்கும் வகையிலான சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதை ‘செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரிஸ்’ என்ற நிறுவனம் அமைத்துள்ளது.

111.2 ஏக்கர் பரப்பளவு (45 கால்பந்து மைதானத்துக்கு சமம்) கொண்டது. இதில் 1.22 லட்சம் சோலார் பேனல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேனல் 25 ஆண்டு உறுதியுடன் இருக்கும். பேனல் பராமரிப்பில் ‘ட்ரோன்’ ஈடுபடுத்தப்படுகிறது. 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இத்திட்டத்தால் ஆண்டுக்கு 32 கிலோ டன், கார்பன் வெளியீடு அளவு குறையும். இது சாலையில் ஓடும் 7,000 கார்கள் வெளியிடும் கார்பனுக்கு சமம்.கட்டடம் மேல் பரப்பில் அமைக்கப்படும் சூரிய ஒளி மின்சார திட்டத்தில், மற்ற கட்டடத்தால் சில நேரம் சூரிய ஒளி மறைகிறது. ஆனால் நீர் பரப்பின் மேல் அமைக்கப்படும் திட்டத்தில் இப்பாதிப்பு இல்லை. 5 – 15 சதவீதம் கூடுதல் திறன் கிடைக்கிறது.

இத்திட்டத்தால் வன உயிரினம், நீரின் தரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிங்கப்பூரில் இதுபோல, மேலும் நான்கு மிதக்கும் சூரிய ஒளி மின்சார திட்டப்பணி நடைபெற்று வருகிறது.

dinamalar