கருப்புக் கொடி போராட்டத்தில் இணைந்த 3 ஆர்வலர்களுக்கு RM2,000 தண்டம்

நேற்று முந்தினம், கோலாலம்பூர், மெர்டேக்கா சதுக்கத்தில் நடந்த ‘ஃபிளாஷ் மோப்’-இல் பங்கேற்றதற்காக, மக்கள் ஒற்றுமை செயலகத்தின் (எஸ்.எஸ்.ஆர்.) மூன்று ஆர்வலர்களுக்கு RM2,000 தண்டம் விதிக்கப்பட்டது.

டாங் வாங்கி மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில், சுமார் மூன்று மணி நேரம் சாட்சியமளித்த பின்னர், முகமது அல்ஷாத்ரி அப்துல்லா, மொஹமட் அஸ்ரஃப் ஷரஃபி மொஹமட் அஸார் மற்றும் முகமது நூர் தௌஃபிக் அஸார் ஆகியோருக்கு தண்டம் விதிக்கப்பட்டதாக எஸ்.எஸ்.ஆர். சொன்னது.

தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல் (தொற்றுநோய்களின் உள்ளூர் பகுதிகளில் நடவடிக்கைகள்) (தேசியப் புனர்வாழ்வுத் திட்டம்) விதிமுறைகள் 2021-இன் கீழ் ஒன்றுகூடுதல் குற்றங்களுக்காக அவர்களுக்கு தண்டம் வழங்கப்பட்டது.

மொஹமட் அல்ஷாத்ரியைத் தொடர்பு கொண்டபோது அவர் அதனை உறுதிப்படுத்தினார்.

நீதிமன்றத்தில் தண்டத்தை எதிர்த்து வழக்கு பதிவு செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து தனது தரப்பு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

“காவல்துறையினரிடம் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட உடனேயே, தண்டம் வழங்கப்பட்டது சாதாரண மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் உள்ள இருதரபட்ட அணுகுமுறையைக் காட்டுகிறது என்பதையும் நாங்கள் உணர்கிறோம், அவர்களுக்குத் தண்டம் விதிக்கப்படும் முன் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

தனது தரப்பு எப்போதுமே காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கும், ஆனால் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் எஸ்ஓபி-க்களில் வேறுபாடுகள் இருக்கக்கூடாது,” என்று அவர் சொன்னார்.

“அடுத்த கட்ட நடவடிக்கையை விரைவில் அறிவிப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயைத் தீர்க்கத் தவறியதாகக் கருதப்படும் தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பதற்காக, 3 கோரிக்கைகளை முன்வைத்து அப்பேரணி நடைபெற்றது.

இதற்கிடையில், ஜனநாயகக் கூட்டணிக் கட்சி (மூடா), எஸ்ஓபி-க்களை அமல்படுத்துவதில் இருதர நடைமுறையை இந்தத் தண்டம் காட்டுகிறது என்று ஓர் அறிக்கையில் விவரித்தது.

#கெலுவார்டான்லாவான் (#KeluardanLawan) போராட்டத்தின் பங்கேற்பாளர்கள், சுகாதார எஸ்ஓபி-க்களை முறையாகப் பின்பற்றியே, தோல்வியுற்ற அரசாங்கத்தை எதிர்த்து, மக்களுக்காகப் பேசியுள்ளனர்.

“நீங்கள் எஸ்ஓபி குற்றங்களுக்காகத் தண்டிக்க விரும்பினால், அது நியாயமாகவும், மக்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் வேறுபடாமலும் இருக்கட்டும்,” என்று கூறிய மூடா, கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோர் மற்றும் மத்தியப் பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா ஆகியோருக்கு எதிராக முன்னர் எடுத்துகொண்ட கால அவகாசத்தை மேற்கோள் காட்டியது.

இதற்கிடையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தண்டம், எதிர்காலத்தில் தனது தரப்பு எதிர்ப்பு பேரணிகளை நடத்துவதைத் தடுக்காது என்று எஸ்.எஸ்.ஆர். கூறியது.

“பி.என். அரசாங்கத்திற்கு எதிரான மூன்று கோரிக்கைகளையும் நாங்கள் இன்னும் வலியுறுத்துகிறோம், அதாவது முஹைதீன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுமையாக நடைபெற வேண்டும் மற்றும் அனைவருக்கும் தானியங்கி முறையில் கடன் ஒத்திவைப்பு வழங்க வேண்டும்,” என்று அது கூறியது.

தொற்றுநோய்களுக்கு மத்தியில் கூட, சுதந்திரமாகப் பேசவும், அமைதியான பேரணிகளில் பங்கேற்கவும் மக்களுக்கு உரிமை உண்டு என்று சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) என்றத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் வலியுறுத்தியது.

கோவிட் -19 தொற்றுகள், முழு நடமாட்டக் கட்டுப்பாடுகள் மற்றும் அவசரகால அமலாக்கங்களின் போதுகூட தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுவாராம் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி தெரிவித்தார்.

அதே நேரத்தில், எதிர்ப்பு தெரிவித்து பேசுபவர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, குறிப்பாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 மற்றும் ‘போலி செய்தி சட்டம்’ (அத்தியாவசிய அதிகாரங்கள் அவசரக் கட்டளை (எண் 2) 2021) ஆகியவற்றின் மூலம்.

“இந்த அரசியல் சூழலில்தான், எஸ்.எஸ்.ஆர். ‘ஃபிளாஷ் மோப்’-ஐ ஏற்பாடு செய்தது.

“எஸ்.எஸ்.ஆர்-க்கு ஆதரவாக சுவாராம் குரல் கொடுக்கும், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டம் ஒரு வகையான மிரட்டல் ஆகும், இது பேச்சு சுதந்திரம் மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அமைதியான ஒன்றுகூடல் கொள்கைகளுக்கு எதிராக இருப்பது தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.