இனவாதமும் சமயமும் கொண்ட அரசியல் நாட்டுக்கு நல்லதா?

கி.சீலதாஸ்- நம் நாடு எந்த இலக்கை நோக்கிச் செல்கிறது என மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அரசியல் குழப்பம் நீடிப்பதைக் காணும் மக்கள் கவலையில் வெம்புகிறார்கள். இதை, “இன்றைய அரசியல் நிலையைத் தவறாகப் புரிந்துகொள்வோரின் மனநிலை” என்ற பலவீனமான சாக்குப்போக்கு சொல்வோர் ஏராளம்.

ஆனால், அதுபோன்ற குற்றச்சாட்டு எடுபடாது. இந்த நாட்டில் அம்னோ மிகுந்த செல்வாக்குடைய கட்சி என்பதை மறுப்பது தவறாகும். இன்று அரசியலை நடத்தும் பெரும்பான்மையினர், ஒரு சிலரைத் தவிர, ஒரு காலத்தில் அம்னோவில் இருந்தவர்கள். அம்னோவின் அரசியல் கலாச்சாரத்தைப் பேணி அரசியல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். அந்த அரசியல் வாழ்க்கையைக் கைவிடாமல் இன்றளவும் நடந்து கொள்கின்றனர் எனின் மிகையன்று. இந்த உண்மையை மனத்தில் கொண்டு இன்றைய நாட்டு நடப்பைக் கவனிக்கும்போது பலவித வேதனையான கேள்விகள் எழுகின்றன.

முகைதின் தலைமையிலான இன்றைய பக்கத்தான் பிரிக்கத்தான் அமைப்பு – மலாய்க்காரர்களின் முன்னணியாகவே திகழ்கிறது. அம்னோ, பாஸ் மற்றும் சில மலாய்க்கார கட்சிகள் இணைந்து மலாய்க்காரர்களின் உரிமை, இஸ்லாம் என இரண்டையும் தற்காப்பது அவர்களின் கொள்கை. இதோடு பாரம்பரிய மலாய் சுல்தான்களின் பெருமைக்கும், அதிகாரத்திற்கும் யாதொரு தீங்கும் ஏற்படக்கூடாது என்பதும் அவர்கள் வெளிப்படுத்திய கொள்கைகளில் ஒன்று. எனவே,

இந்த மூன்று கொள்கைகளையும் மலேசியாவின் எல்லா இனத்தவர்களும் – அதாவது மலாய்க்காரர் அல்லாதார் ஏற்றுக்கொண்டு, மதித்துச் செயல்படுகின்றனர் என்பது உலகம் அறிந்த உண்மை. உண்மை நிலவரம் இப்படி இருந்தும் மலாய் தேசியவாதக் கட்சிகள் ஏன் இந்த மூன்று கொள்கைகளை விளம்பரப்படுத்துவதிலும், வலியுறுத்துவதிலும் அளவற்ற கரிசனம் காட்டுகின்றனர் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் ஓர் உண்மை வெளிச்சமாகும்.

இந்த மூன்று அரசியல் கொள்கைகளும் மலாய்க்காரச் சமுதாயத்தை ஏமாற்றும் பொருட்டு மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கை எனப் பரவலாக நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட எண்ணத்திற்குக் நிறைய காரணங்கள் உண்டு. முக்கியமாக மலாய்க்காரர்கள் மலாய்க்காரர் அல்லாதவரோடு இணைந்து செயல்படத் தொடங்கினால் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கும், அரசியலுக்கும் இடமில்லாத நிலை உருவாகும்.

அப்படி நடந்தால் சந்தர்ப்பவாதிகள்தான் தோல்வி காண்பர். தொடர்ந்து, மக்களிடம் பொய்யான தகவல்களைப் பரப்பி ஏமாற்ற இயலாது. பக்கத்தான் பிரிக்கத்தானின் வெளிப்படையான அரசியல் நடவடிக்கைகள் இதனைத் தெளிவாக்குகின்றன. அதன் உள்நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது.

நாடாளுமன்றத்தில் எந்த ஒரு தனி கட்சிக்கும் அரிது பெரும்பான்மை கிடையாது. பல கட்சிகளோடு கூட்டணி அமைத்துக் கொண்டால்தான் அரசியல் அதிகாரத்தைப் பெற முடியும். பிரதமரின் புதிய கட்சியும் சரி அவரின் நட்பு கட்சிகளும் அம்னோ உட்பட, நாடாளுமன்றத்தில் தனி பெரும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. இதுவே நாடாளுமன்றம் அமர்வதை, கூடுவதை முகைதீன் விரும்பாதத்திற்குக் காரணம் என்கின்ற அரசியல் கணிப்பும் நம்பத்தக்கதே.

நாடாளுமன்றத்தில் அம்னோ சிறுபான்மை கட்சி என்றபோதிலும் அது தமக்குச் சாதகமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் கொண்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். அதே சமயத்தில் துணைப்பிரதமர் பதவி அம்னோவுக்குத்தான் தரப்பட வேண்டும் என்ற அதன் கோரிக்கை இப்பொழுது நிறைவேறிவிட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அம்னோ முகைதீனுக்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக்கொள்வதாக முடிவெடுத்து உலகெங்கும் அறிவித்துவிட்டது. ஆனால், முகைதீன் வழங்கிய அரசு பதவிகளில் இருந்து தமது உறுப்பினர்கள் நீடிப்பதும், விலகுவதும் அவர்களின் தனிப்பட்ட பொறுப்பு என்பது மலேசிய அரசியல் வரலாற்றில் இதுவரை காணப்படாத ஒரு முறையாகும்.

பல கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது ஒன்றும் புதிதல்ல. விநோதமும் அல்ல, வியப்பானதும் அல்ல. ஆனால், ஒரு கட்சியைச் சார்ந்தவருக்குக் கூட்டணி ஆட்சியில் பொறுப்பான பதவி கொடுக்கப்படுவது இயல்பே. அதே சமயத்தில், தாம் சார்ந்திருக்கும் கட்சி நட்பு கட்சிக்கு தரும் ஆதரவை மீட்டுக் கொள்கிறது எனும்போது தம் உறுப்பினர்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதே நியாயம்.

இந்த நியாயம் மலேசிய அரசியலில் பொலிவிழந்து காணப்படுவதை எவ்வாறு விளக்குவது? பதவி மோகம் யாரை விட்டது? அரசியல் விமர்சகர்களின் கவனம் எல்லாம் அதிகாரப் பகிர்வைப் பற்றித்தானே ஒழிய நியாயமான அரசியலைப் பற்றிப் பேசாமல் இருப்பது விசித்திரமே.

பதவி அரசியல் அதிகாரத்தைத் தருகிறது. அரசியல் அதிகாரம் தவறான அணுகுமுறைகளுக்கு வழிவிடும் அல்லது அவர்களின் மொழியில் சொன்னால் “இருக்கும் வாய்ப்பை விட்டுக்கொடுப்பானேன்? இழப்பானேன்?” இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தனிப்பட்டவர்களின் அரசியல் லாபத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதே அன்றி நாட்டு நலனிலும், மக்கள் நலனிலும் கரிசனம் கொண்டதைக் காட்டவில்லை.

இப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலையில் கோவிட்-19 பெருந்தொற்று நோய் சில பச்சோந்தி அரசியல்வாதிகளுக்குச் சாதகமான வழியைக் காட்டுவதாகக் கூட பேசப்படுகிறது. அநாகரிக அரசியல்வாதிகளின் மோசடித்தன அரசியலை வெளிப்படுத்துகிறது. அதாவது கோவிட்-19 மோசமடைந்தால் இப்பொழுது அரசு நிர்வாகிகள் மீது பழி விழும். அதைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்து தாம் ஆட்சிக்கு வரலாம் என்று நினைப்போர் பெருந்தொற்று நோயின் கடுமை மிகுந்தால் அது பச்சோந்திகளின் வெற்றிக்கு உதவும் என்று நினைக்கிறார்கள். இது எத்தகைய கேவலமான அரசியல் போக்கு என்பதை மக்கள் உணர வேண்டும்.

முகைதீன் உடல் நலம் குன்றிய நிலையில் இருக்கும்போது, அவர் ஆக்ககரமாகச் செயல்படும் தன்மை இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்திருப்பதும் நியாயமே. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அம்னோவின் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பது முகைதீனின் அம்னோவுடனான பழைய பந்தம் முடிந்துவிடவில்லை என்பதை உணர்த்தலாம்.

அதே வேளையில், இந்த நாட்டு அரசியலில் சொன்ன வாக்கைக் காப்பாற்றும் மரபு கிடையாது. அது ஏற்புடையதல்ல என்ற கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதாகக் கூட நினைக்கத் தோன்றும். அப்படி நினைத்தால் தவறில்லை!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? அப்பேர்பட்ட சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ கூட தமது அரசியல் வியூகம் அம்னோ அரசியல் வியூகத்தோடு ஈடுகட்ட முடியவில்லை என்பதை நினைக்கும்போது, அம்னோ, தமது அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தைக் கண்டு எல்லா இனத்தவர்களும் சுமூகமாக வாழும் மலேசியாவை நிலைநிறுத்தி பாடுபட வேண்டும்.

மலாயா சுதந்திரப் பேச்சுவார்த்தைகளின்போது அம்னோ கையாண்ட அரசியல் வியூகம், அறுபதுகளில் லீ குவான் யூவுடன் கண்ட அணுகுமுறை யாவும் எதிர்கால சுபிட்சமான மலேசியாவுக்கு உதவாது என்பது மட்டுமல்ல அதே முறையைக் கையாண்டால் நாடு பாழ்நிலைக்குக் கொண்டு செல்லப்படும்.

எனவே, இன்று நாட்டில் நிகழும் சங்கடமான சூழ்நிலை, கோவிட்-19 தொடர்ந்து தரும் தொல்லை, ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி, சமுதாயப் பிரச்சினைகள் ஆகியன கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் கவனம் செலுத்தி பொறுப்பான மனிதர்களாக, மலேசியர்களாக நடந்து கொள்ளத் தயார்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

முகைதீன் யாசின் உடல்நலக் குறைவுடன் இருப்பதால் சில மாற்றங்கள் ஏற்பட வழியுண்டு என அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர். இவர்களின் கருத்துப்படி இதுவரை முகைதீன் ஆட்சியைக் குறை கூறிய வயதுபோன துன் டாக்டர் மகாதீர் முகம்மதுடன் சமரசப் பேச்சுவார்த்தை ஆரம்பித்துவிட்டதாம். இது வதந்தி அல்ல உண்மை என்றால் நாடு மேலும் பாழ்நிலைக்குக் கொண்டு செல்லப்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மகாதீர் மீண்டும் அரசின் தலைமைத்துவத்தை ஏற்றால் மலேசியாவில் இன நல்லிணக்கம் காணப்படும் காலம் தள்ளிப்போகும் என்பது வெள்ளிடைமலை.

தொன்னூற்று ஆறு வயதை அடைந்துவிட்ட மகாதீரின் போக்கில் இனங்களிடையே ஒற்றுமையைக் காண வேண்டும் என்கின்ற நல்ல திட்டத்தைக் காண முடியவில்லை. ஒரு சாராரின் நலனில் மட்டும் கவனத்தைச் செலுத்தும் மகாதீர் பரந்த எண்ணத்துடன் எல்லா இனங்களின் நன்மைக்காக, முன்னேற்றத்திற்காக உழைப்பாரா? என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவர் மட்டும்தான் பதில் சொல்ல முடியும்.

மகாதீரை மீண்டும் அரசுக்குத் தலைமை ஏற்க விழைவோர் மற்ற நல்ல நேர்மையான, திறமையான தலைவர்கள் இருப்பதை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? எல்லோரையும் இணைத்தால் எல்லோருக்கும் பலன் கிட்டும் என்ற நல்லெண்ணத்தை அனுசரிக்க மறுப்பது ஏன்?

மலாய்க்காரர்களின் உரிமை, இஸ்லாம் சுல்தான்களின் சலுகைகள் யாவும் பாதுகாக்கப்பட்டவை, பாதுகாக்கப்படும். அம்னோவும் அதன் கூட்டாளிக் கட்சிகளும் வழிதவறி போவதை ஏற்றுக்கொள்ளாத மலாய்க்கார சமுகமே 2018ஆம் ஆண்டு அவர்களை ஆட்சிப் பீடத்தில் இருந்து நீக்கியது.

நீக்கப்பட்டவர்கள் மக்கள் புகட்டிய பாடத்தை உணராமல் நடந்து கொண்டது, நடந்து கொண்டிருப்பது எதைக் குறிக்கிறது? பூனை கண்களை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என்று நினைக்குமாம். அப்படிப்பட்ட எண்ணம், அணுகுமுறை இனிமேலும் நடக்காது என்பதை உணர்ந்தால்தான் அம்னோவுக்கு அரசியல் எதிர்காலம் உண்டு. கட்சியின் நலனை மட்டும் நினைத்து அது நடந்து கொள்ளுமாயின் ஒட்டுமொத்த மலேசியர்களும் அதைத் தொடர்ந்து நிராகரிப்பார்கள். 2018ஆம் ஆண்டு மக்கள் தந்த அடியை அது எப்பொழுதும் கவனத்தில் கொண்டிருப்பது நல்லது. இன, சமய அரசியல் குறுகிய கால நன்மையை வழங்கலாம், அதன் நிரந்தரம் கேள்விக்குறியே!