`காசாவில் நிச்சயமற்ற நிலைமை, மலேசியா திரும்புங்கள்` – எச்எம்4பி குழுவுக்கு திபிஎம் அறிவுறுத்து

தற்போது காசாவில் சூழ்நிலை நிச்சயமற்றதாக இருப்பதால், எகிப்த் கெய்ரோவில் உள்ள மனிதாபிமான மிஷன் 4 பாலஸ்தீனம் (எச்எம்4பி) குழுவை மலேசியா திரும்புமாறு துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவுறுத்தினார்.

நேற்று, பாலஸ்தீனத்திற்கான மனிதாபிமான உதவிக்குழுவுக்குத் தலைமையேற்று சென்றுள்ள, பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்னோ நலன்புரி பணியகத்தின் (பி.கே.யூ.எம்.) தலைவருமான அப்துல் அஜீஸ் அப்துல் இரஹீமுடன் நடந்த மெய்நிகர் சந்திப்பின் போது இஸ்மாயில் சப்ரி இந்த அறிவுறுத்தலை விடுத்தார்.

“நிலைமை சீராக இருந்தால், அவர்கள் மீண்டும் காசாவுக்குச் செல்லலாம். ஒவ்வொருவரும் தியாகம் செய்கிறார்கள், அந்தத் தியாகத்தில் ஒரு சோதனையும் இருக்கிறது.

“ஒவ்வொரு முயற்சியும் தியாகமும் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்புவோம்,” என்று நேற்று இரவு தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ஓர் இடுகை மூலம் தெரிவித்தார்.

கடந்த மே மாதம், இஸ்ரேலிய இராணுவத்தால் தாக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு மலேசியர்களின் ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்குப் பணம், உணவு பொருட்கள் மற்றும் மருந்து வடிவிலான மனிதாபிமான உதவிகளை வழங்க, எச்எம்4பி பணிக்குழு ஜூன் 19-ம் தேதி தொடங்கப்பட்டது.

  • பெர்னாமா