ஜி.இ.15-ஐ பி.என். ‘தவிர்க்க’ நினைக்கவில்லை – மொஹமட் அமர்

பிரதமர் முஹைதீன் யாசின் பதவி விலகுவதற்கான அழைப்பை, கிளந்தான் துணை மந்திரி பெசார் மொஹமட் அமர் நிக் அப்துல்லா நிராகரித்தார்.

தேசியக் கூட்டணி (பி.என்.) பொதுத் தேர்தல் நடத்துவதை “தவிர்க்க” முயற்சிப்பதாகக் கூறப்படுவதையும் அவர் ஆட்சேபித்தார்.

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -உடன் பேசிய அந்தப் பாஸ் பஞ்சோர் சட்டமன்ற உறுப்பினர், கோவிட் -19 தொற்று பரவல் காரணமாக, இப்போது பொதுத் தேர்தல் (ஜி.இ.) நடத்தப்படுவது பொருத்தமானதல்ல என்று தனது முந்தைய அறிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

“பிரதமரைப் பதவி விலகுமாறு வலியுறுத்துவதோ அல்லது பொதுத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதோ, நாடு கோவிட் -19 தொற்றுநோயால் பீடிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் செய்வது சரியானதல்ல,” என்று அவர் நேற்று தெரிவித்தார்.

மந்தை நோய்த்தடுப்பு 80 விழுக்காடு இலக்கை எட்டும்போது மட்டுமே, பொதுத் தேர்தலைக் கருத்தில் கொள்ள முடியும் என்று, நேற்று மொஹமட் அமர் கூறியதாக சினார் ஹரியான் மேற்கோளிட்டுள்ளது.

“பிரதமர் பொதுத் தேர்தலை நடத்த விரும்புகிறார், ஆனால் இந்தத் தொற்றுநோய் காரணமாக அரசாங்கத்தைக் கலைக்க முடியாது.

“நாம் ஒரு தேர்தலை நடத்த விரும்பினால், குறைந்தது 80 விழுக்காடு மக்கள் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்,” என்று ஜூலை 19-ம் தேதி அவர் கூறினார்.

அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆணையை மக்களிடம் ஒப்படைப்பது மிகவும் சிறந்த வழி என்றும் மொஹமட் அமர் கூறினார்.

ஜனவரி மாதம், அவசரகால நிலையை அறிவிக்கும் போது, ​​கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வரையில், அனைத்து தேர்தல்களும் ஒத்திவைக்கப்படுவதாக முஹைதீன் கூறினார்.

“அமைக்கப்படவுள்ள சுயாதீனச் சிறப்புக் குழு, கோவிட் -19 தொற்றுநோய் தணிந்துவிட்டது அல்லது அந்நோயிலிருந்து நாடு முழுமையாக மீண்டுள்ளது என்றும், தேர்தல்கள் நடைபெறுவது பாதுகாப்பானது என்றும் பரிந்துரைத்தவுடன் தேர்தல்கள் நடைபெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

“அந்த நேரத்தில், இந்த நாட்டை ஆட்சி செய்ய, நாட்டு மக்கள் நலனைக் கவனித்துக்கொள்ள எந்த அரசாங்கம் தகுதி வாய்ந்தது என்பதைத் தேர்ந்தெடுப்பது மக்கள்தான்.

“இது எனது உறுதிப்பாடு, நான் இதை நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்,” என்று அவர் அப்போது கூறினார்.

அம்னோ கூட்டணியும், எதிர்க்கட்சியான பக்காத்தான் ஹராப்பானும் முஹைதீனை பதவி விலக வலியுறுத்தி வருகின்றன.