ஷாஹிடான் : ஜி.இ.15-இல் அம்னோ வெற்றி பெற விரும்பினால், பி.என்.-உடன் ஒத்துழைக்க வேண்டும்

அடுத்தப் பொதுத் தேர்தலில், கட்சி பெருமளவில் வெற்றிபெற விரும்பினால், தேசியக் கூட்டணியுடன் (பிஎன்) பேச்சுவார்த்தைக்குக் கதவைத் திறக்குமாறு, தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவர் (பிஎன்பிபிசி) ஷாஹிடான் காசிம் அம்னோவை வலியுறுத்தினார்.

பி.என். அரசாங்கத்தின் துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அம்னோவின் ஒரு மூத்த தலைவராக இருப்பதால், பி.என்.-உடனான பேச்சுவார்த்தை அவசியம் என்று அராவ் எம்.பி.யுமான ஷாஹிடான் கூறியதாக, உத்துசான் ஆன்லைன் மேற்கோள் காட்டியது.

“தேர்தலில் தனியாக நகர்ந்தால், எந்த அரசியல் கட்சியுடனும் ஒத்துழைக்காவிட்டால், வெற்றி பெற முடியாது என்பதை அம்னோ அறியும்.

“எனவே, பி.என்.-இல் உள்ள பெர்சத்து மற்றும் பாஸ்-உடன் ஒத்துழைக்கவில்லை என்றால், நீங்கள் பி.கே.ஆர். மற்றும் டிஏபி-உடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்களா?

“தனித்து செயற்பட்டு, எதிர்க்கட்சியாக இருக்க விரும்புகிறீர்களா, அரசாங்கத்தை அமைப்பதற்கு நிச்சயமாக ஒத்துழைப்பு தேவை.

“பெரிய அளவில் வெல்ல, அம்னோ பி.என்.-உடன் இணைந்து பணியாற்ற வேண்டும், பேச்சுவார்த்தைகள் எப்போதும் செய்யப்பட வேண்டும்,” என்று ஏப்ரல் மாதம் பெர்லிஸ் அம்னோ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஷாஹிடான் கூறினார்.

அதே அறிக்கையில், அம்னோ (தேசிய முன்னணி) எம்.பி.க்கள் 42 பேரில், 37 பேர் – பெரும்பான்மையானவர்கள் – பிஎன் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாக ஷாஹிடான் கூறினார்.

அனைத்து தேசிய முன்னணி தலைவர்களையும், தேசியக் கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்ள, அம்னோ தலைவர் ஜாஹிட் ஹமிடியைச் சந்திக்க உள்ளதாக ஷாஹிடான் கூறியதாக உத்துசான் ஆன்லைன் மேற்கோளிட்டுள்ளது.

பதவி விலகுமாறு அம்னோ அழுத்தம் கொடுத்த போதிலும், பாஸ் மற்றும் சரவாக் கூட்டணி கட்சி (ஜி.பி.எஸ்.) இரண்டும், பிரதமர் முஹைதீன் யாசினுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவிர, தேசிய முன்னணியில், அம்னோவின் கூட்டாளர்களான ம.இ.கா.வும் மசீசவும் முஹைதீனுக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

அப்படியிருந்தும், அம்னோ உச்சமன்ற உறுப்பினர் மொஹமட் புவாட் சர்காஷி, மூன்று பேர் மட்டுமே அவ்வாறு செய்யத் தயாராக இருந்தாலும், கட்சியின் நிலைப்பாட்டை அம்னோ உறுதியாகப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

“அதிகாரத் தரகர்களாக” இருக்க தயாராக இருக்கும் அம்னோ தலைவர்கள் இருப்பதாக புவாட் கூறினார், தலைவரின் அனுமதி இல்லாமல், பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் கட்சியை விற்க அவர்கள் விரும்புவதாகவும் புவாட் குற்றஞ்சாட்டினார்.