ஆப்கான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் குண்டு வீச்சு – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அதிபர்

தொழுகையில் பங்கேற்ற அதிபர் அஷ்ரப் கனி

ஆப்கானிஸ்தானில் அதிபர் மாளிகையின் அருகில் ராக்கெட் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காபுல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலிபான்களுக்கு எதிரான இந்தப் போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்தது. ஆனால் தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்க அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றன.

கிட்டத்தட்ட 95 சதவீத படைகள் வெளியேறி விட்ட நிலையில், எஞ்சிய வீரர்கள் ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் வெளியேற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஓங்கியுள்ளது.‌ கடந்த சில வாரங்களாக அவர்கள் அரசுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் ராணுவம் திணறி வருகிறது.

கடந்த சில நாட்களில் மட்டும் ஆப்கானிஸ்தானில் எண்ணற்ற மாவட்டங்கள் மற்றும் அண்டை நாடுகளுடனான முக்கிய எல்லைப் பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இதற்கிடையே, பக்ரீத் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தத்தை அறிவிப்பது தொடர்பாக கத்தார் தலைநகர் தோகாவில் ஆப்கானிஸ்தான் அரசு தரப்புக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள அதிபர் மாளிகையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் அதிபர் அஷ்ரப் கனி, அரசின் 2-வது மூத்த அதிகாரியாகக் கருதப்படும் அப்துல்லா அப்துல்லா மற்றும் அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். இதையொட்டி அதிபர் மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அதிபர் அஷ்ரப் கனி

இந்நிலையில் தொழுகை நடந்துகொண்டிருந்தபோது அதிபர் மாளிகையை குறிவைத்து பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி எறிந்தனர். அடுத்தடுத்து 3 ராக்கெட் குண்டுகள் அதிபர் மாளிகையின் எல்லை சுவருக்கு அருகில் விழுந்து வெடித்துச் சிதறின. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்று தீக்கிரையானது.

அதேசமயம் அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. குறிப்பாக அதிபர் அஷ்ரப் கனி உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் அனைவரும் ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்த இடத்திலிருந்து தொலைவில் இருந்ததால் அவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிறகு அதிபர் அஷ்ரப் கனி, அதிபர் மாளிகையில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினர். அப்போது அவர் பேசியதாவது:

இன்றைய பக்ரீத் ஆப்கானிஸ்தான் படைகளின் தியாகங்களையும், தைரியத்தையும் மதிக்கும் நாள் ஆகும். தலிபான்களுக்கு அமைதிக்கான எண்ணமும் விருப்பமும் இல்லை. ஆனால் நமக்கு அமைதிக்கான நோக்கம் மற்றும் விருப்பம் உள்ளதையும், அதற்காக நாம் தியாகம் செய்துள்ளோம் என்பதையும் நாம் நிரூபித்துள்ளோம். சமாதான பேச்சுவார்த்தைகளை தொடங்க 5,000 தலிபான் கைதிகளை நாம் விடுவித்தோம். ஆனால் இன்றுவரை தலிபான்கள் சமாதான பேச்சுவார்த்தையில் தீவிரமான அல்லது அர்த்தமுள்ள அக்கறை காட்டவில்லை என தெரிவித்தார்.

dailythanthi