பல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு தேவையா மேல்சபை

மீண்டும் மேல்சபை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், உ.பி., தெலுங்கானாவில் மட்டுமே மேல்சபைகள் உள்ளன. 1861ல் சென்னை ராஜதானியில் மேல்சபை உருவாக்கப்பட்டது.

1935ல் சென்னை ராஜதானியில் சட்டப்பேரவை,சட்ட மேல்சபை நிரந்தரமாக அமைக்கப்பட்டன. 1986 வரை மேல்சபை இயங்கியது. எம்.ஜி.ஆர்., ஆட்சியில் சட்டத்திருத்தம் மூலம் 1986 நவ.,1 முதல் மேல்சபை ஒழிக்கப்பட்டது. வயது முதிர்ந்த அனுபவமிக்கவர்கள், அறிஞர்கள், நியமன உறுப்பினர்கள் இடம்பெறும் மேல்சபையானதுஎம்.எல்.ஏ.,க்களுக்கு வழிகாட்ட, அரசுக்கு அறிவுரை கூற அமைக்கப்பட்டது அந்த காலம். இப்போது தோல்வி பெற்ற தி.மு.க.,வினருக்கும்,

தி.மு.க., துதிபாடும் கவிஞர்கள், கலை உலகத்தினருக்கும் புறவாசல் வழி பதவி தரவே மேல்சபை அமையப்போகிறது.

50 மேல்சபை உறுப்பினர்களுக்கு (எம்.எல்.சி.,) சம்பளம், 50 அலுவலகங்கள், 50 செயலாளர்கள், உதவியாளர்கள், நேர்முக உதவியாளர்கள், பியூன்கள், டிரைவர்கள், 150 போலீசார், கார்கள், தங்க விடுதி என செலவு எவ்வளவு. எம்.எல்.ஏ.,க்களுக்கு இணையாக அதிகார மையங்களாக எம்.எல்.சி.,க்கள்,சட்டசபை சபாநாயகர் போல மேல்சபை தலைவர் என பெரும் நிர்வாக குழப்பம் ஏற்படும். பல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு இந்த நிதிச்சுமை தேவையா. பல தரப்பினரும் மேல்சபைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறியது:

மக்கள் வரிப்பணம் வீண்

செல்லுார் ராஜூ, முன்னாள் அமைச்சர், மதுரை:

ஒரு சபை இருக்கும்போது இன்னொரு சபை தேவை இல்லை. சட்டசபை மூலமாக தேவையான கருத்துகள் பரிமாறும்போது, மேல்சபை தேவை இல்லை என்று கருதியே எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அதை ஏற்கவில்லை. தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டது என்பதற்காக நிறைவேற்றினால் அது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல். சட்டசபையில் நிறைவேற்றும் தீர்மானங்களையே செயல்படுத்த அரசு யோசிக்கும்போது, மேல்சபை அமைத்து அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் ஒன்றும் ஆகப்போவதில்லை. கருணாநிதி முதல்வராக இருந்தபோதே அதை கொண்டு வர ஆர்வம் காட்டவில்லை. ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களையும், அனுதாபிகளையும் திருப்திப்படுத்த மேல்சபை கொண்டு வரமுயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. இப்போதைய சூழலில் மேல்சபை தேவையில்லாத ஒன்று.

சண்டைக்கு ஒரு சபையா

எஸ்.வி.பதி, சென்ஸ் சுற்றுசூழல் தொண்டு நிறுவனர், மதுரை:

சட்டசபையில் தோற்றவர்களை மேல்சபைக்கு கொண்டு வருவது, கட்சிக்காரர்களுக்கு முன்னுரிமை தருவது போன்ற நியமனங்கள் மேல்சபையில் வம்பை வளர்க்கும். சட்டசபையிலேயே பாதி நேரம் ஒத்திவைப்பு நடைபெறும் போது மேல்சபை வந்தால் சண்டையிலேயே முடியும். எந்த சட்டமும் நிறைவேற்ற முடியாது. எந்த உதவியும் பாமர மக்களுக்கு கிடைக்காது. தப்பான கருத்துக்களை மேல்சபையில் தீர்மானமாக இயற்றினால் யாரும் தடுக்க முடியாது. சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை மேல்சபையில் தீர்மானமாக நிறைவேற்றினால் பசுமை தீர்ப்பாயத்தால் தடுத்து நிறுத்தமுடியாது. இது பெரும்பாதிப்பில் முடியும்.

ஆட்டுக்கு தாடி போல இதுவும் தேவையில்லை

ஆர்.கே.ஜெயபாலன், மாவட்ட செயலாளர், அ.தி.மு.க., தகவல்தொழில்நுட்ப பிரிவு, மதுரை:

‘ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னர் பதவியும் தேவையில்லை’ என தி.மு.க.,வினர் சொல்வர். ரப்பர் ஸ்டாம்ப் போல மேல்சபை நியமன பதவிகளும் தேவையில்லை தான். இவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. தி.மு.க.,வினர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மேல்சபை வருவதை ஆதரிக்கின்றனர். கருணாநிதியால் முடியவில்லை. அடுத்து ஸ்டாலின் ஆரம்பிக்கிறார். இது வெறும் அலங்கார பதவி, கட்சிக்காரர்களுக்காக கொடுக்கப்படுகிறது. அறிவாளிகள், திறமையானவர்களை அவர்கள் சார்ந்த துறை, பல்கலைகள் மூலம் பதவிகள் கொடுத்து கவுரவிக்கலாமே. அது போன்ற பதவியிலேயே அரசியல்வாதிகளை நியமிக்கும் தி.மு.க., மேல்சபையில் எப்படிப்பட்ட உறுப்பினர்களை நியமிக்கும். நாட்டுக்கு தேவையானதை நிறைவேற்ற சட்டசபை உள்ளது. அதன் மூலம் முடிவுகளை எடுத்தால் போதும்.

கட்சியினரை திருப்திப்படுத்தவா

வி.பி.துரைச்சாமி, முன்னாள் துணை சபாநாயகர், சென்னை:

தமிழகம் ரூ.6 லட்சம் கோடி கடனில் இருப்பதாக எதிர்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதற்கு வட்டி கட்ட முடியாத நிலையிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். எனவே தமிழக அரசுக்கு ஏற்படும் செலவுகளை குறைக்க வழிவகைகளை எடுக்க வேண்டுமே ஒழிய மேல்சபையை கொண்டு வருவதால் என்ன பயன் கிடைக்க போகிறது. சிக்கன நடவடிக்கைகளை தி.மு.க., அரசு எடுக்க வேண்டும். தற்போது தி.மு.க.,விலுள்ள 125 எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பான்மையினர் உதயநிதி எம்.எல்.ஏ.,வால் தேர்வு செய்யப்பட்டவர்கள். கட்சிக்கு உழைத்தவர்கள், சொத்துக்களை இழந்தவர்கள் தி.மு.க.,வில் உள்ளனர். அவர்களுக்கு வாரியம், கட்சி பொறுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சமாதானப்படுத்தி வருகிறார். இதுபோன்ற கட்சியினரை திருப்திப்படுத்த தான் மேல்சபையை முதல்வர் கொண்டு வருகிறார் என எண்ணத்தோன்றுகிறது.

யாரையோ திருப்திப்படுத்தவே மேல்சபை

டாக்டர் பி.சரவணன், திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ.,: கருணாநிதி பலமுறை முயன்றும் கொண்டு வர முடியவில்லை. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை நிறைவேற்றுகிறோம் என முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார் என்றால் அந்த அறிக்கையில்

நிறைவேற்ற வேண்டிய முக்கியமான அறிவிப்புகள் உள்ளன. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம், நகை கடன் தள்ளுபடி, பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 விலை குறைப்பு போன்ற

அறிவிப்புகளை செயல்படுத்தலாம். மக்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய எத்தனையோ திட்டங்கள் நிலுவையில் உள்ள போது, மேல் சபையை கொண்டு வருவது அவசியமற்றது.

கட்சியினரை திருப்திப்படுத்தவே இந்த முடிவு என கூறினாலும் யாரையோ திருப்பதி படுத்தவே மேல்சபையை தி.மு.க., கொண்டு வருவதாக கருத தோன்றுகிறது.

மக்களுக்கு பலன் இல்லை

கே.பிரவீணா,பொருளியல்பேராசிரியர், மதுரை:

தமிழக அரசு மேல் சபை திட்டம் கொண்டு வந்தால் அதில் அரசு தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் தான் இருப்பார்களே தவிர மக்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். தற்போது தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் நேரடியாக நடைமுறைக்கு வந்து விடுகிறது. மேல் சபை அமைந்தால் அரசின் திட்டங்களுக்கு சபையிடம் அனுமதி கோர வேண்டும். அதில் உள்ள ஆளும் மற்றும் எதிர் கட்சியினர்அரசின் திட்டங்கள் குறித்து ஆதரவும், எதிர்ப்பும்தெரிவிப்பர். இதனால் அந்த திட்டங்கள் நடைமுறைக்கு வருவதில் காலதாமதமாகும். அரசிற்கு வீண் செலவு. எனவே தமிழகத்திற்கு மேல் சபை வேண்டாம்.

அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும்

எஸ்.ஸ்ரீனிவாசராகவன், வழக்கறிஞர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை:

ஒரு மாநிலத்தில் சட்ட மேல்சபை இல்லாமல் சட்டசபை இருக்க முடியும். இதிலிருந்து சட்டமேல்சபை அவசியமான ஒன்றல்ல என புரிந்துகொள்ள முடியும். அரசியல் கட்சிகள் விரும்பும் அறிஞர்கள், அனுபவம் வாய்ந்தவர்களை சட்டசபை தேர்தலில் நிறுத்த முடியும். மேல்சபையால் அரசுக்கு தேவையில்லாத நிதிச்சுமை ஏற்படும். மக்களின் வரிப்பணம் வீணாகும்.

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும்

எம்.இ.இளங்கோ, வழக்கறிஞர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை:

இது ஒரு நீர்த்துப்போன விவகாரம். தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பின்வாசல் வழியாக மேல்சபையில் பதவி கொடுத்து அலங்கரிக்க வழிவகுக்கும். இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் தேவையற்ற வேலை. மாநிலத்தில் தீர்க்கப்படாத, உடனடியாக தீர்வுகாண வேண்டிய பிரச்னைகள் உள்ளன. அவற்றிற்கு முன்னுரிமை அளிக்காமல் புறந்தள்ளிவிட்டு மேல்சபை அமைப்பது தேவையற்றது. நிதி சம்பந்தமான சட்ட மசோதாக்களை மேல்சபையில் நிறைவேற்ற முடியாது. மேல்சபை அதிகாரங்கள் மிகக்குறுகியது. மேல்சபையால் அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமை ஏற்படும்.

பொருளாதார சுமை

கதலி நரசிங்க பெருமாள், பேராசிரியர், மதுரை: மேல்சபையில் ஆளும் கட்சி மற்றும் அவர்களின் ஆதரவானர்கள் உறுப்பினர்களாக கடந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இதனால் இந்த சபை இன்னொரு அரசியல் சபை ஆகவே மாறிவிட்டது. குறிப்பாக திராவிட கட்சி ஆட்சிக்கு வந்த பின் அறிவுஜீவிகள் தேர்ந்தெடுக்கப்படுவது தவிர்த்து அரசியல் பின்னணியில் திறமையற்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தனது கட்சிக்கு ஆதரவாக உள்ளவர்களுக்கு ஏதாவது அரசு பதவி வழங்க வேண்டும் என்பதற்காக இந்த சபையை பயன்படுத்தினர். தற்போது பல்கலைகளில் செனட் மற்றும் சிண்டிகேட் சபையில் அரசியல் ரீதியான நியமனங்கள்

நடைபெற்றதால் வளர்ச்சி பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன. அதுபோன்ற நிலை மீண்டும் மேல்சபைக்Italicகு வந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. குழப்பத்துக்கு தான் வழி வகுக்கும்; வளர்ச்சி இருக்காது.

பணம் சம்பாதிக்க சபை

முத்துக்குமார், வழக்கறிஞர், மதுரை: ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கு பதவி மற்றும் பணம் சம்பாதிப்பதற்காகவே மேல்சபை பயன்படும் வகையில் அமையும். அரசியலுக்கு அப்பாற்பட்டு

உண்மையிலே சமுதாயத்தில் உள்ள திறமையானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது ஆயிரம் கேள்விகள்.

நல்லவர்களை அறிவுஜீவிகளை திறமையானவர்களை மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதற்காக மேல்சபை கொண்டுவரப்பட்டால் அதை வரவேற்கலாம். மாறாக குறுக்கு வழியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்களை வாங்குவது போல இப்பதவிகளையும் பிடிக்க ஆளும்கட்சியினருக்கு இடையே போட்டி நிலவும். இச்சபை அமைப்பதால் பொது மக்களுக்கு எவ்வகையிலும் பயன் இல்லை. இச்சூழலில் மாநில வளர்ச்சிக்கும் எந்த வகையிலும் உதவிடாது.

தேவையில்லாத வேலை

–பி.செல்லபாண்டியன், அ.தி.மு.க., மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்,

நிலக்கோட்டை: கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் பின்தங்கியுள்ளது. இந்த நேரத்தில் மேல் சபை அமைப்பதால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். கட்சி மூத்த தலைவர்கள், முக்கியஸ்தர்களை திருப்திப்படுத்த வேறு வழிகள் உள்ளன. மேல்சபை அமைத்து மக்கள்வரி பணத்தை வீணடிக்க வேண்டாம். மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதை தவிர்த்து மேல்-சபை அமைப்பது தேவையில்லாத வேலை.

நிபுணர்களிடம் கேளுங்கள்

ஆர். தமிழ்செல்வி, சமூக ஆர்வலர், தேனி:

இருக்கிற எம்.எல்.ஏ.,க்களை கொண்டு திறம்பட ஆளும் கட்சிகள் அரசு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது வீண் செலவாக, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாக மேல்சபை உருவாக்கும் திட்டம் தேவையில்லை. அரசியல் பிரதிநிதிகளுக்கு கூடுதல் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி, திறமையாக ஆட்சியை வழிநடத்த முடியாத சூழல் ஏற்படும்.

கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் பார்க்காமல், இதில் உள்ள பாதிப்புக்களை நிபுணர்களிடம் கேட்டு முடிவுகளை எடுப்பது தற்போதைய நிதி நெருக்கடியான காலகட்டத்தில் கைகொடுக்கும் செயலாகும்.

எம்.எல்.ஏ.,க்களின் மதிப்பு குறையும்

ஆர்.ஜான்சி, வழக்கறிஞர், போடி:

மேல் சபை உருவாகும் போது சட்டசபையில் தாக்கலான சட்ட மசோதா, களப்பணியில் அனுபவம் இல்லாத, நியமன பிரதிநிதிகளின் ஒப்புதலுக்கு சென்று அது தோல்வி அடையும் போது நல்ல செயல்திட்டங்கள் நடைமுறைக்கு வராது. இதனால் மக்கள் மத்தியில் எம்.எல்.ஏ.,க்களின் மதிப்பு குறையும். இது அரசியல் ரீதியான தாக்கத்தைஉருவாக்கும். ஆந்திராவில் ரூ.700 கோடி நிதி வீண் செலவாகிறது என்பதற்காகத்தான் அங்கு மேல் சபை கலைக்கப்பட்டுள்ளது. இங்கு மேல் சபை உருவாக்குவது என்பது வீண் செலவினங்களை உருவாக்கும் திட்டம்.

மக்கள் ஏற்க மாட்டார்கள்

எம்.முருகன், முன்னாள் எம்.எல்.ஏ., முதுகுளத்துார்:

மேல்சபை தேவையற்றது. எம்.ஜி.ஆர்., இதனை ஏற்கவில்லை. அவர் வழியில் முதல்வரான ஜெ., இதற்கு அனுமதி அளிக்கவில்லை. மேல்சபை தமிழகத்தில் ஒழிக்கப்பட்டது. எவ்வளவோ மக்கள் நலன் சார்ந்த பணிகள் இருக்கும் போது இதில் தி.மு.க., அரசு ஈடுபடுவதை மக்கள்

மட்டுமின்றி பொறுப்புள்ள எந்த குடிமகன்களும் ஏற்க மாட்டார்கள்.

சுய லாபத்திற்காக மேல்சபை

குரு.முருகானந்தம், வழக்கறிஞர், மானாமதுரை: கடன் சுமையில் தள்ளாடும் தமிழக அரசுக்கு மேல்சபை கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தும். எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்தில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தவே மேலவையை கலைத்தார். அ.தி.மு.க., செய்ததற்கு எதிராக செயல்படுவதற்காக சட்ட மேலவையை தொடங்க தி.மு.க., அரசு முன் வந்துள்ளது. தி.மு.க., தனது ஓட்டு வங்கியை தக்க வைக்கவும், கட்சியில் உள்ளவர்களை திருப்திபடுத்தும் சுயநலத்துடன் சட்ட மேலவையை கொண்டு வர முயற்சிக்கிறது. இந்தியாவில் பெரும்பான்மை மாநிலங்களில் சட்டமேலவை ஒழிக்கப்பட்டுள்ளது.

துதி பாடுபவர்களுக்கு பதவி

எஸ்.கன்னையா, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, சிங்கம்புணரி:

தி.மு.க., குடும்ப உறுப்பினர்களையும், அவர்களுக்கு வேண்டிய பிரமுகர்களையும், அக்கட்சிக்கு துதி பாடுபவர்களையும் பதவியில் அமரவைக்க மேல்சபை ஏற்படுத்தப்பட உள்ளது. கடும் நிதி நெருக்கடி, கடன் சுமையில் தமிழகம் சிக்கித்தவிக்கும் போது, மேல் சபையை உருவாக்கினால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். உறுப்பினர்களுக்கு சலுகை என நீண்ட கால செலவினங்களை ஏற்படுத்தி விடும்.

மூன்றாவது முயற்சியும் சந்தேகமே

டி.ஜெயச்சந்திரகாந்தி, அரசியல் ஆர்வலர், விருதுநகர்: மூன்றாவது முறையாக மேல்சபை அமைக்க தி.மு.க., அரசு முனைப்பு காட்டி வருகிறது. இம்முயற்சியிலும் அமைவது சந்தேகம் தான். கூடுதல் அதிகார பொறுப்புகள் கிடைத்தால் போதும் என அ.தி.மு.க.,வில் சிலர் அமைதி காக்கின்றனர். இன்னொரு தரப்போ எதிர்க்கின்றனர். மேல்சபை வந்தால் தீர்மானங்கள் நிறைவேறுவதில் இழுபறி நீடிக்கும். மக்களுக்கு தேவையான சட்டங்கள் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும்.

dinamalar