லிபியா கடலில் படகு கவிழ்ந்தது; 57 அகதிகள் உயிரிழப்பு

கெய்ரோ: லிபியாவில் கடலில் படகு கவிழ்ந்ததில் அகதிகள் 57 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபா மிஷெலி தெரிவித்து உள்ளதாவது:

ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் படகுகளில் செல்லும்போது மத்தியதரைக் கடலில் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது. லிபியாவிலிருந்து அண்மைக்காலமாக இவ்வாறு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் இவ்வாறு சென்ற 7,000க்கும் அதிகமானோர் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு லிபியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு திரும்ப அனுப்பப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் லிபியாவின் மேற்கு கடலோர நகரமான கும்சியிலிருந்து படகு ஒன்று கடந்த 25ம் தேதி புறப்பட்டு உள்ளது. அதில் அகதிகள் 75 பேர் இருந்துள்ளனர். நடுக்கடலில் அந்தப் படகு நேற்று கவிழ்ந்ததில் ஏறக்குறைய 57 பேர் உயிரிழந்தனர். படகில் இருந்த ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 18 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

dinamalar