கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம்… அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தேர்தலின் போது உறுதி அளித்தபடி திமுக பல அறிவிப்புகளை செயல்படுத்தவில்லை என்று அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் திமுகவை கண்டித்து அதிமுகவினர் தங்கள் வீடுகளுக்கு வெளியே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான  ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டனர். கொரோனா விதிகளின்படி தொண்டர்கள் கூட்டம் கூடாமல் அவரவர் வீட்டு வாசலிலேயே முழக்கமிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன்படி நேற்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.கவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதனிடையே பொள்ளாச்சியில் அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கொரோனா விதிமுறைகளை மீறியதாக அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 37 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

கொரோனோ ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உட்பட அதிமுகவினர் மீது பொள்ளாச்சி காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்துள்ளர்.

(நன்றி NEWS 18)