#லாவான் : 10 மணி நேர விசாரணைக்குப் பின்னர் சாரா விடுவிக்கப்பட்டார்

ஆர்வலர் சாரா இர்டினா முகமது ஆரிஃப், தேசத்துரோகம் மற்றும் வலைத்தள வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியதற்காக, 10 மணி நேரம் விசாரிக்கப்பட்ட பின்னர், இன்று அதிகாலை 1 மணியளவில் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

#லாவான் இயக்கம் பற்றி, சோலிடாரிட்டி மிஷன் இளைஞர் குழுவின் சமூக ஊடக இடுகை தொடர்பாக, சாரா, 20, கைது செய்யப்பட்டார்.

இந்த விஷயத்தை அவரது வழக்கறிஞர் கோ சியா யீ கீச்சகம் மூலம் தெரிவித்தார்.

“சாரா இப்போதுதான் விடுவிக்கப்பட்டுள்ளார். நான் அவருடன் இன்று (நேற்று) காவல் நிலையத்தில் இருந்தேன்.

“அவரைப் போலீசார் விசாரிப்பது இதுவே முதல் முறை என்பதால், நான் அவரை அமைதிப்படுத்த முயற்சி செய்தேன்.

“அவரும் அவரது நண்பர்களுக்கும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை நான் மதிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

கீச்சகத்தில் #FreeSarah (#ஃப்ரீசாரா) என்ற ஹேஷ்டேக்குடன், ஜின்ஞாங் தடுப்புக் காவல்நிலையத்தில், மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவு நடத்திய ஆதரவு ஒன்றுகூடலில், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோவும் கலந்துகொண்டார்.

நேற்று, புக்கிட் அமான் வழக்கு மற்றும் சட்டப் பிரிவின் (டி5) அதிகாரிகள் டாங் வாங்கி மாவட்டக் காவல் நிலையத்தில், 1948-ஆம் ஆண்டு, தேசத் துரோகச் சட்டம் பிரிவு 4 (1) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233-இன் கீழ், சாராவை விசாரித்த பின்னர் தடுத்து வைத்தனர்.