“தலைமையின் போக்கு ஏமாற்றமளிக்கிறது”

உங்கள் கருத்து: “இதுதான் ஒரு பக்காத்தான் கட்சியின் லட்சணம் என்றால் மக்கள் விரைவிலேயே ஏமாற்றம் அடைவர். அறைக்குள் விவாதிக்கப்பட வேண்டியதை அம்பலத்துக்குக் கொண்டுவர வேண்டாம்.”

“கோட்ஃபாதர்” என்று  கூறியதற்காக ராமசாமி பதவி விலகத் தயார்

கவனிப்பாளன்: கர்பால் மற்றும் டிஏபி-இன் செயல்களுக்கும் அம்னோபுத்ராக்களின் செயல்களுக்கும் வேறுபாடில்லை. அவர்கள் எந்தச் சட்டத்தையும் விதியையும் மீறலாம். நடவடிக்கை எடுக்கப்படாது.

அம்னோபுத்ராக்களைக் கவனித்து வந்திருப்பவர்கள் ஒன்றைத் தெளிவாக உணர்ந்திருப்பார்கள். ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒருவரைப் பிடிக்கவில்லை, விலக்க வேண்டும் என்றால் யாராவது ஒரு அல்லக்கையைக் கொண்டு புகார் செய்யச் சொல்வார்கள்.

பின்னர், பிடிக்காமல் போன அந்நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை வாரியத்தின்மூலம் நடவடிக்கை என்ற பெயரில்  ஒரு நாடகம் நடத்துவார்கள். பிடிக்காத நபருக்கு எதிராக அநியாயமான தீர்ப்புச் சொல்லப்படும்.

இங்கு, முதலில் பகடி பேசியதே டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங்தான். அதன்படி பார்த்தால் பினாங்கு டிஏபி துணைத் தலைவர் பி.ராமசாமியைக் காட்டிலும் அவர்தான் பெரிய குற்றவாளி ஆவார். ஆனால், ஒழுங்குக் குழுவால் விசாரிக்கப்படப்போவது ராமசாமி மட்டுமே.

இதைப் பார்க்கையில் நியாயம், நேர்மை என்ற விசயத்தில் அம்னோவுக்கும் டிஏபிக்கும் அதிக வேறுபாடில்லை.

மலேசிய வம்சாவளி: ராமசாமி ஏதாவது சொல்வதாக இருந்தால் அதைத் தெளிவாக சொல்லிட வேண்டும். ஒன்றைச் சொல்வது, பிறகு அதற்கு விளக்கம் அளிக்கும் வேலை எல்லாம், ஏன்?

சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருப்பதுபோல் டிஏபி உயர்த்தலைவர்கள்- ராமசாமியையும் சேர்த்தே- தங்களுக்குள் பேசி கருத்துவேறுபாடுகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம்.பொதுவில் வைத்து விவாதித்திருக்க வேண்டாம்.

நீங்களும் உங்கள் கட்சியும் உருப்படியான மாற்றங்களை உண்டாக்கப் போகின்றவர்கள், நல்ல முன்மாதிரிகள் என்று  நினைத்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள், இப்படி நடந்துகொள்வது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

பென் காசி: இதுதான் ஒரு பக்காத்தான் கட்சியின் லட்சணம் என்றால் மக்கள் விரைவிலேயே ஏமாற்றம் அடைவர். அறைக்குள் விவாதிக்கப்பட வேண்டியதை அம்பலத்துக்குக் கொண்டுவர வேண்டாம்.

சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. இப்படித்தான் 13வது பொதுத் தேர்தலைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறீர்களா? புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவது உங்கள் நோக்கமென்றால் உங்களிடையே ஒற்றுமை வலுப்பட வேண்டும்.

புரோ: இங்கு இனப் பிரச்னை இல்லை.  இருவருமே இந்திய மலேசியர்கள். இது ஒழுக்கம், நடைமுறை சம்பந்தப்பட்ட விவகாரம்.

வேட்பாளர்கள் பற்றி அறிவிக்க அதிகாரமில்லா சிறு தலைவர்கள், அதிகாரத்தைமீறி செயல்பட்டால் கர்பால் என்ன செய்வார்?

முதலில், ராமசாமி தேர்தல் வேட்பாளர்கள்  பற்றி தமிழ் நாளேட்டிடம் பேசியது உண்மைதானா? அப்படிப் பேசியிருந்தால் அது அதிகாரத்துக்குக் கீழ்ப்படியாமல் திமிராக நடந்துகொண்டதாகத்தான் அர்த்தப்படும். அதுதான் ‘கோட்பாதர்’ மனப்போக்கு.

அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை  எடுக்காவிட்டால், கட்சி உள்ளுக்குக்குள்ளேயே குழம்பிச் சீர்குலைந்து போகும்.ராமசாமி, கட்சி நடைமுறைகளையும் ஒழுங்கையும் மீறியிருந்தால் கெளரவமாக பதவி விலகுவதுதான் நல்லது.

கூ பூன் கியாட்: ராமசாமியின் பணியில் சீனர்கள் பலர் திருப்தி அடைகின்றனர். அவர் படித்தவர். எங்கள் பிரச்னைகள் பலவற்றைத் தீர்த்து வைத்திருப்பவர். அவர்மீது நடவடிக்கை என்றால், அவரை ‘கோட்பாதர்’ என்று பகடி பண்ணிய கர்பால்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்பால் அந்த இடத்தில் இருப்பதற்கு யார் காரணம் என்பதை மறக்கலாகாது.அவர் ஜனநாயகப் போக்குடன் நடந்துகொள்ள வேண்டும். முன்னாள் மஇகா தலைவர் ச.சாமிவேலுபோல் நடந்துகொள்ளக்  கூடாது.

கட்டுப்பாடின்றி அதையும் இதையும் பேசி பினாங்கை இழந்து விடாதீர்கள்.

ஈப்போ2: ராமாவும் கர்பாலும் சிறுபிள்ளைகள்போல் நடந்துகொள்ளக்கூடாது. விவகாரத்தை உங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பலத்தையோ, கட்சிக்கு நீங்கள் இன்றியமையாதவர் என்பதையோ காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. கடைசியில், உங்களுக்கு ஒன்றும்  ஆகாது. டிஏபி-தான் பாதிப்புறும்.

உண்மை மலேசியன்: 2008-க்குமுன் டிஏபி  அதிகாரத்தை அனுபவித்ததே இல்லை.அதில் ஜனநாயகம் என்பது அதன் பெயரில் மட்டுமே உள்ளது.

லிம் கிட் சியாங், கர்பால் சிங் ஆகியோர்தான் அதிகாரத் தளங்களாக இருந்து டிஏபியில்  சர்வாதிகாரம் செலுத்தி வருகிறார்கள். டிஏபி-இல் மத்திய செயல்குழுவுக்கு 25 பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அச்செயல்குழு, தலைவர், தலைமைச் செயலாளர் போன்றோரைத் தேர்ந்தெடுக்கிறது.

அதன்பின்னர் மேலும் பதின்மர் செயல்குழுவுக்கு நியமனம் பெறுகின்றனர். கடந்த முறை கட்சித் தேர்தலில் ஜெஃப் ஊயும் மேலும் சிலரும் தோல்வி அடைந்தனர் ஆனால் செயல்குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டனர்.

சரவாக்காரன்: கர்பால் சிங்கின் அரசியல் நிலப்பாட்டுக்காகவும் அவரது தியாகங்களுக்காகவும் மதிக்கிறோம். ஆனால், சில நேரங்களில் அவரே மிகுந்த தொல்லையாகவும் விளங்குவதுண்டு.

டிஏபியில் தங்களை முக்கியமான தலைவர்களாக நினைத்துக்கொண்டு செயல்படுவோர் பலர் உண்டு. அதிகாரம் அவர்களின் தலைக்கேறி விடுகிறது.

TAGS: