கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்குங்கள் – கவிதா கருணாநிதி

தற்போது கொரோனா தடுப்பூசி அனைவரும் போட வேண்டும் என்ற அரசாங்க ஆலோசனையின் கீழ் நம்மில் பெரும்பாலோர் இந்தத் தடுப்பூசியைப் போட வரிசையில் நிற்கிறோம். இருப்பினும் ஒரு தரப்பினர், இந்தத் தடுப்பூசியைப் போட மறுக்கின்றனர். இது ஒவ்வொருவரின் மனநிலையைச் சாற்றிய ஒன்றாகக் கருதினாலும், எது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது என ஆய்வு செய்வது அவசியமாகிறது.

கட்டாயப்படுத்துதல் தனி மனித உரிமைக்குப் புறம்பானது என்பது உண்மைதான். இருப்பினும் அது உரிமை அத்து மீறலாக மாறாமல் இருக்க வழி உள்ளதா என்பதைச் சற்றுப் பார்ப்போம்.

1970 -ஆம் ஆண்டில்தான் முதன்முதலில்  வாகனத்தில் ஏறியவுடன் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டது.  இச்சட்டம் தனிநபரின் சுதந்திரத்தை மீறுவதாகக் கருதப்பட்டாலும் பல உயிர்களைக் காப்பாற்றியதால்  மக்கள் இச்சட்டத்தை ஏற்றுக் கொண்டனர். இப்போது உலகின் பெரும்பகுதியில் இதே போன்ற சட்டம் அமுலாக்கம் கண்டுள்ளது.

ஆனால், தற்போது கொரோனா தடுப்பூசியை எதிர்க்கும் உரிமை  போராட்டத்தை நம்மால் காண முடிகிறது.

தற்போது டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்க  ஒலிம்பிக் வில்வித்தை குழு உறுப்பினர், பிராடி எலிசன்கொரோனா தடுப்பூசி  போடாதது நூறு சதவிதம் தன்னுடமை சுய உரிமையை அடிப்படையாகக் கொண்டது என்கிறார். இதற்கு மாறாகச் சொல்பவர்கள் மற்றவர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு ஒப்பாகும் என்று வலியுறுத்தினார்.

சீட் பெல்ட் அணிய வேண்டும் என்கிற சட்டம் ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தை மீறுவதாக இருந்தாலும்  அது வாகனத்தில் பயணம் செய்பவர்களின் நன்மைக்காகக் கட்டாயப்படுத்தப்பட்டது. அது போலவே  தடுப்பூசி போடும் சட்டம் மற்றவர்களின் நலனுக்காகவும் என்பதால் அதையும் கண்டிப்பாகக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

பிரபலத் தத்துவ மேதை ஜோன் ஸ்டுவர்ட் இந்நிலைப்பாட்டை இப்படி விளக்குகிறார்.

நடைமுறையில், ஒரு தனிப்பட்ட நபர் பிறருக்குத் தீங்கு விளைவிக்க நேர்ந்தால், அந்நபரின் மேல் அதிகாரமுள்ள சட்டம் பாயும். அவருக்குத் தண்டனை வழங்கப்படும்.

ஆனால், சீட் பெல்ட் அணியும் சட்டம் இக்கோட்பாட்டிற்கு மாறாக அமைந்துள்ளது நம்மால் பார்க்க இயலும். காரணம் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால், அதனால் யாருக்கும் தீங்கு விளைவித்தாகக் கருத இயலாது காரணம் அப்படி ஒரு தீங்கு நடைபெறவில்லை.

ஆனால், மக்கள் அதைப் பின்பற்றுகின்றனர். அதற்குக் காரணம், விழிப்புணர்ச்சி உருவாக்கம்தான்.

ஒவ்வொரு முறையும் நாம் வாகனத்தில் ஏறியவுடன் நாம் சீட் பெல்ட் அணிகிறோம். அணியாவிட்டால், விபத்து நடைபெறும் போது கார் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் அதில் பயணம் செய்பவர்களும்  காயமடைய வாய்ப்புள்ளது.  நாம் சில வேளைகளில் அதைக் கடைபிடிக்கத் தவறி விடுகிறோம். அதனால் ஏற்படும் பின்விளைவுகளைச் சந்தித்த பின்னரே நம் தவறை உணர்கிறோம்.

அதே போன்ற சூழ்நிலையைத்தான் நாம் இப்பொழுது எதிர்கொள்கிறோம். பிரட்னி கோபியா என்பவர் தன் முகநூல் பக்கத்தில் ஒரு மருத்துவராய்த் தனது அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார்.

“கோவிட் 19ஆல் பாதிக்கப்பட்ட ஆரோக்கியமான இளவயதினர்கள், இந்த நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு கெஞ்சினார்கள். எப்படியாவது தடுப்பூசி போடுங்கள் என்றார்கள். நான் அவர்களின் கரங்களைப் பற்றிக்கொண்டே உங்களின் நிலைமை மிகவும் தாமதமாகிவிட்டதால் இந்த நிலைமையில் தடுப்பூசி போட இயலாது என்றேன்” என்கிறார்.

சில நாட்களில் அவர்கள் இறந்தனர்.  அவர்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கையில், “நீங்கள் தடுப்பூசியைப் போடுவதுடன் மற்றவர்களையும் போடச் சொல்லி வலியுறுத்துவதே நீங்கள் இவர்களுக்குச் செலுத்தும் மரியாதையாகும்”  என்று கூறினேன். கண்ணீர் நிரம்பிய அவர்களின் கண்கள், தங்களின் தவற்றை உணர்ந்ததை உணர்த்தியது.

கோவிட் 19 தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது கட்டாயப்படுத்தப்பட வேண்டும். இல்லையானால், மக்கள் அவர்களின் முடிவிற்காக வருத்தப்பட நேரிடும் என்பதுதான் நியதிகாக இருக்கும். .

அதே காரணங்களால், பிரான்ஸ் மற்றும் கிரீஸ் நாடுகளில்  திரைப்படம் பார்ப்பதற்கு, பூங்கா செல்வதற்கு , இரயிலில் பயணம் செய்வதற்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இந்தச் சட்டம் அவர்களின்  சுதந்திரத்தைப் பறிக்கவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம், இந்தோனெசியா  தடுப்பூசி போடுவதைக் கட்டாயப்படுத்தியது.  அதில் நேர்ந்த சிக்கல், அவர்களின் சுதந்திரத்தை மீறுவதாகக் கருத இயலாது. காraர்ணம், போதுமான தடுப்பூசி அவர்களிடம் இல்லை என்பதாகும்.

மலேசியாவைப் பொறுத்தமட்டில், அரசாங்கம் தடுப்பூசி  போடுவதை விரைவு படுத்தி வருகிறது. இந்தச் செயலாக்கம் பாராட்டத் தக்கது. மலேசியாவில் இருக்கும் அயல்நாட்டினர் உள்பட அனைத்துத் தரப்பினர்களுக்கும் இந்தத் தடுப்பூசி வழங்கப்படவேண்டும். அதோடு இந்தத் தடுப்பூசி கட்டாயமாக்கப்படவேண்டும்.