அடுத்த பிரதமருக்கு 10 பேர் தயாராகி வருகிறார்கள்!

இராகவன் கருப்பையா – ‘புத்திசாலிகள் மற்றவர்கள் செய்யும் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள். முட்டாள்கள்தான் சொந்தத் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள்,’ என ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உள்ளது.

ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் கோறனி நச்சிலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் நம் நாடு இன்னமும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் மிகவும் வேதனையான உண்மை.

மருத்துவமனையில் யாரைக் காப்பாற்றுவது யாரைக் கைவிடுவது என்ற இக்கட்டான சூழ்நிலையில் கடந்த ஆண்டு மத்தியில் இத்தாலி பரிதவித்தது.

இவ்வாண்டு மத்தியில் மருத்துவமனைகளில் பிராணவாயு பற்றாமலும் அவசரப் பிரிவுகளில் போதுமான அளவு படுக்கைகள் இல்லாமலும் இந்தியா அவதிப்பட்டது.

இவையெல்லாம் நமக்குப் பாடமாக அமைந்திருக்க வேண்டாமா?அதற்கான அறிகுறிகள் கிஞ்சிற்றும் இல்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

தனது கூட்டணியில் இருந்து கொண்டே எதிர்க்கட்சியைப் போல நடந்து கொள்ளும் அம்னோவைச் சமாளிப்பதற்கே பிரதமர் மஹியாடினுக்கு நேரம் போதவில்லை. இந்நிலையில் நோய்த் தொற்றைத் திறமையாகக் கையாள்வதற்கான ஆற்றல் சக அமைச்சர்களிடமும் இல்லை.

தனது சிறுபான்மை அரசாங்கத்தை எப்படியாவது அடுத்த போதுத் தேர்தல் வரையில் நகர்த்திச் சென்றுவிட வேண்டும் என்று இரவு பகலாகப் போராடிக் கொண்டிருக்கும் மஹியாடின் தற்போது மிகக் கடுமையான பல பரீட்சைக்கு உள்ளாகியிருக்கிறார்.

கொஞ்சம் அசந்தாலும் தனது பிரதமர் பதவி மின்னல் வேகத்தில் பறிபோய்விடும் என்ற சூழலில் அவர் தள்ளாடிக் கொண்டிருப்பதை மக்கள் உணராமல் இல்லை.

குறைந்த பட்சம் 10 பேர் அந்த நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது அரசியல் ஆய்வாளர்கள் மட்டுமின்றிப் பொது மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.

பிரதமர் பதவிக்காகக் காலங்காலமாகக் காத்துக்கிடக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் எம்மாதிரியான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார் என்று தெளிவாகத் தெரியவில்லை.

வெறும் 4 தொகுிதிகளை மட்டுமே தனது கைவசம் வைத்துக் கொண்டு மலேசிய அரசியலை இன்னமும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மகாதீர் 96ஆவது வயதில் 3ஆவது முறையாகப் பிரதமராகும் எண்ணம் கொண்டுள்ளதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி’ என்ற பழமொழிக்கு ஏற்பச் சபா மாநிலத்தின் வாரிசான் கட்சித் தலைவர் ஷாஃபி அப்டால் கூடப் பிரதமராகலாம் என்று ஒரு அறிவிப்பைச் செய்து அவருக்கும் ஆக்காட்டி உசுப்பி விட்டார் மகாதீர்.

இவர்கள் மூவரையும் தவிர்த்து, ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டே பிளவு பட்டுக்கிடக்கும் கட்சியான அம்னோவின் தலைவர் அஹ்மட் ஸாஹிட், அதன் துணை தலைவர் முஹமட் ஹசான் மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் ஆகியோரும் மறைமுகமாக அந்தப் பதவி மீது குறி வைத்துள்ளனர் என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையே அதிர்ஷ்டவசமாகத் திடீரென மலேசிய அரசியலின் முன் வரிசைக்கு வந்த துணை பிரதமர் இஸ்மாய்ல் சப்ரி, வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் மற்றும் கடந்த ஆண்டு பக்காத்தான் அரசாங்கம் கவிழ்வதற்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான அனைத்துலகத் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி ஆகியோரின் பெயர்களும் அவ்வப்போது அடிபடுவது அவர்களுக்கு உற்சாகமாகத்தான் இருக்கும்.

மூத்த அரசியல்வாதியான குவா மூசாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலியும் தனது விருப்பத்தை ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளதை நாம் புறம் தள்ளிவிட முடியாது.

இப்படியாகப் பல்வேறு கோணங்களிலிருந்து ஈட்டி போலப் பாய்ந்து கொண்டிருக்கும் சவால்களைச் சமாளிப்பற்கு மஹியாடிக்கு இருக்கும் ஒரே வழி நாடாளுமன்றத்தில் தனது ஆதரவைப் பலப்படுத்திக் கொள்வதுதான்.

திரைமறைவில் பேரம் பேசி அரசியல் தவளைகளை ஈர்ப்பதற்குப் போதுமான அவகாசம் தேவைப்படுவதால்தான் நாடாளுமன்ற அமர்வை அடுத்த மாதம் 7ஆம் தேதிக்கு அவர் ஒத்தி வைத்தார் என எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்களும் கூடக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இருந்த போதிலும் இத்தகைய சலசலப்புகளுக்கெல்லாம் அவர் கொஞ்சமும் அஞ்சுவதாகத் தெரியவில்லை. தனக்கே உரிய பாணியில் அவர் அரசியல் நடத்திக் கொண்டிருப்பது வியக்கத்தக்க ஒன்றாககே உள்ளது.

கோறனி நச்சிலின் கோரத் தாண்டவம் மிகவும் மோசமாக உள்ள நிலையில் நாட்டின் பல இடங்களில் மக்கள் சுருண்டு விழுந்து மடிந்து கிடக்கின்ற போதிலும் அரசியல்வாதிகளின் இதயங்களில் ஈரத்தைக் காணவில்லை என்பது உண்மையிலேயே வேதனையான ஒன்றுதான்.