ஷாரிசாட் பதவி விலக வேண்டும், மசீச இளைஞர் தலைவர் வலியுறுத்து

அம்னோ எம்பிகள் பலரை அடுத்து மசீச இளைஞர் தலைவர் ஒருவரும் தேசிய ஃபீட்லோட் செண்டர்(என்எப்சி)சர்ச்சை தொடர்பில் அம்னோ மகளிர் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜலில் பதவி விலக வேண்டும் என்றும் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

“கடந்த பொதுத் தேர்தலிலேயே ஷாரிசாட்டை வேண்டாம் என்று வாக்காளர்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்.

“இப்போது என்எப்சி விவகாரத்திலும் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் போட்டியிடாமல் இருப்பதே மேல்”, என்று மசீச இளைஞர் தலைமைச் செயலாளர் லோ சியு ஜூன் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

அவ்விவகாரத்தில், பிஎன் உறுப்புக்கட்சிகளில் அம்னோவுக்கு வெளியே இவ்வளவு கடுமையான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் ஒரு தலைவர் லோவாகத்தான் இருக்க வேண்டும்.

இதற்குமுன் மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங், சர்ச்சையை மாற்றரசுக் கட்சிகள் பயன்படுத்திக்கொண்டு அது தேர்தலின்போது ஒரு “தருணக்குண்டு” போல்  ஆகிவிடக்கூடாது என்பதால் அரசாங்கம் உடனடியாக அதை விசாரிக்க வேண்டும் என்று மட்டுமே கூறியிருந்தார். 

கடந்த பொதுத் தேர்தலில் ஷாரிசாட், பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வாரிடம் தோல்வி அடைந்தார்.

அதன்பின்னர் அவர் ஒரு செனட்டராக்கப்பட்டு மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

என்எப்சி ஊழல் பற்றி ஷாரிசாட் சரியான விளக்கம் அளிக்கவில்லை  என்பதால் பிஎன்னின்  “பாதுகாப்பான தொகுதிகள்”கூட அபாயமிக்க தொகுதிகளாக” மாறிவிடலாம் என்று லோ எச்சரித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் சொல்லப்பட்டிருக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் ஷரிசாட் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார். 

2008 அரசியல் சுனாமிக்குப் பின்னர் மக்களின் நம்பிக்கையைப் பெற பிஎன் செய்துவரும் முயற்சிகள் அத்தனையும் ஷாரிசாட்டின் தனிப்பட்ட விவகாரம் காரணமாக தவிடுபொடியாகி  விடும் அபயாமிருப்பதாக அவர் கூறினார்.

கலாபாகான் எம்பி அப்துல் கபூர் சாலே, கினாபாத்தாங்கான் எம்பி மொக்தார் ரடின் போன்ற அம்னோ தலைவர்கள் பலர், ஷாரிசாட் பதவி விலகுவதே நல்லது என்று வலியுறுத்தியுள்ளனர்.

உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன்கூட,கட்சித் தலைவர்கள் “நேரம் வந்து விட்டதை  உணர்ந்தால் விலகி விட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கால்நடை வளர்ப்புத் திட்டம் ஷாரிசாட் குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்டதுதான் இப்பிரச்னைக்கே காரணம்.

2010 தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை என்எப்சி-இன் கணக்குவழக்கு “ஒழுங்கின்றி” காணப்படுவதாகக் கூறியிருந்தார். பிகேஆர், அந்நிறுவனம் செய்துள்ள சில முதலீடுகளைச் சுட்டிக்காட்டி அவை குறித்து கேள்வி எழுப்பியது.

எளிய நிபந்தனைகளில் அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொகையான ரிம250மில்லியனில் ஆடம்பர கொண்டோமினியம்கள், ஆடம்பர கார்கள், நிலம் ஆகியவை-கால்நடை வளர்ப்புடன் சம்பந்தமில்லாதவை- வாங்கப்பட்டுள்ளன.

TAGS: