ஹரப்பான் கம்யூனிட்டி, நாளை சிலாங்கூர் மந்திரி புசாரை சந்திக்கிறது

ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை, ஆகஸ்ட் 3ம் தேதி டமன்சாரா உத்தாமா தேவாலய வளாகத்தில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்வு ஒன்றில் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய அதிரடிச் சோதனை தொடர்பில் விருந்து ஏற்பாட்டாளரான ஹரப்பான் கம்யூனிட்டி என்ற அரசு சாரா அமைப்பு நாளை மந்திரி புசார் காலித் இப்ராஹிமைச் சந்திக்கவிருக்கிறது.

ஷா அலாமில் உள்ள மந்திரி புசார் அலுவலகத்தில் அந்தச் சந்திப்பு நிகழும் என்பதை மந்திரி புசார் அலுவலகமும் ஹரப்பான் கம்யூனிட்டியும் மலேசியாகினியிடம் உறுதி செய்துள்ளன.

சிலாங்கூர் சுல்தான் ஆட்சேபித்ததைத் தொடர்ந்து “விசாரணைக் குழு” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆலோசனை மன்றத்தின் எற்பட்டில் அந்தச் சந்திப்பு நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

மூவர் கொண்ட குழுவில் மாநில முப்தி தாம்யெஸ் அப்துல் வாஹிட், துணை முப்தி அப்துல் மஜிட் ஒமார், காலித் ஆகியோர் அங்கம் பெற்றுள்ளனர்.

எச்ஐவி/ஏய்ட்ஸ் நோயாளிகள், வறியவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோருக்கு உதவி செய்வதற்கு நிதி திரட்டும் பொருட்டு அந்த விருந்து நடத்தப்பட்டதாக ஹரப்பான் கம்யூனிட்டி கூறியது.

அந்த அமைப்புக்கு நன்கொடை வழங்குகியவர்களும் நண்பர்களும் பயனடைந்தவர்களும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர்.  அந்த விருந்துக்கான உணவு முஸ்லிம்கள் வழங்கியதாகும். இசை நிகழ்ச்சிகளும் ஒரே மலேசியா நடனமும் புதிர்ப் போட்டியும் அங்கு நடத்தப்பட்டன.  தனிநபர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆலோசனை மன்ற அறிவிப்பு மீது சர்ச்சை

அந்த விருந்தில் தான் அதிரடிச் சோதனை நடத்தியதாகக் கூறப்படுவதை ஜயிஸ் மறுத்துள்ளது. அந்த விருந்தில் கலந்து கொண்டிருந்த 12 முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்யப்படுகின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களை மட்டும் விசாரித்ததாக அது கூறியது.

அந்த சர்ச்சையைத் “தீர்ப்பதற்கு” ஆலோசனை மன்றத்தை அமைப்பதாக சிலாங்கூர் மாநில அரசாங்கம் திங்கட்கிழமை அறிவித்தது.

“கடந்த வாரம் நாங்கள் அந்த விவகாரம் மீது சிலாங்கூர் சுல்தானுடன் விவாதித்த போது ஆலோசனை மன்றத்தை அமைக்கும் யோசனையை சுல்தான் தெரிவித்தார். அந்த விஷயத்தை திருப்தி அளிக்கும் வகையில் தீர்ப்பதற்கு தெரிவித்த யோசனைக்காக நான் சுல்தானுக்கு நன்றி கூறுகிறேன்,” என காலித் விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.

ஆனால் அந்த அறிவிப்பு குறித்து தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சுல்தான் நேற்று கூறினார். அத்தகைய மன்றத்தை அமைப்பதை தாம் அங்கீகரிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

அதனைத் தொடர்ந்து அந்தக் குழுவின் பெயரை “விசாரணைக் குழு” என சிலாங்கூர் அரசாங்கம் பெயர் மாற்றம் செய்தது.