அலைபேசிக்குள் ‘அலைபாயும் மனசு’ சீரழியும் ‘இளம் தளிர்கள்’: கண்காணியுங்கள், பெற்றோரே

திருப்பூர்:”சமூக வலைதளங்களால், மாணவ, மாணவிகளின் கவனம் சிதறாமல் பாதுகாக்க வேண்டிய கடமை, பெற்றோருக்கு உள்ளது; ‘இளம் தளிர்’கள் வாழ்க்கை, சீரழிந்து விடக்கூடாது” என்று திருப்பூரில், மாயமானவர்களை மீட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைத்த விழாவின்போது, அறிவுறுத்தப்பட்டது.

திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், காணாமல் போனவர்களை கண்டறிந்து, அவர்களது குடும்பத்தினர், உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிறுபூலுவபட்டியில், நேற்று நடந்தது. ”கடந்த மூன்று மாதங்களில், மாயமானவர்கள் தொடர்பாக, 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; மொத்தம், 79 பேர் கண்டறியப்பட்டனர்” என்று போலீஸ் கமிஷனர் வனிதா தெரிவித்தார்.நிகழ்ச்சியில், வீட்டில் இருந்து சிறுவர், சிறுமியர், இளைஞர்(ஞி)கள் மாயமானதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.என்ன காரணம்?குடும்ப பிரச்னை, கருத்து வேறுபாடு, தகாத உறவு, தேர்வில் தோல்வி, காதல் வயப்படுதல், தொழில் நஷ்டம் போன்ற பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறி மாயமாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இவற்றில் பெரும்பாலானவை, காதல், தகாத நட்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி மாயமாகும் நபர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. வளரிளம் (டீன் ஏஜ்) பருவத்தில் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

சீரழிந்த சிறுமி

வேலம்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம், 20ம் தேதி வீட்டை விட்டு மாயமானார். பெற்றோர் புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். அதில், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமிக்கு ‘ஆன்லைன் வகுப்பு’க்காக பெற்றோர் மொபைல் போன் வாங்கி கொடுத்தனர். மொபைல் போனும் கையுமாக இருந்த சிறுமி கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், சமூக வலைதள பக்கத்தில் கணக்கை துவக்கினார். அப்போது, சிறுமிக்கு, ராமநாதபுரத்தை சேர்ந்த, 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபரை திருப்பூர் வரவழைத்து, சிறுமி மாயமானது தெரிந்தது.

திருப்பூரில் இருந்து புறப்பட்டு, சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி பகுதியில், இருவரும் சுற்றி வந்தனர். சிறுமியிடம், அந்த வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். ஐந்து நாட்களுக்கு பின், சிறுமியை போலீசார் மீட்டனர். வாலிபர் மீது ‘போக்சோ’ வழக்கு பதியப்பட்டது.மேலும், சிறுமியின் மொபைலில், பெற்றோரின் வங்கி கணக்கு விபரங்கள் அடங்கிய, ‘பேமென்ட் ஆப்’ பயன்படுத்தி வந்தார். இதன் மூலம் ஐந்து நாட்களும், 20 ஆயிரம் ரூபாய் எடுத்து செலவு செய்தது தெரிந்தது.பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கி தருவதோடு நிற்காமல், அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

dinamalar