இஸ்மாயில் சப்ரி மஹியாடின் செய்யாததை செய்யவேண்டும் – குலா. நாடாளுமன்றத்தில் ஆதரவை நிரூபிக்கவேண்டும்.

இந்த அற்புதமான  மலேசியத்  திருநாட்டிற்குப் புதிதாக 9வது பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும்  அம்னோ துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு   எனது  மனமார்ந்த  வாழ்த்துகள்.

இந்த  கோவிட் 19  நாட்டை  அலைக்கழித்துக்கொண்டிருக்கும் சூழலில்  அவர் ஏற்றிருக்கும் இப்பொறுப்பானது  மிகவும் சவாலும் சோதனைகளும்   நிறைந்ததாக இருக்கும் .

அற்புதமான ஒரு வாய்ப்பு இஸ்மாயில் சப்ரிக்கு  எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது.   இதனை  உறுதிசெய்து கொள்ள, உடனடியாக அவர்  நாடாளுமன்றத்தைக் கூட்டி  தன்னுடைய  பெரும்பான்மை ஆதரவை  நிரூபிக்க வேண்டும். இது மாமன்னரின் விருப்பம் கூட என்பது அவருக்கும் தெரியும்.

இந்த நடைமுறையை  முன்னாள் பிரதமர் மஹியாடின் பின்பற்றத் தவறிவிட்டார். எத்தனையோ முறை நாடாளுமன்றத்திலும்  வெளியிலும் குரல் எழுப்பியும் கூட  அவர் தன்னுடைய  பெரும்பான்மையை  நாடாளுமன்றத்தில்  சோதிக்க இடம் அளிக்கவே இல்லை.

முன்னாள் பிரதமர்களான   ஹுசேன் ஓன் ,  படாவி இருவரும் தங்களுடைய  பதவியைப் பதவியேற்ற   சில நாட்களிலேயே நாடாளுமன்றத்தில்  நம்பிக்கை தீர்மானம் வழி உறுதி செய்து கொண்டனர்.  ஹுசேன் ஓன் பதவியேற்ற 11 நாட்களிலும் , துன் படாவி 3 நாட்களிலும் ,நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி  வெற்றிகண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷெரட்டோன் நகர்வுக்குப் பிறகு  மஹியாடினின் பிரதமர் பதவி ஆட்டம் கண்டிருந்ததாலும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டிருந்ததாலும்  , எங்கே நாடாளுமன்றத்தில் தனக்கு  ஆதரவு கிடைக்காமல் போய்விடுமோ  என்ற பயத்திலேயே அந்த தீர்மானத்தை அவர் கொண்டுவரத்  துணியவில்லை.

இந்த நெருக்கடியும் நிபந்தனைகளுமே   பெரிக்காத்தான் கூட்டணி, முறை தவறி ஆட்சி செய்யவும் கடைசியில்  ஆட்சி இழப்பதற்கும்  காரணமாக  அமைந்து விட்டது.

அதிகமான கோவிட் 19 நோய் தொற்றுகள்,  அதிகமானோரின் வேலை இழப்பு, வெளிநாட்டு  முதலீடுகளில் சரிவு, அதிகமான  நடுத்தர மக்கள் , ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுதல் இவைதான் இப்பொழுது நமது நாட்டின் பரிதாப நிலைமை .

இந்த நிலைமாறி நாட்டை சரியான  வழிக்கு இட்டுச்செல்ல  ஒரு தீர்க்கமான  வியூகத்தை   இஸ்மாய்ல் சப்ரி  நாட்டு மக்கள் முன்னால்  வைக்க வேண்டும்.

பிரச்சனைகளுக்கிடையிலும் குழப்பமான சூழ்நிலைகளுக்கிடையிலும்  பிரதமராகப் பதவியேற்ற   இஸ்மாயில் சப்ரி தான் மஹியாடினை விட மேலானவர்   என்பதை எடுத்துக் காட்ட இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல்   நாடாளுமன்றத்தை உடனடியாக  கூட்டி தனது  பிரதமர் ஆதரவை  உறுதிப் படுத்திக்  கொள்ளவேண்டும்.

மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஈப்போ பாராட்