புற்றுநோய் கண்டுபிடிப்பில் சாதனை- மலேசிய விஞ்ஞானி டாக்டர் சிரேனா நிக் சைனால்

யூகெவில் இருக்கும் மலேசியா விஞ்ஞானி டாக்டர் சிரேனா நிக் சைனால் புற்றுநோயையை விளைவிக்கும் மரபணு காரணங்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு மருந்து அறிவியல் வளர்ச்சிக்குப் பங்களித்ததால் அவர்களுக்குப் பிரான்சிஸ் கிரி மெடல் மற்றும் லெக்சர் 2022 (Francis Crick Medal and Lecture 2022) விருது வழங்கப்பட்டது.

கீச்சகத்தில்(Twitter) டாக்டர் சிரேனா இந்த விருது கிடைப்பதற்குக் காரணமாக அமைந்த குழுவிற்கும் தனக்குக் கற்றுக் கொடுத்து ஊக்கம் அளித்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

இவ்விருதை அவர்களுக்கு வழங்குவதாக யூகே ராயல் சொசைடி ( UK’s Royal Society ) அறிவிப்பு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல், புற்றுநோய் உயிரணுக்களில் இருக்கும் பிறழ்வுகளின் (Mutation) பகுப்பாய்வுகள் இப்போது புற்றுநோய் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு அவர் தனது பரிசு விரிவுரையை வழங்குவது மட்டுமல்லாமல் பதக்கம் மற்றும் £ 2,000 (RM11,568)  ரொக்கத் தொகையைப் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிரேனா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் உயிரணுக்களில் காணப்படும் பிறழ்வுகளை ஆராய்ச்சி செய்யவும்  அதன் உயிரியல் நுட்பங்களைக் கணக்கீடு செய்வதற்கும் ஒர் ஆராய்ச்சி குழுவை வழிநடத்தி வருகிறார்.

சமீபத்தில், அவரின் குழு உருமாறிய டி.என்.ஏவை (DNA) சரிசெய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒன்பது மரபணுக்களைக் கண்டுபிடித்தது.

பின்னர் இக்குழு புற்றுநோய் உயிரணுக்களை அடையாளம் காணும்  எம்.எம்.ஆர் டிடெக்ட் (MMR Detect) என்ற கணினி வழிமுறையையும் உருவாக்கியது.

எம்எம்ஆர் டிடெக்ட் அல்காரிதத்தைக் கொண்டு ஒரு நோயாளி புற்றுநோய் நோயறிதலைப்( diagnosis ) பெற்றவுடன் அப்புற்று நோயின் மரபணு வரிசைமுறையை (genetic sequence) கண்டுபிடிக்கலாம்.

இக்கருவி புற்றுநோய் சிகிச்சை முறையை மாற்றவும் பல உயிர்களைக் காப்பாற்றவும் உதவும் என்றும் அவரின் குழு நம்பிக்கை கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 21  இதன் ஆய்வு மற்றும் அல்கோரிதத்தை விவரிக்கும் கட்டுரை  இயற்கை புற்றுநோய் (Nature Cancer) இதழில் வெளியிடப்பட்டது.

மேலும், 2019 ஆம் ஆண்டில் சிரேனாவும் அவரது குழுவும் டாக்டர் ஜோசப் ஸ்டெய்னர் விருதை (Dr Josef Steiner Award)  புற்றுநோய் கட்டிகளில் பிறழ்வுகள் குறித்த ஆராய்ச்சிக்காக வென்றுள்ளனர். இதைச் சிலர் “புற்றுநோய் ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு” என்றே அங்கீகரித்துள்ளனர்.

  • மொழிபெயர்ப்பு – கவிதா