கொரோனா அதிகரிப்பு: கேரள அரசு மீது மத்திய மந்திரி குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்,

நாட்டின் பிற பகுதிகளில் கொரோனாவின் 2-வது அலை அடங்கி வரும் நிலையில், கேரளாவில் இன்னும் அதன் வீரியம் தணியவில்லை. அங்கு நேற்று முன்தினமும் 31,445 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தொற்று விகிதமும் 19.03 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. கடந்த மே 20-ந்தேதிக்குப்பிறகு தினசரி தொற்று 30 ஆயிரத்தை தாண்டியது இதுவே முதல் முறையாகும். இவ்வாறு மாநிலத்தில் தொற்று இன்னும் கட்டுக்குள் வராததற்கு கேரள அரசே காரணம் என மத்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘கேரளாவில் தொற்று அதிகரிப்பதன் பின்னணியில் அரசின் கவனக்குறைவு உள்ளது. மாநிலத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாப்லா கலவர நினைவு தினத்தை அனுசரிப்பதில் மாநில அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் கலவர நினைவை அனுசரிப்பதை விட, கொரோனாவை கட்டுப்படுத்துவதிலேயே அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதைப்போன்ற குற்றச்சாட்டை முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ் சென்னிதலாவும் தெரிவித்து உள்ளார். மேலும் தொற்றை கட்டுப்படுத்த முடியாததற்கு மக்களிடம் முதல்-மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

 

(நன்றி Dailythanthi)