இஸ்ரேலிய சிறையில் இருந்து தப்பிய 6 பாலத்தீனர்கள் – துருப்பிடித்த ஸ்பூனால் கழிப்பிடத்தில் சுரங்கம்

இஸ்ரேலில் உள்ள சிறை ஒன்றில் இருந்து சுரங்கம் தோண்டி ஆறு பாலத்தீனர்கள் இரவோடு இரவாக தப்பியுள்ளனர். தப்பியோடிய ஆறு சிறைக் கைதிகளையும் இஸ்ரேலிய அதிகாரிகள் தற்பொழுது தேடிக் கொண்டிருக்கின்றனர்.

கில்போ சிறைச்சாலையில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையின் கழிப்பிடத்தில் இருந்து சிறையின் சுற்றுச்ச் சுவருக்கு வெளியே உள்ள சாலை வரை நிலத்துக்கு அடியில் சுரங்கம் தோண்டிய அந்தச் சிறைக் கைதிகள் அதன் வழியாகத் தப்பியோடி உள்ளதாக கருதப்படுகிறது.

தங்கள் வயல்கள் வழியாக சிறைக் கைதிகள் தப்பி ஓடுவதைப் பார்த்த விவசாயிகள் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின் தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

இவர்களில் ஐந்து பேர் ‘இஸ்லாமிக் ஜிகாத்’ எனும் அமைப்பின் உறுப்பினர்கள்; ஒருவர் அல்-அக்சா தியாகிகள் படை எனும் தீவிரவாதக் குழுவின் முன்னாள் தலைவர்.

இந்த ஆறு பேரும் சிறையில் இருந்து தப்பியது இஸ்ரேலின் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை தோல்வி என்று கூறப்படுவதை இஸ்ரேலிய சிறைத் துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆனால் இந்தச் செயலை பாலத்தீன தீவிரவாதக் குழுக்கள் புகழ்ந்து வருகின்றன.

கில்போ சிறைச்சாலை இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அதி உயர் பாதுகாப்பு வசதிகள் கொண்ட சிறைச் சாலைகளில் ஒன்று.

இங்குள்ள பாதுகாப்பு வசதிகள் காரணமாக இந்த சிறைச்சாலை என்று ஆங்கிலத்தில் ‘தி சேஃப்’ (The Safe) என்று அழைக்கப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய நபர்கள் வயல்கள் வழியாக ஓடுவதை விவசாயிகள் பார்த்த பின்னரே சிறையில் இருந்து ஆறு பேரும் தப்பியது சிறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 4 மணி அளவில் சிறை அதிகாரிகள் கைதிகளை எண்ணிய பொழுது ஆறு பேர் குறைவாக இருந்தனர். இதன்மூலம் சிறைக் கைதிகள் தப்பி ஓடியது உறுதிசெய்யப்பட்டது.

சிறையில் இருந்த ஒரு போஸ்டருக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த துருப்பிடித்த ஸ்பூன் ஒன்றைக் கொண்டு இவர்கள் இந்த சுரங்கத்தை தோண்டினர் என்று தி ஜெருசலேம் போஸ்ட் எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் சிறை அறையின் கழிப்பிடத்தில் தோண்டிய குழி, சிறையின் தளத்துக்கு கீழே இருந்த ஒரு வெற்று இடத்தை சென்றடைந்தது.

இந்தச் சிறையில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்ட பொழுதே தரைக்கு அடியில் வெற்றிடம் வைத்து கட்டப்பட்டிருந்தது.

சிறையின் கட்டுமானத்தில் உள்ள கோளாறின் காரணமாகத்தான் இவர்களால் தப்பி ஓட முடிந்தது என்று இஸ்ரேலிய காவல்துறை கமாண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தரைக்கு அடியில் இருந்த காலி இடத்தை தாங்கள் தோண்டிய குழி மூலம் சென்றடைந்த அந்த ஆறு பேரும் அங்கிருந்து ஒரு சுரங்கத்தை தோண்டி சிறையின் சுற்றுச் சுவருக்கு வெளியே உள்ள ஒரு சாலையில் வரை தோண்டி அதன் மூலம் தப்பியுள்ளனர்.

(நன்றி BBC TAMIL)