இலங்கையில் தொழிநுட்ப பூங்காக்களை அமைக்க திட்டம்!

2021 வரவு செலவு திட்டத்தின் மூலம் காலி, குருநாகல், அநுராதபுரம், கண்டி மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் 05 தொழிநுட்ப பூங்காக்களை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைக்கு அணுகக்கூடிய வசதிகள், சுற்றுலாப் பயணிகளைக் கர்ந்திழுக்கக் கூடிய, தேவையான மனித வளத்துடன் கூடியதும் ஏனைய இதர சேவைகளைக் கருத்தில் கொண்டு குறித்த தொழிநுட்பப் பூங்காக்களை அமைப்பதற்குப் பொருத்தமான இடங்கள் தொழிநுட்ப அமைச்சால் அடையாளங் காணப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை வணிக ரீதியான தொழில் முயற்சிகளாக நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமான வகையில் திறைசேரி செயலாளருக்கு ஒட்டுமொத்த பங்குரிமை உரித்தாகும் வகையில் தொழிநுட்ப பூங்காக்கள் அபிவிருத்திக் கம்பனி எனும் பெயரிலான கம்பனியை நிறுவுவதற்கும், எதிர்வரும் காலங்களில் குறித்த கம்பனியை கொழும்பு பங்குச் சந்தையில் பதிவு செய்து தனியார் துறை முதலீட்டாளர்களுக்கு குறித்த கருத்திட்டத்தில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொழிநுட்ப அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(நன்றி TAMIL WIN)