விழுதுகள் இல்லாத ஆஸ்ட்ரோ, மொட்டை மரமாகக் காட்சி தரும்! – கயல்விழி கணேசன்  

ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சி, கடந்த வாரத்தோடு ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 14 ஆண்டுகளாக நாட்டு நடப்பையும் அதன் காரணக் காரியங்களையும் ஆய்ந்து, மலேசிய இந்தியர்களின் சிந்தனையைத் தூண்டும் ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்த விழுதுகள், இன்று இல்லை.

விழுதுகளுக்கு மாற்றாக, அதினும் சிறப்பான ஒரு நிகழ்ச்சி விரைவில் நம்மைச் சந்திக்குமெனச் சொல்லப்படுகிறது. நடக்குமா? எனக்கு நம்பிக்கையில்லை.

ஆஸ்ட்ரோ நிறுவனம் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர், 1998-இல் தொடக்கப்பட்ட போது, அது இந்தியர்களின் அதீத வரவேற்பைப் பெற்றது. அக்காலகட்டத்தில், வாரத்துக்கு இரண்டு தமிழ்ப்படங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பதே அபூர்வம். அவ்வாறு வாடிய பயிராய் நின்ற நமக்கு, ஆஸ்ட்ரோ வானவில்லின் வருகை பருவமழையாய் அமைந்தது. நிறுவன உரிமையாளரும் தமிழரல்லவா? குதுகளித்தோம்.

நாம் எதையெல்லாம் எதிர்பார்த்தோமோ, அதையெல்லாம் வானவில் நமக்குத் தந்தது. தமிழ்ப்படங்கள், நாடகங்கள், பாட்டு, கூத்து, நாட்டு நடப்பு, சமூக ஆய்வு, சமையல், ஜாதகம் என எல்லா வகை நிகழ்ச்சிகளையும் வானவில் அன்று நமக்கு வழங்கியது.

சில ஆண்டுகளிலேயே, ஏழை பணக்காரர் என்ற பாரபட்சமின்றி, ஏறத்தாழ அனைத்து மலேசிய இந்தியர்களின் இல்லங்களையும் உள்ளங்களையும் ஆஸ்ட்ரோ கவர்ந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தார் போல வெள்ளித்திரை, சன் டிவி, மக்கள் தொலைக்காட்சி எனப் புதுப் புதுத் தமிழ் அலைவரிசைகளை அறிமுகப்படுத்தி ஆஸ்ட்ரோ நம்மை அசத்த, நாமும் கூடுதல் சந்தா கட்டி இந்தப் புது வரவுகளையும் ஆதரித்தோம்.

தமிழக நிகழ்ச்சிகளுக்கெனப் பிரத்தியேக அலைவரிசைகள் உருவான நிலையில், வானவில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கியது. அதன் விளைவாக, 360 பாகை, அலாரம், மக்கள் நடுவே, கண்ணாடி போன்ற சமூகப் பார்வை கொண்ட நிகழ்ச்சிகள் தோன்றின. கூடவே விழுதுகளும் துளிர்விட்டு எழுந்தது.

இன்று, இந்நிகழ்ச்சிகளில் ஒன்றுகூட இல்லை. சமூகப் பார்வை கொண்ட நிகழ்ச்சியெனச் சொல்வதற்கு ஆஸ்ட்ரோ செய்திகள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. என்ன நடந்தது? அறிவார்ந்த நிகழ்ச்சிகள் வானவில்லிலிருந்து நீக்கப்பட்டதேன்?

 

இதைப் புரிந்துகொள்ள நாம் ஆஸ்ட்ரோ நிறுவனத்தையும் அது கடந்த சில ஆண்டுகளாகச் சந்தித்து வரும் சவால்களையும் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஏறத்தாழ ரிம 3 ஆக இருந்த ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் பங்கு விலை, மெல்ல மெல்லச் சரிந்து, இப்போது ஏறத்தாழ ரிம 1-ஆக உள்ளது. அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாடு இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் சிக்கல்கள் 2018-ஆம் ஆண்டிலேயே தென்படலாயின.

தொடங்கிய காலம்தொட்டு இடைப்பட்ட காலம்வரை, அதற்கு நிகர் அதுவே என்பதாக, ஆஸ்ட்ரோ நிறுவனம் சந்தா-டிவி சேவையில் முழு ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தது. சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணமே இருக்க, நிறுவனத்தின் வருமானமும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலை 2018-ஆம் ஆண்டு மாறியது. அவ்வாண்டு, ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் வருமானம் 1.5 விழுக்காடு சரிந்தது.

சரிந்தது, சரிந்தபடியே கிடக்கிறது. நிறுவனத்தின் வருமானம் இன்றுவரை பழைய நிலைக்குத் திரும்பவில்லை.

இதற்கான காரணியாக இணையத்தின் வளர்ச்சியைச் சொல்லலாம். தகவல் மட்டுமல்லாமல், திரைப்படங்கள், நாடகங்கள், போட்டி விளையாட்டுகளென அனைத்து உள்ளடக்கங்களையும்  இன்று நம்மால் இணையவழி பெற முடிகிறது. குறிப்பாக, இளைஞர்கள் தொலைக்காட்சியைப் பார்க்கச் செலவிடும் நேரத்தைக் காட்டிலும் இணையத்தில் செலவிடும் நேரம் கிடுகிடுவென வளர்ந்து வருகிறது. மலேசியர்கள் தொலைக்காட்சி பார்க்க நாளொன்றுக்குச் செலவிடும் நேரம் கடந்த சில ஆண்டுகளாக 3 ½ மணி நேரமாகத் தேங்கி நிற்பதாக 2018-ஆம் ஆண்டு வெளியான மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணைய ஆய்வு காட்டுகிறது. அதே காலகட்டத்தில், இணையத்தில் நாம் செலவிடும் நேரம் இரண்டு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக அதிகரித்துள்ளது.

நம்மில் பலர் தொலைக்காட்சி பார்ப்பதற்குப் பதில், யூடியூப், நெட்ஃபிலிக்ஸ் போன்ற சேவைகளை விரும்பிப் பார்க்கிறோம். 2017-ஆம் ஆண்டு வெறும் 66,000-ஆக இருந்த நெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, அடுத்த நான்கு ஆண்டுகளில் 336,000-க்கு உயருமென மலேசியப் புள்ளியல் துறை கணித்துள்ளது.

இச்சிக்கலைத் தீர்க்கும் நோக்கில், கடந்தாண்டு சூக்கா இணையவழிச் சேவையை அறிமுகப்படுத்திய ஆஸ்ட்ரோ, இவ்வாண்டு நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி ப்லஸ் போன்ற சேவைகளுடன் கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதைப் பார்க்கிறோம். இதனால், ஆஸ்ட்ரோவின் வருமானம் உயருமா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருந்தாலும், இணையவழிப் புதிய, இளைய சந்தாதாரர்களைக் கவர்வதே அந்நிறுவனத்தின் தற்போதைய வியூகமாக உள்ளதெனத் தெரிகிறது.

இதற்கிடையில், 2012-ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ நிறுவனம் மலேசிய அரசுடன் இணைந்து எஞ்சாய் (NJOI) என்ற ஓர் இலவசச் சேவையை வழங்கியது. இதன் காரணமாகவோ என்னவோ, மலேசியாவில் ஆஸ்ட்ரோ பார்ப்போர் எண்ணிக்கை 43 விழுக்காட்டிலிருந்து 77 விழுக்காடாக 2015-ஆம் ஆண்டுக்குள் உயர்ந்தது. இந்த எஞ்சாய் சேவையில் வானவில்லும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாற்றத்தின் காரணமாக, சந்தா அலைவரிசையாக இருந்த வானவில், ஓர் இலவச அலைவரிசையாக மாற்றம் கண்டது. விளைவாக, வானவில்லில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் எத்தனை பேர் பார்க்கின்றனர்; அதனைத் தயாரிக்க அல்லது மூன்றாம் தரப்பிடமிருந்து பெறுவதற்கு என்ன செலவாகிறது; அது விளம்பரவழி ஈட்டித் தரும் வருமானம் எவ்வளவு ஆகிய கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறிவிட்டன.

இதில் சிக்கலென்னவென்றால், இந்தியர்களில் மிகப் பெரும்பான்மையோர் ஏற்கனவே ஆஸ்ட்ரோ சந்தாதாரர்களாக இருந்ததால், வானவில் இலவசமாகத் தரப்படுகிறது என்பதற்காகப் புதிதாக இணைந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்திருக்கும். நம்மைப் பொறுத்தவரை வானவில் நாம் சந்தா கட்டிப் பார்க்கும் ஓர் அலைவரிசைதான். அது ஒரு தரமான அலைவரிசையாக இருக்க வேண்டுமென நாம் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஆனால், வானவில்லில் ஒண்டிக்கொண்டிருந்த கடைசி அறிவார்ந்த நிகழ்ச்சியான விழுதுகள், சவக்குழியில் தள்ளப்பட்டதற்கு எதிராக எதிர்வினைகள் ஏதும் இதுவரை எழவில்லை. ஏன்? அறிவுப் பசி என்பதே நமக்குக் கிடையாதா? அல்லது, நமக்கும் அறிவார்ந்த உரையாடல்களுக்கும் தொடர்பில்லையா? ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் — இவை மட்டுமே நமக்குப் போதுமா? நாம் தமிழர்கள்தான், அதற்காக, தமிழக மக்களின் சமூகப் பொருளியல் சூழலும் நம் சூழலும் ஒன்றாகிவிடுமா? அவர்கள் சந்திக்கும் சிக்கல்களும் நமது சிக்கல்களும் ஒன்றா? கிடையவே கிடையாது. நம் வலி நமக்குத்தான் தெரியும். அவைகுறித்துப் பேச வேண்டியது, அவற்றை நமக்குத் தெளிவுபடுத்த வேண்டியது நம் ஊடகங்களின் தார்மீகக் கடப்பாடு.

ஆஸ்ட்ரோ நிறுவனம் இன்றுவரை மலேசிய அரசாங்கத்தின் ஆதரவில் ஏகபோகத்தை (monopoly) அனுபவித்து வருகின்றது. அந்த ஏகபோகத்திற்கு விலையாக அந்நிறுவனம் சமூக மேன்மைக்கு முதன்மையளிக்கும் நிகழ்ச்சிகளைத் தர வேண்டுமென நாம் எதிர்பார்ப்பதில் தவறேதுமில்லை.

விழுதுகள் நிகழ்ச்சியின் மூடு விழா, ஆஸ்ட்ரோ நிறுவனத்தையும் அதன் சந்தாதாரர்களையும் மட்டும் சார்ந்த விடயமன்று. இது நாம் அனைவருக்கும் பொதுவான ஒரு சிக்கல். ஆதலால், இதை நாம் கண்டும் காணாமல் விட்டுச் செல்லக்கூடாது.

நாம் நம் கண்டனக் குரலைப் பதிவுசெய்தே ஆக வேண்டும்.