ராட்ஸி : குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதைப் பெற்றோர்களும் பாதுகாவலர்களும்  தேர்வு செய்யலாம்

பெற்றோர்களும் பாதுகாவலர்களும் கோவிட் -19 அச்சுறுத்தலைப் பற்றி கவலைப்பட்டால் தங்கள் குழந்தைகளைக் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று தேர்வு செய்யலாம்.

மாணவர்கள் பள்ளிக்கு வருகை தராதது ஓர் ஒழுங்கு குற்றமாக கருதப்படாது என்றும், எச்சரிக்கை கடிதம் மாணவர்களுக்கு வழங்கப்படாது என்றும் மூத்தக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார்.

“இருப்பினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தை பள்ளியில் இல்லாததைத் தெரிவிக்க கடிதம் எழுதும்படி கேட்கப்படுகிறார்கள்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் பள்ளியின் செயல்பாடு குறித்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இன்று, ராட்ஸி, மாநிலங்களில் தேசிய மறுவாழ்வுத் திட்டத்தின் (பிபிஎன்) கட்டங்களின் படி கல்வி அமைச்சகம் (எம்ஓஇ) அக்டோபர் 3 முதல் நேருக்கு நேர் பள்ளி அமர்வுகளைத் தொடங்கும் என்று அறிவித்தது. வாரந்திர அடிப்படையில்.

மேலும் கருத்து தெரிவித்த ராட்ஸி, பள்ளி சீருடை அணிவது கட்டாயமில்லை என்றும், முகக்கவரி அணிவது கட்டாயமாக்குவதாகவும் கூறினார்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முகக்கவரி வழங்க அரசாங்கம் முயற்சிக்கும் என்றார்.

இடைவேளை நேரத்தில், ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் மாணவர்கள் வகுப்பறையிலேயே தொடர்ந்து சாப்பிடுவார்கள், முந்தைய எஸ்ஓபி-க்கள் தொடரும் என்று அவர் கூறினார்.

“குளிரூட்டி வகுப்புகளைப் பயன்படுத்தும் மாணவர்கள், ஆசிரியர்களின் மேற்பார்வையில் திறந்தவெளியில் சாப்பிட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், முழு உறைவிடப் பள்ளிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, தினசரி பள்ளி மாணவர்கள் போல் வாராந்திர சுழற்சி இல்லை என்று ராட்ஸி அறிவித்தார். தங்குமிடத்தில் பாதுகாப்பான குமிழியை உருவாக்க, கோவிட்-19 தொற்றைத் தடுக்க மூன்று முறை சுய சோதனை செய்யும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

“மாணவர்களுக்குக் கோவிட் -19 சுய சோதனை மூன்று முறை நடத்தப்படும், விடுதிக்குள் நுழைவதற்கு முன், ஆறாவது நாள் மற்றும் 14-வது நாளில் நடத்தப்படும், அதேசமயம் புறப்பாட நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை,” என்று அவர் கூறினார்.

அறிகுறிகளைக் கொண்ட மாணவர்கள், முன்பு நடத்தப்பட்ட எஸ்ஓபி போன்று பள்ளியில் சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஆனால் பள்ளியில் இருக்கும் போது மாணவர்களுக்கு அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டால், உமிழ்நீரைப் பயன்படுத்தி கோவிட் -19 திரையிடல் சோதனை செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“நாங்கள் பள்ளிகளில் கோவிட் -19 சுயசோதனை கருவிகளை வழங்குவோம், அவை தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் வைக்கப்படும், இது பள்ளிகளில் கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான எங்கள் முயற்சிகளில் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.

பள்ளியில் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியிருந்தால், பள்ளி மாவட்டச் சுகாதார மையத்திற்கு (பிகேடி) அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அறிக்கை அளிக்கும்.

  • பெர்னாமா