வல்லரசுகளையே ஆட்டிப்படைக்கும் கோவிட் பெருந்தோற்றும் – கி.சீலதாஸ்

மனிதக் குலத்தைத் தாக்கும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் தணிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஆனால், இந்த நோயைத் தரும் விஷக்கிருமி பலவிதமாக மாறும் தன்மையைக் கொண்டிருக்கிறது என மருத்துவ விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, வைரஸ் துகள்கள் சராசரி முப்பது விதமாக மாறும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அவற்றில் பெரும்பான்மை பரவும் சக்தியைக் கொண்டிராவிடிலும் அவற்றின் அபரிமிதமாக மாறும் தன்மை உலகளவில் பரவும்போது ஆபத்தான சூழ்நிலை விளையக்கூடும். இதைக் கவலைக்குரியது, ஆபத்தானது எனத் தொற்றுநோய் நிபுணர்கள் அஞ்சுகின்றனர். இப்படிப்பட்ட நிலை ஏற்படும்போது தடுப்பு மருந்துகள் குணமடையாது போகலாம் என்ற அச்சமும் வருத்துகிறது என்கின்றனர்.

இன்று நடப்பது என்ன? இந்தக் கோவிட்-19 பெருந்தொற்று 2019ஆம் ஆண்டு தனது ஆபத்தான பயணத்தைத் தொடங்கியிருந்தாலும் அதன் பூர்வீகம் 2003ஆம் ஆண்டு உருவெடுத்த சார்ஸ் தொற்றுநோயின் மறுபிறவியே என்றும் கருதப்படுகிறது. 2003ஆம் ஆண்டு ஏற்பட்ட தொற்றுநோய் கட்டுப்படுத்தப்பட்டது. அதைக் கட்டுப்படுத்தப் பல வழிகள் கண்டுபிடித்து இருக்கலாம். அவை 2019ஆம் ஆண்டு கோவிட்-19 மறுபிறவி கண்டபோது பலன் தந்தனவா என்ற கேள்விக்கான விடை இன்னும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

ஆனால், உண்மை என்னவென்றால் சார்ஸ் 2003ஆம் ஆண்டு தனது ஆக்கிரமிப்பைச் சீனாவில் தொடங்கியது. ஒரு வகையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது என்பது உண்மை. ஆனால், அந்த நோய் பரவாமல் இருக்கச் சீனாவின் அண்டை நாடான தைவான் எடுத்த முயற்சி கோவிட்-19 தன் தாக்குதலை மேற்கொண்டபோது, அந்த நாடு தனது எல்லைகளை உடனடியாக மூடிய நடவடிக்கை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது, தைவானின் துரித நடவடிக்கை அந்தத் தொற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க உதவியது என்கின்றனர். இந்தப் பலன் தரும் நடவடிக்கையை எடுக்க உதவியது என்ன தெரியுமா?

தைவானின் அன்றைய துணை அதிபர் சென் சியென் ஜென், தொற்றுயியல் நிபுணத்துவர். 2019ஆம் ஆண்டு வூஹானில் கோவிட்-19 தமது கொடுங்நோயைக் கட்டவிழ்த்து விட்டபோது சீனா உடனடியாகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவை என்ன? அதன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பரந்த மனப்பான்மை சீனாவிடம் காண முடியவில்லை என்ற குற்றச்சாட்டின் வேகம் தணிவதாகத் தெரியவில்லை.

உலகிலேயே மிகுந்த விஞ்ஞான வசதிகளைக் கொண்ட நாடு அமெரிக்கா என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அப்படி இருந்தும்    கோவிட்-19க்கு எதிரான, அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அந்த நாட்டின் பங்களிப்பு குறைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அது ஒரு புறமிருக்க அதிபர் டொனல் டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் இந்தத் தொற்றுநோயின் கடுமை வலுவடைந்தது.

அதைப் பெரிதுபடுத்தாது நடந்து கொண்டார் என்ற தாக்குதல் இருந்ததையும் நாம் அறியாதது அல்ல. உலக மக்களைப் பாதிக்கும் நோய் உலகின் எந்தப் பகுதியில் ஏற்பட்டாலும் அதைத் தடுக்கவும், பரவாமல் இருக்கவும் ஐநாவின் அங்கமாக விளங்கும் உலகச் சுகாதார அமைப்பு செயல்படும். நோய்க்கான காரணம், அதற்கான நிவாரணம் அனைத்தையும் அந்த அமைப்பு ஆய்ந்து பார்த்து உலக நாடுகளுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கும். அதன் பரிந்துரையை உலக நாடுகள் ஏற்றுக்கொள்வது இயல்பு.

இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் அமெரிக்காவும் ஒன்று. டிரம்பின் ஆட்சி காலத்தில் கோவிட்-19தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும்போது அந்த அமைப்பைக் கைக்கழுவினார் என்பது அமெரிக்காவின் போக்கும், அதன் பொறுப்புணர்வும் சந்தேகத்தைக் கிளப்பியது.

சீனாவும், அமெரிக்காவும் வல்லரசுகள். இரு நாடுகளும் ஐநா பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பினர்கள். பாதுகாப்பு என்றால் என்ன? ஆயுத உற்பத்தியைக் குறைப்பது, தடுப்பது அல்லது பெருமளவில் போர் மூளாமல் இருப்பதைப் பார்த்துக் கொள்வது மட்டுமா? அப்படிப்பட்ட கருத்து ஒரு வேளை இரண்டாம் உலகப் போரின்போது நியாயமானதாக இருக்கலாம். இன்று ஆயுதத் தாக்குதல் உலகெங்கும் நிகழ்கிறது. கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலகப் போர்களைப் போல் இல்லாவிட்டாலும் சிறு சிறு போர்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றைத் தடுப்பது மட்டும்தான் இந்த வல்லரசுகளின் பொறுப்பா?

அதே சமயத்தில், இந்த வல்லரசுகள் குறிப்பாகச் சீனாவும், அமெரிக்காவும் போர்களைத் தடுக்க எடுத்த, எடுக்கும் முயற்சிகள்தான் என்ன? அவற்றின் நடவடிக்கைகளை ஆய்ந்து பார்த்தால் அவையே பலவிதமான சிக்கல்களுக்குக் காரணிகள் என்பது புலப்படும். எனவே, இந்தச் சீன, அமெரிக்க நாடுகள் ஐநாவின் பாதுகாப்பு மன்ற உறுப்பினர்களாக உலகைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டும். பாதுகாப்பு என்றால் வெறும் போர் மட்டுமல்ல, மாறாக உலகைப் பீடிக்கும் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பொறுப்பு அந்த மன்றத்திற்கும், மன்ற உறுப்பினர்களுக்கும் உண்டு என்றால் தவறாகுமா?

அப்படிப் பார்க்கும்போது அனைத்துலகச் சுகாதார அமைப்பு சுதந்திரமாக இயங்குகிறது என்றால் உலகப் பாதுகாப்பைத் தற்காப்பதாகச் சொல்லும் ஐநா பாதுகாப்பு மன்ற உறுப்பு நாடுகள் உலகின் நலனையும் பொதுவாகப் பாதுகாக்க வேண்டும் என்பதும் நியாயமே. ஆகவே, சீனா, அமெரிக்கா தங்களின் மனிதக் குலத்துக்கான பொறுப்புகளைச் செவ்வெனச் செய்தார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சீனாவில் ஏற்பட்ட தொற்றுநோய் பரவுவதற்கான காரணம் என்ன? அது பரவுவதைத் தடுக்க எடுக்கப்பெற்ற முயற்சிகள் என்ன? தயாரிக்கப்பட்ட மருந்துகள் யாவை? எப்பொழுது இந்த மருந்துகள் தயாராயின? எதன் அடிப்படையில் இந்த மருந்துகள் தயாரிக்கப்பட்டன? என்பன போன்ற கேள்விகள் நியாயமானவையே. அமெரிக்காவோ தம்மிடம் இருக்கும் மருத்துவ விஞ்ஞான அறிவை உலகோடு பகிர்ந்து கொள்ளத் தயக்கம் காட்டியது ஏன்? தயக்கம்  காட்டவில்லை, சுணக்கம் ஏற்பட்டது என்ற விளக்கம் நியாயமாகுமா? அனைத்துலகச் சுகாதார அமைப்பிலிருந்து விலகியது நியாயமான செயலா? உலக நலனில் அதன் பங்களிப்பு இதுவா?

இப்படிப்பட்ட கேள்விகள் தவிர்க்க முடியாதவை! ஆனால், நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்ன? சீனாவும், அமெரிக்காவும் உலக ஆதிக்கத்தில் கவனம் கொண்டிருக்கின்றனவே அன்றி உலகின் நலனில் அவற்றின் கரிசனம் குறைவு எனின் அப்படிப்பட்ட கருத்தும் சிந்திக்கச் செய்கிறது.

இன்று வரை இவ்விரு நாடுகளின் பகைமைதான் முற்படுத்தப்படுகிறதே தவிர, மனிதக் குல நலனில் அல்ல என்பதை உணர்வது மிகவும் முக்கியம். இந்தக் கோவிட்-19 தொற்றுநோயைப் பூண்டோடு அழிக்க முடியாது என்பதில் மருத்துவ விஞ்ஞானம் உறுதியாக இருக்கிறது. அதைத் தடுக்கும் மருந்து எளிதில் கிடைக்கும்படி செய்வதே உலக நாட்டுத் தலைவர்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். தேவையான, ஆக்ககரமான சட்ட விதிகளைப் பிரகடனப்படுத்துவது மட்டும் போதாது; கண்டிப்பான அமலாக்கம் தேவை. அமலாக்கத்தில் பலவீனம் தென்பட்டால் நோயைத் தடுப்பது கடினமே!

தடுப்பூசி விஷயத்தில் தேசியமும் கலந்துவிட்டதைக் கவனிக்க வேண்டும். சீனாவில் தயாரிக்கப்பெற்ற கோவிட்-19 தடுப்பூசிகள் மத்தியக்கிழக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய, அமெரிக்கா போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்படவில்லை. ஐரோப்பிய, அமெரிக்கா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பு மருந்துகளைச் சீனா ஏற்க மறுக்கிறது. இந்தத் தேசிய உணர்வு உலகளவில் பரவி மனித உறவைத் துண்டிப்பதற்குக் காரணம் என்பதை வல்லரசுகள் உணராதது விசித்திரமே.

உலகின் ஒவ்வொரு நாடும் இந்தத் தடுப்பு மருந்து தயாரிப்பில் முழுக் கவனம் செலுத்துவது முக்கியமாகும். தன் கையே தனக்கு உதவி என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் பல நூறு ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களைப் பள்ளி வகுப்புகளுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் மற்ற ஆசிரியர்களுடனோ, மாணவர்களுடனோ தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என்று அரசு கூறுகிறது. அவர்களுக்கு அலுவலக வேலை ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளிவந்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயமென ஏற்றுக்கொள்வது? பள்ளிக்கூடத்தில் தடுப்பூசி போடாதவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கப்படும்போது அலுவலகத்தில் அனுமதிக்கப்படலாம் என்றால் கட்டுப்பாட்டின் வலிமை கேலி கூத்தாகிவிடுகிறது அல்லவா?

கோவிட்-19 குறித்த எந்தத் திட்டமாக இருந்தாலும் மக்களின் நன்மைக்காக, பாதுகாப்புக்காக இருக்க வேண்டுமே அன்றி ஜனரஞ்சக அரசியலுக்காகவோ, அரசியல் இலாபத்துக்காகவோ அது அமையக்கூடாது.