‘இஸ்மாயில் சப்ரியின் அரசாங்கத்தில் பி.எச். இணையவில்லை’

இன்று, மாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துவிட்டது என்று அர்த்தமல்ல.

டிஏபி தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக்கின் கருத்துப்படி, பிஎச் எம்.பி.க்கள் தொடர்ந்து எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசுக்கு ஒரு சோதனை மற்றும் சமநிலை செயல்பாட்டைச் செய்வார்கள்.

“இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பி.எச். அரசாங்கத்துடன் இணைந்துள்ளது என்று அர்த்தமல்ல.

“பி.எச். எம்.பி.க்கள் அரசாங்கத்தின் பலவீனங்களைத் தொடர்ந்து கண்காணித்து விமர்சிப்பார்கள் மற்றும் மக்கள் நலன் கருதி குரல் கொடுப்பார்கள்,” என்று நேற்றிரவு அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

“எனினும், எந்தவொரு மசோதாவும் பட்ஜெட்டும் செயல்முறைக்கும் பேச்சுவார்த்தை மற்றும் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும், நாங்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவோம்.

“இந்தப் புரிதலுக்குப் பதிலாக, மக்களுக்கு உதவும் பல்வேறு கொள்கைகளை அரசு செயல்படுத்த வேண்டும் மற்றும் நாட்டின் நிர்வாக அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதோடு, நாடாளுமன்ற நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அரசு மற்றும் பி.எச். பிரதிநிதிகளின் கூட்டு அறிக்கையில், கோவிட் -19 மற்றும் நாட்டின் பொருளாதார மீட்புக்குத் தீர்வு காண, நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இன்று மாலை 5 மணிக்கு, நாடாளுமன்றத்தில் கையெழுத்திடப்படும் அந்த வரலாற்று ஆவணத்தை மக்கள் படித்து, அதில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புவதாக லோக் கூறினார்.

“செப்டம்பர் 13, 2021 அன்று, மாலை 5 மணிக்கு, நாடாளுமன்றக் கட்டிடத்தில், தாயக அரசியலில் ஒரு வரலாற்று நிகழ்வு நடந்ததாக எதிர்காலத்தில் வரலாற்று பாடப்புத்தகங்களில் ஓர் உள்ளடக்கம் இருக்கலாம்.

“அரசியல் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், கோவிட் -19 தொற்றுக்கு எதிராக போராடுவதற்கும், நாட்டின் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கும் மற்றும் நாட்டின் நிர்வாக அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கும் முழு கூட்டு முயற்சிகளில் கவனம் செலுத்த அரசாங்கத்திற்கும் பி.எச். கூட்டணிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்,” என்று அவர் கூறினார்.

லோக்கின் கூற்றுப்படி, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பிறகு, அரசாங்க கடமைகளின் முழு பட்டியல் அறிவிக்கப்படும்.