தடுப்புக்காவல் மரணம் : காவல்துறையும் அரசாங்கமும் RM281,300 இழப்பீடு செலுத்த வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

நான்கு வருடங்களுக்கு முன்பு, தடுப்புக் காவலில் மரணம் அடைந்த தி பெனாட்டிக்கின் குடும்பத்தாருக்குக் காவல்துறையும் அரசாங்கமும் RM281,300 நஷ்டஈடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஜூலை 10, 2017 அன்று, ஜிஞ்சாங் காவல் நிலையத் தடுப்பறையில் மரணமடைந்த பெனாட்டிக் வழக்கில், அவரின் மனைவி, என் ஜானகி மற்றும் மகள், பி ஏஞ்சலின் ஆகியோருக்கு ஆதரவாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மருத்துவச் சிகிச்சைகளைக் கொடுக்கத் தவறிய காவல்துறையின் அலட்சியம் காரணமாக, பல உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டிருந்த பெனாடிக், 44, மரணமடைந்தார் எனக் கூறி, அவரது குடும்பம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு சிவில் வழக்கைத் தாக்கல் செய்தது.

25 பிரதிவாதிகள் இந்த வழக்கில் பெயரிடப்பட்டனர், அவர்களில் 23 பேர் காவற்படையினர், தேசியக் காவற்படைத் தலைவர் (ஐஜிபி) மற்றும் மலேசிய அரசாங்கமும் அதில் அடங்கும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி, கோலாலம்பூர் குரோனர் நீதிமன்றம் பெனாடிக்குக்கு மருத்துவ உதவி வழங்கியிருந்தால் அவரது மரணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று தீர்ப்பளித்தது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ், குரோனர் மஹியோன் தாலிப் அவர்கள், அலட்சியம் காட்டிய சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்துறை தலைவர் மற்றும் ஐஜிபிக்கு உத்தரவிட்டார்.

குடும்ப வழக்கறிஞர் எம் விஸ்வநாதனின் கூற்றுப்படி, நீதித்துறை ஆணையர் குவெய் சியூ சூன், இன்று இரண்டு வாதிகள் பிரதிவாதிகள் மீதான வழக்கை நிகழ்தகவுகளின் அடிப்படையில் நிரூபிப்பதில் வெற்றி பெற்றதாகத் தீர்ப்பளித்தார்.

வழக்கறிஞரின் கூற்றுப்படி, நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சேதங்களின் அளவு பின்வருமாறு:

  • மரபுரிமை நிர்வகிப்பதற்கான அதிகாரக் கடிதத்தை வழங்குவதற்கான செலவுக்கு RM5,500.
  • இறுதிச் சடங்கிற்கான செலவு RM4,000.
  • துக்க இழப்பீடு மற்றும் துக்க அனுசரிப்பிற்கு RM30,000.
  • ஊதிய இழப்புக்கு RM91,800.
  • வலி மற்றும் துன்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக RM50,000.
  • கடுமையான சேத இழப்பீட்டுக்காக RM100,000.

“வாதியின் செலவுகளுக்காக RM40,000 செலுத்துமாறும் நீதிமன்றம் பிரதிவாதிக்கு உத்தரவிட்டது.

“எனினும், இந்த வழக்கில் கடமையை மீறியதற்காக நீதிமன்றம் காவல்துறையினருக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை,” என்று வழக்கறிஞர் இன்று காலை தொடர்பு கொண்டபோது கூறினார்.