புதுக்கோட்டையில் டைனோசர் காலத்து கல்மரம் – 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரம் கிடைத்துள்ளதை தொல்லியல் ஆய்வாளர்கள் கொண்டாடுகின்றனர். ` மண்ணியல் சார்ந்த ஆய்வுகளுக்கும் பழைய வரலாற்றை கண்டடைவதற்கும் இது பேருதவியாக இருக்கும்’ என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் பாண்டியன்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட நரிமேடு பகுதியில் சுண்ணாம்பு பாறைகளும் கூழாங்கற்களும் அதிகளவில் கிடைக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்திலேயே இந்தப் பகுதியின் நில அமைப்பின் மாறுபாட்டை உணர்ந்து பல ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வாளர்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இயற்கை சீற்றம் ஏற்பட்டு சுண்ணாம்புப் பாறைகளுக்கு இடையில் தாவரங்களும் உயிரினங்களும் புதையுண்டு போனதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறு, இந்த மரங்கள் எல்லாம் கனிமப் பொருளால் ஆன படிமங்களாக உருமாறியுள்ளதையும் பல்வேறு ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டில் இங்கு கிடைத்த 28 செ.மீ நீளமுள்ள கல் மரத்தை புதுக்கோட்டை மாவட்ட அரசு அருங்காட்சிய காப்பாட்சியரிடம் தொல்லியல் ஆய்வாளர்கள் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் எஸ்.பாண்டியன் என்பவர், ஞாயிற்றுக்கிழமையன்று கள ஆய்வில் கண்டறிந்த கல்மரம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இந்தக் கல்மரம் அமைந்துள்ளது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டுத் துறையில் எம்.ஏ, எம்.ஃபில் படிப்பை நிறைவு செய்த பாண்டியன், ஓய்வு நேரங்களில் ஆய்வுப் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்தைச் சேர்ந்த நடுகல் ஒன்றை கண்டறிந்தார். கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த நடுகல், பசுக்களை கவர வரும்போது நடந்த சண்டையில் கனங்குமரன் என்பவர் இறந்ததற்காக பொதுமக்கள் நடுகல் எடுத்ததை விளக்கும் வகையில் அமைந்திருந்தது. இவர் தனியார் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டே ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தொல்லியர் ஆய்வாளர் எஸ்.பாண்டியனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ”தமிழ்நாட்டில் அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் கல்மரம் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர்கள் கல் மரம் ஒன்றை கள ஆய்வில் கண்டறிந்தனர். இதன் தொடர்ச்சியாக நரிமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வந்தேன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (12 ஆம் தேதி) இந்தக் கல்மரத்தைக் கண்டறிந்தேன். இதன் அளவு 10 செ.மீ உயரமும் 10.5 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது. இதன் ஆயுள் என்பது பத்து கோடி ஆண்டுகள் ஆகும். அதாவது, டைனோசர்கள் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்ததாக இந்தக் கல்மரம் உள்ளது. அரியலூரில் கண்டறியப்பட்ட கல்மரமும் அதே காலட்டத்தைச் சேர்ந்தவைதான்” என்கிறார்.

”கல் மரங்கள் எப்படி உருவாகின்றன?” என்றோம். “ பூகம்பம் காரணமாக மனிதர்களோ, மரங்களோ அப்படியே மண்ணுக்குள் செல்லும்போது அது வேதியியல் மாற்றங்களால் கனிமப் பொருளாக அப்படியே மர வடிவில் கல்லாக மாறிவிடுகின்றன. நரிமேடு பகுதியில் 15 அடி ஆழத்துக்கு கூழாங்கற்கள் கிடைக்கின்றன. இந்தப் பகுதியில் நீரோட்டம் இல்லாமல் இவ்வளவு கூழாங்கற்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. அப்படி அங்கே ஓடிய நீரோடையில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் மண்ணுக்குள் புதைந்து படிமங்களாக மாறியிருக்கலாம். இந்தப் பகுதி முழுக்க முழுக்க சுண்ணாம்புக் கல் பாறைகள் நிரம்பிய பகுதியாக உள்ளது” என்றார்.

” கல்மரத்தின் வயது 10 கோடி ஆண்டுகள் என எப்படி வரையறுக்கிறீர்கள்?” என்றோம். ” மண்ணியல் ஆய்வாளர்கள் இதற்கான காலகட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கல்லால் மரம் உருமாறுவது என்பது உடனடியாக நடக்காது. பல கோடி ஆண்டுகள் வேதியியல் மாற்றத்தால் மட்டுமே அவை மாறுபடும். அந்தவகையில் பார்த்தால் இந்தக் கல்மரத்தின் வயது என்பது 10 கோடி ஆண்டுகளாக உள்ளது. இது கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்தது. பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த ஆஞ்சியோஸ்பெர்முக்கு முந்தைய ஜிம்னோஸ்பெர்ம் வகையைச் சேர்ந்ததாக உள்ளது. இது ஓர் அரிதான தொல்லியல் பொருள். இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் ஏராளமான அரிய பொருள்கள் கிடைக்கும்” என்கிறார்.

”இந்த ஆய்வின் அடுத்தகட்டப் பணி என்னவாக இருக்கும்?” என்றோம். ” மண்ணியல் சார்ந்த ஆய்வுகளுக்கும் பழைய வரலாறுகளைத் தேடி எடுக்கவும் இந்தக் கல் மரம் உதவும். இந்தப் பகுதியில் விலங்குகள் அதிகமாக இருந்துள்ளன. இதற்கு முன்பு 3 இடங்களில் கிடைத்த கல் மரங்களும் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவைகள்தான். அரியலூரில் ஒரு மரமே முழு கல்லாக கிடைத்துள்ளது. அங்கு டைனோசரின் முட்டைகளும் கிடைத்துள்ளன. கடற்பகுதிகளில் நத்தை ஒன்று கல்லாக மாறியதையும் கண்டறிந்துள்ளனர்” என்கிறார்.

(நன்றி BBC TAMIL)