குழந்தைகள் குடியுரிமை வழக்கு – மேல்முறையீட்டைத் திரும்பப் பெற அரசுக்கு வலியுறுத்து

வெளிநாட்டு கணவர்களைக் கொண்ட மலேசியப் பெண்களின் குழந்தைகளுக்குத், தானாகவே மலேசியக் குடியுரிமை வழங்க அனுமதித்த நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிரான அரசாங்கத்தின் முறையீடு வருத்தமளிப்பதாக ஃபேமிலி ஃப்ராந்தியர்ஸ் (Family Frontiers) குழு தெரிவித்தது.

அந்த மனித உரிமைக் குழு, அக்கோரிக்கையை விரைந்து மீட்டுக்கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் மற்றும் தேசியப் பதிவுத் துறை தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜுசோ உட்பட அரசாங்கத்தையும் வலியுறுத்தியது.

முந்தைய நீதிமன்ற முடிவை வரவேற்ற, மூன்று அமைச்சர்களை ஃபேமிலி ஃப்ராந்தியர்ஸ் நினைவூட்டியது.

“எனவே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த அரசின் நடவடிக்கையால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம், இது மலேசியப் பெண்களின் நீண்டகாலமாக தாமதமாகி வந்த உரிமைகளுக்கான துரோகமாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அது கூறியது.

“உயர் நீதிமன்றத்தின் முடிவை ஏற்கவும், பெண்களின் உரிமைகள் ஒடுக்கப்படாமல் இருப்பதையும், அவர்கள் தகுதியான நீதி மற்றும் சமத்துவத்தைப் பெறுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

“மறுபுறம், நமது நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து நிலவிய அநீதிகளுக்கு எதிராக, தற்போதைய நிலையைப் பாதுகாக்க அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது, இப்போது வரை மலேசியப் பெண்கள் கிட்டத்தட்ட 64 ஆண்டுகளாக அநீதியின் சுமையைத் தாங்கி வருகின்றனர்,” என்று அக்குழுவினர் ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.

செப்டம்பர் 9-ம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், மலேசியப் பெண்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கும், குடிமக்கள் அல்லாத தந்தைகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் தானாகவே மலேசியக் குடியுரிமை வழங்கப்படும் என்று தீர்ப்பளித்தது.

கடந்த டிசம்பர் 18-ம் தேதி, ஃபேமிலி ஃப்ராந்தியர்ஸ் மற்றும் ஆறு மலேசியப் பெண்கள் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி அக்தர் தாஹிர் அனுமதித்தார்.

எனினும், நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்ய அரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.