வீழ்ந்த அம்னோ, எழுமா? – டோமி தோமஸ்

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேல் இரும்புப் பிடியாக நாட்டை ஆண்டு வந்த மலாய்க்காரர்களின் தாய்க் கட்சியாகக் கருதப்படும் அம்னோ தற்போது 3 பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது எனப் பரவலாகப் பேசப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை நழுவவிட்ட அக்கட்சி சில அரசியல் தவளைகளின் சுயநலப் போக்கினால் வலுவிழந்தது ஏதோ உண்மைதான்.

இருந்த போதிலும் அதற்கடுத்த 22 மாதங்களில் கொல்லைப் புறமாக வந்து மீண்டும் ஆட்சியில் அமர்ந்த அக்கட்சியின் பலம் குன்றவில்லை என்று கூறுகிறார் முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ்.

மஹியாடின் பிரதமராக இருந்த போதும் தற்போதைய அரசாங்கத்திலும் அம்னோதான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

கடந்த பொதுத் தேர்தலில் அக்கட்சி அடைந்த தோல்வி ஒரு தற்காலிகப் பின்னடைவுதான். எனவே   அதனை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் அது மீண்டெழுந்து பழையபடி பலமாகத் திகழும் என்றும் தோமஸ் கூறினார்.

காலங்காலமாக நாட்டின் மில்லியனுக்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்களையும் அம்னோ தனது கட்டுப்பாட்டில்தான் வைத்துள்ளது. மலேசியா என்றால் அம்னோ எனும் ஒரு நிலைப்பாட்டை அக்கட்சி உருவாக்கியுள்ளது என்றார் அவர்.

இந்தக் கூற்றைக் கியூப்பெக்ஸ் தலைவர் அட்னான் மாட் மறுத்துள்ள போதிலும் தோமஸின் கருத்தில் பொதிந்துள்ள உண்மை எல்லாருக்குமே தெரியும்.

அரசு ஊழியர்கள், ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்திற்குத்தான் விசுவாசமாக இருப்பார்களே தவிர எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இல்லை என அட்னான் கூறினார்.

ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து உண்மை நிலவரம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆட்சி மாறியுள்ள போதிலும் அரசாங்க ஊழியர்கள் அம்னோவிற்கே தொடர்ந்து விசுவாசமாக இருப்பதால் புதிய அரசாங்கம் நிர்வாகம் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்குகிறது என அப்போதை பிரதமர் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் அக்கட்சியின் செல்வாக்கு வெகுவாகக் குறையவும் வாய்ப்புள்ளது எனத் தோமஸ் எச்சரித்தார்.

கடந்த 18 மாதங்களாக நாட்டைச் சீர்குலைத்த  அரசாங்கத்தில் மட்டுமின்றி நடப்பு அரசாங்கத்திலும் அம்னோ முக்கியப் பங்காற்றுவதே இதற்கான மூலக் காரணமாகும்.

தகுதியும் திறமையும் ஆற்றலும் இல்லாதவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட அரசாங்கத்தினால் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளது மட்டுமின்றி 20,000திற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர்.

அது மட்டுமின்றி ஆயிரக்கணக்கான தொழில்கள் இழுத்து மூடப்பட்டுள்ள நிலையில் இலட்சக் கணக்கானோர் வேலையிழந்து பசி பட்டினியால் பரிதவிக்கின்றனர்.

நிறைய பேர் திவாலாக்கப்டுள்ளதோடு எண்ணிலடங்காதவர்கள் மன நோய்க்கு ஆளாகியுள்ளனர்.நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களின் அவலத்தையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.

இவற்றுக்கெல்லாம் பின்னணியில் இருந்த மோசமான அரசாங்கத்தின் மையத்தில் அங்கம் வகித்த அம்னோவை மக்கள் சுலபத்தில் மறந்துவிடமாட்டார்கள்.

எனவே அடுத்த பொதுத் தேர்தலில் மலாய்க்கார வாக்காளர்களில் ஏறத்தாழ 50 விழுக்காட்டினரை அம்னோ இழக்கக் கூடும் எனவும் தோமஸ் கணித்துள்ளார்.

பெர்சத்து, பெஜுவாங் மற்றும் மூடாப் போன்ற புதிய கட்சிகளின் உதயமும் இதற்கான மற்றொரு காரணமாகும்.

கருத்தாக்கம் – இராகவன் கருப்பையா