முன்னாள் பிரதமரின் சிறப்பு ஆலோசகருக்கு, சம்பளம் விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட்டது

முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினின் சிறப்பு ஆலோசகராகப் பணியாற்றிய போது, அகமது ஃபைசல் அஜுமுவின் (பிஎன்-தம்புன்) வருமான விவரங்கள் நேற்று மக்களவையில் வெளிப்படுத்தப்பட்டன.

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அகமது ஃபைசலின் சம்பளம் RM27,227.20, அவரின் குறுகிய சேவை காலத்தைக் கருத்தில் கொண்டு, சார்பு விகிதத்தில் வழங்கப்பட்டது என்றார்.

ஒரு மாதச் சம்பளச் சேவையை நிறுத்துவதற்கான மாற்று அறிவிப்பு இதில் அடங்கும்.

“இந்த நிலை ஓய்வூதியத்தைச் செலுத்துவதை உள்ளடக்குவதில்லை,” என்று லிம் லிப் எங் (பிஎச்-கெப்போங்) கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி முஹைதீனின் சிறப்பு ஆலோசகராக, பெர்சத்துவின் துணைத் தலைவரான அகமது ஃபைசலின் நியமனம் அறிவிக்கப்பட்டது.

எனினும், 15 அம்னோ எம்.பி.க்கள் அவருக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதை அடுத்து, ஆகஸ்ட் 16-ம் தேதி முஹைதீன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

இஸ்மாயில் சப்ரி, சமூகத் தொடர்புகள் குறித்த விஷயங்களில் அப்போதைய பிரதமருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஃபைசல் நியமிக்கப்பட்டார் என்றார்.

“அரசாங்கம் மற்றும் சமூகத் தலைவர்களுக்கிடையே நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதோடு, மக்கள் தொடர்பு கொள்கைகளின் பயனுள்ள புரிதலுக்கான வழிமுறைகளை மேம்படுத்துவதற்கும், மக்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் அரசாங்க விநியோக முறையை மேம்படுத்துவதற்கும் அவர் பொறுப்பு,” என்று இஸ்மாயில் சப்ரி மேலும் கூறினார்.

முன்னதாக, தம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் தனது குறுகிய கால சேவையின் போது, முன்னாள் பிரதமரின் சிறப்பு ஆலோசகராக அமைச்சர் அந்தஸ்துடன் பெற்ற மொத்த சம்பளத்தைக் குறிப்பிடுமாறு லிம் பிரதமரிடம் கேட்டார்.

சமீபத்தில், அஹ்மத் ஃபைசல், இஸ்மாயிலின் அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டதை அடுத்து, அவர் பேராக் மந்திரி பெசார் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

59 வாக்குகளில், 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவரை ஆதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.