கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது? – இந்திய அரசை அதிரவைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த முக்கியமான வழக்குகள் குறித்த சிறிய தொடரை வாரந்தோறும் புதன்கிழமை வழங்குகிறது பிபிசி தமிழ். அதன் மூன்றாம் பாகம் இது.

அரசு விரும்பாத கருத்தைச் சொல்லும் ஊடகங்களைத் தடைசெய்ய முடியுமா? இந்திய உச்ச நீதிமன்றத்தால் 1950ல் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்று, அப்படிச் செய்ய முடியாது என்கிறது. இதையடுத்து அரசியலமைப்புச் சட்டமே திருத்தப்பட்டது. அந்த வழக்கின் விவரம் என்ன?

பிரபல பத்திரிகையாளரான ரொமேஷ் தாப்பர் Cross Roads என்ற பத்திரிகையை 1949ல் துவங்கி, நடத்திவந்தார். தீவிர இடதுசாரியாக அறியப்பட்ட ரொமேஷ் தாப்பார், நேரு அரசின் மீதும் காங்கிரசின் கொள்கைகள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவந்தார். அதேபோல, இந்து மகாசபா, ஆர்எஸ்எஸ் மீதும் இந்த பத்திரிகை கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.

பொதுவாக இந்தியா முழுவதும் சிறையில் நடக்கும் கொடுமைகள், கைதிகள் மரணடைவது குறித்து தீவிர விமர்சனங்களையும் முன்வைத்தது. இந்த நிலையில், சேலம் மத்திய சிறைச்சாலையில் ஒரு பயங்கரமான சம்பவம் நடைபெற்றது.

சென்னை மாகாணத்தில் விவசாயிகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கம்யூனிஸ்ட் சங்கத் தொழிலாளர்கள், விவசாயத் சங்க நிர்வாகிகள் சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்தத் தருணத்தில் இடதுசாரி இயக்கங்கள் தடைசெய்யப்பட்டிருந்ததால், இந்தக் கைதிகள் மிக மோசமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதையடுத்து தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை விவரித்து மனு ஒன்றை எழுதி ஜனவரி 26, 1950ல் சமர்ப்பித்தனர்.

இதையறிந்த துணை ஜெயிலர், அதனைத் திரும்பப் பெரும்படி கூறினார். ஆனால், கைதிகள் இதைக் கேட்கவில்லை. பிப்ரவரி 11ஆம் தேதி பெரும் படையுடன் இடதுசாரிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் புகுந்த காவலர்கள், அவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கினர். துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் 22 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிகழ்வு குறித்து கிராஸ் ரோட் இதழ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. மெட்ராஸ் மாகாண அரசைக் கண்டித்து தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியாயின. இதையடுத்து 1950 மார்ச் 1ஆம் தேதி மெட்ராஸ் மாகாண அரசு இந்த இதழை மாகாணத்தில் விநியோகிக்கத் தடை விதித்தது. 1949ஆம் ஆண்டின் சென்னை மாகாண பொது ஒழுங்கு பராமரிப்புச் சட்டத்தின் பிரிவு 9 (1A)ன் கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டது.

தனது பத்திரிகைக்கு விதிக்கப்பட்ட தடையையும் அதற்கான சட்டப்பிரிவையும் எதிர்த்து ரொமேஷ் தாப்பர் உச்ச நீதிமன்றத்தல் வழக்குத் தொடர்ந்தார். இந்தத் தடையானது தனது அடிப்படை உரிமையான பேச்சுரிமைக்கும் கருத்துத் தெரிவிக்கும் உரிமைக்கும் எதிராக இருப்பதாகக் கூறினார்.

மனுதாரருக்காக வழக்கறிஞர் சி.ஆர். பட்டாபிராமன் வாதிட்டார். மெட்ராஸ் மாகாணத்திற்காக அட்வகேட் ஜெனரல் கே. ராஜா அய்யர் வாதிட்டார். இந்த விவகாரத்தை ஃபஸல் அலி சையத், ஹரிலால் ஜே கனியா, எம். பதஞ்சலி சாஸ்திரி, மெஹ்ர்சந்த் மகாஜன், சுதி ரஞ்சன் தாஸ் பி.கே. முகர்ஜி அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள்:

  1. மெட்ராஸ் மாகாண பொது ஒழுங்கு பராமரிப்புச் சட்டத்தின் 9 (1A) பிரிவின் கீழ் விதிக்கப்பட்ட ஆணையானது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19 (1) அளிக்கும் பேச்சு மற்றும் கருத்துரிமைக்கு எதிரானதா? அல்லது நாட்டின் பாதுகாப்பிற்காக நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று கூறும் பிரிவு 19(2)ன் கீழ் வருகிறதா?
  2. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, ஏற்கனவே இருந்த சட்டங்கள், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளுக்கு எதிராக இருந்தால், அவை செல்லாது என்கிறது பிரிவு 13(1). அதன்படி, சென்னை மாகாண பொது ஒழுங்குச் சட்டம், பேச்சுரிமையைத் தடுப்பதால், செல்லாது அல்லவா?
  3. மெட்ராஸ் மாகாணத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேறு ஒரு விவகாரத்தை எழுப்பினார். அதாவது, மனுதாரர் முதலில் உயர்நீதிமன்றத்தைத்தான் அணுகியிருக்க வேண்டும். நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியது தவறு என்றார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதலில் மூன்றாவது கேள்விக்கு விடையளித்தது. அதாவது, மனுதாரர் உயர் நீதிமன்றத்தையோ, உச்ச நீதிமன்றத்தையோ அணுகலாம். அவர் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதில் தவறில்லை என்றது.

முதல் இரண்டு விவகாரங்களைப் பொறுத்தவரை, ஐந்து நீதிபதிகள் ஒரே மாதிரியும் எஸ். பஸல் அலி மட்டும் எதிர்த்தும் தீர்ப்பளித்தனர். பெரும்பான்மை நீதிபதிகளின் சார்பில் எம். பதஞ்சலி சாஸ்திரி தீர்ப்பை எழுதினார்.

கருத்துச் சுதந்திரம் என்பது தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இல்லாதபோது, ஒரு சட்டத்தை வைத்து அதனை முடக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. பொது ஒழுங்கிற்காக தடை விதிப்பதாக மெட்ராஸ் மாகாண அரசு கூறுகிறது; பொது ஒழுங்கை பாதிப்பதாக எதை வேண்டுமானாலும் கூறி, அதனைத் தடைசெய்யலாம் என்பதால் இந்தத் தடை செல்லாது, அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ஃபஸல் அலியைப் பொறுத்தவரை, கருத்துச் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் அவசியம் எனக் கூறினார்.

கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவான, மிக முக்கியமான தீர்ப்பாக இந்தத் தீர்ப்பு அமைந்தது.

ஆனால், மத்திய அரசு இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தத் தீர்ப்பின் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் எனக் கருதியது. ஆகவே அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த முடிவுசெய்யப்பட்டது. பிரதமர் ஜவஹர்லால் நேருவும், சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரும் இந்தத் திருத்தத்தை வலியுறுத்தினர். வலதுசாரியான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியும் கருத்துச் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் இருக்க வேண்டுமென விரும்பினார்.

ஆகவே, இடஒதுக்கீட்டை அளிக்க வகைசெய்வதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டபோது, 19வது பிரிவிலும் திருத்தம் செய்யப்பட்டது. கருத்துச் சுதந்திரத்திற்கு நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என இந்தத் திருத்தம் கூறியது.

தலைமை நீதிபதியாக இருந்த கனியா 1951ல் திடீரென இறந்துவிட, கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக தீர்ப்பெழுதிய நீதிபதி எம். பதஞ்சலி சாஸ்திரி தலைமை நீதிபதியாக உயர்வுபெற வேண்டியிருந்தது. ஆனால், பிரதமர் அதனை விரும்பவில்லை. இருந்தபோது மற்ற நீதிபதிகள் வலியுறுத்த, வேறு வழியில்லாமல் பதஞ்சலி சாஸ்திரி தலைமை நீதிபதியாகி, 1954வரை பணியாற்றினார்.

கருத்துச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூறிய நீதிபதி ஃபஸல் அலி 1951 செப்டம்பரில் ஓய்வுபெற்றார். இருந்தபோதும் மீண்டும் அவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 1952வரை பணியாற்றினார். பிறகு, ஒரிசாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1954ல் மாநில மறுசீரமைப்பு கமிஷன் உருவாக்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். பிறகு, 1956ல் அசாமின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்தத் தீர்ப்பும் அதைத் தொடர்ந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும் கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதத்தை முடித்துவைக்கவில்லை. அவை இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது என்ற கேள்வி இன்னமும் நீடிக்கிறது.

(நன்றி BBC TAMIL)