கோவிட் -19 (செப். 17) : 346 இறப்புகள், இது தரவு பின்னடைவு காரணமான எண்ணிக்கை

கிதப் (Github) தளத்தில் உள்ள சுகாதார அமைச்சின் தரவுகளின் படி, கோவிட் -19 காரணமாக நேற்று (செப்டம்பர் 16) மொத்தம் 346 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதனால் இறப்பு எண்ணிக்கை 22,355 ஆக உயர்ந்துள்ளது.

அந்த எண்ணிக்கையில், 105 பேர் (30.35 விழுக்காடு) மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பே இறந்தனர்.

346 இறப்புகளில், கடந்த ஏழு நாட்களில் 179 பேர் இறந்தனர், நேற்று ஒரே ஒரு நோயாளி இறந்தார்.

மேலும் 165 இறப்புகள், ஒரு வாரத்திற்கு முன்பு நிகழ்ந்தன. தரவு பின்னடைவு காரணமாக அவை இப்போது அறிவிக்கப்படுகின்றன.

கடந்த 30 நாட்களில் சராசரி தினசரி இறப்பு 309 ஆகும். ஏழு நாள் சராசரி இறப்புகள் 410 இறப்புகள்.

புதிய இறப்புகளில் 27.17 விழுக்காடு, (94) சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதுவே ஆக அதிக எண்ணிக்கையாகும்.

அதைத் தொடர்ந்து, கெடா (82), ஜொகூர் (59), சபா (47), பினாங்கு (30), சரவாக் (14), மலாக்கா (4), திரெங்கானு (4), கிளந்தான் (3), பேராக் (3), பெர்லிஸ் (3) மற்றும் கோலாலம்பூர் (3).

நெகிரி செம்பிலான், பஹாங், லாபுவான் மற்றும் புத்ராஜயாவில் எந்த இறப்பும் பதிவாகவில்லை.

நேற்றைய நிலவரப்படி, கோவிட் -19 செயலில் உள்ள நேர்வுகள் 227,120 ஆகும் – ஒரு வாரத்திற்கு முந்தைய 242,805 நேர்வுகளிலிருந்து இது 6.46 விழுக்காடு குறைவு.

முன்பு, சுகாதார அமைச்சு, புதிய நேர்வுகளுடன் இறப்பு புள்ளிவிவரங்களை ஒவ்வொரு மாலையிலும் அறிவித்தது.

ஆனால், தற்போது மரண எண்ணிக்கை நள்ளிரவில் அறிவிக்கப்படுவதால், மலேசியாகினி ஒரு நாள் கழித்து அதனை வெளியிடும்.