மாமத யானைகளை மீண்டும் உருவாக்கி பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முயற்சி

சில விஞ்ஞானிகளும் தொழிலதிபர்களும் மாமத யானைகளை (Woolly Mammoth) மீண்டும் உயிர்ப்பிக்கும் திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன உயிரினங்கள் இவை.

லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்து பனியில் உறைந்து கிடக்கும் மாமதங்களின் உடற்பகுதிகளிலிருந்து டி.என்.ஏ. வை எடுத்து மரபணு பொறியியல் தொழில்நுட்பம் மூலமாக அவற்றை மீண்டும் உருவாக்கும் திட்டம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

கொலாஸல் என்ற நிறுவனம், இதுவரை இந்தத் திட்டத்துக்காக 15 மில்லியன் டாலர்களை ஸ்பான்சர் பணமாகப் பெற்றிருக்கிறது. மாமத யானை மற்றும் ஆசிய யானையின் கலப்பினம் ஒன்றை உருவாக்கினால், கிட்டத்தட்ட அது சடை யானையைப் போன்றே இருக்கும் என்றும், சைபீரியாவின் பரந்த வெளிகளில் இந்த விலங்குகள் விடப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

“எங்களுக்கு இது ஒரு முக்கியமான மைல்கல்” என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்குப் பேட்டியளித்திருக்கிறார் இந்தத் திட்டத்தின் பிதாமகர் முனைவர் ஜார்ஜ் சர்ச். ஹார்வேர்ட் மருத்துவக் கழகத்தைச் சேர்ந்த இவர், “இது உலகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்கிறார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக தன் ஓய்வு நேரங்களை எல்லாம் மாமதங்களை மீட்டெடுக்கும் இந்தத் திட்டத்தை செம்மைப்படுத்தும் வேலையில் ஒத்த சிந்தனையுடைய சிலரோடு இவர் தொடர்ந்து உழைத்துவருகிறார்.

சர்ச் மற்றும் அவரது குழுவினர் இதை நன்றாக அணுகினாலும் எல்லாரும் இதை ஏற்பதில்லை. சிலரோ, அழிந்துவிட்ட விலங்குகளை மீண்டும் கொண்டு வருவதில் உள்ள அறப்பிரச்சனைகளைக் குறிப்பிடுகிறார்கள்.

“இதில் பல பிரச்சனைகள் வரும்” என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புதைபடிவ ஆய்வாளர் பெத் ஷாபிரோ.

சடை யானைகள் அழிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதால் அவை எப்படி நடந்துகொள்ளும் என்பதுபற்றி விஞ்ஞானிகள் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே இதில் பிரச்சனைகள் வரும் என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.

யோசனையின் தொடக்கப்புள்ளி

2013ல் சர்ச் இந்த யோசனையை முதன்முதலில் தெரிவித்தார். அப்போது, அழிந்துபோன விலங்குகளின் முழு மரபணுவையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக, புதைபடிவங்களில் இருக்கும் டி.என்.ஏ துணுக்குகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்துகொண்டிருந்தார்கள்.

டி.என்.ஏவைப் படிப்பது, தொகுப்பது ஆகியவற்றில் வல்லுநரான முனைவர் சர்ச், ஒரு குறிப்பிட்ட விலங்கோடு தொடர்புடைய இன்றைய விலங்கின் மரபணுவையும் அழிந்து போன விலங்கின் மரபணுவையும் சேர்ப்பதன் மூலமாக, அழிந்த இனத்தைத் திரும்பக் கொண்டு வர முடியுமா என்ற கேள்வியை எழுப்பினார்.

இப்போது இருக்கும் ஆசிய யானைகள், மாமத யானைகளின் நெருங்கிய உறவினர் என்பதால், இந்தப் பரிசோதனைக்கு மாமத யானைகளே சிறந்தவை என்று பலருக்கும் தோன்றியது. மாமத யானை மற்றும் ஆசிய யானைகளுக்கான பொது மூதாதையர் இனம் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வசித்தது. மாமத யானைகளின் டி.என்.ஏ சைபீரியாவில் அதிகம் கிடைக்கிறது.

சுற்றுச் சூழலில் ஒரு சமநிலையைக் கொண்டு வருவதற்கும் மாமத யானைகள் உதவும் என்று தான் நம்புவதாகத் தெரிவிக்கிறார் முனைவர் சர்ச்.

சைபீரியா மறும் அமெரிக்காவின் பனிப்பிரதேசங்களில் உள்ள வெப்பநிலை, புவி வெப்பமடைதலால் அதிகரித்துவிட்டது. ஆகவே கரியமில வாயு அதிக அளவில் வெளியேறுகிறது.

இப்போதைய சைபீரியாவின் தூந்திர பனிப் பரப்புகளில் பெரும்பாலும் பாசிதான் வளர்கிறது. ஆனால் மாமத யானைகள் இருந்தபோது, அவை பாசிகளைக் கிழித்து மரங்களை உடைத்து, தங்களது எச்சங்களின்மூலம் மண்ணுக்கு உரமிட்டதால் அங்குப் புல்வெளிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வாழிடத்துக்கு மாமதங்கள் பாதுகாவலர்களாக இருந்தன எனவும் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாமத யானைக் கூட்டங்கள் மீண்டும் இங்கு விடப்பட்டால் மண் அரிப்பு தடுக்கப்பட்டு, புல்வெளிகள் உருவாகும் என்பதால் கரியமில வாயு வெளியேறுவதும் குறையும் என்று சர்ச் தெரிவிக்கிறார்.

பத்திரிக்கையாளர்கள் இதை சுவாரஸ்யமான விஷயமாக அணுகினாலும் முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படவில்லை. இவரால் தனது ஆராய்ச்சிக்காக ஒரு லட்சம் டாலர்களை மட்டுமே திரட்ட முடிந்தது. நன்றாக நிதி கிடைக்கும் வேறு பரிசோதனைகளிலிருந்து அவர் நிதியை எடுத்துக்கொண்டார், “நான் இது மெதுவாகத்தான் செல்லும் என்று நினைத்தேன். அப்படியே திட்டமிட்டேன்” என்கிறார்.

ஆனால் 2019ல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த செயற்கை அறிவு நிறுவனமான ஹைப்பர் ஜெயண்ட்டின் நிறுவனர் பென் லாமை சர்ச் சந்தித்தார். சர்ச்சின் திட்டம் பற்றிய பத்திரிக்கை செய்திகளால் பென் ஈர்க்கப்பட்டிருந்தார்.

“சர்ச்சுடன் நேரம் செலவழித்தேன். ஆய்வகத்தில் ஒரு நாள் இருந்தேன். அந்தத் திட்டத்தில் ஆர்வம் வந்துவிட்டது” என்கிறார் லாம். சர்ச்சுடன் அவருக்கு உடனடியாக ஒரு நட்புணர்வு ஏற்பட்டது.

சர்ச்சின் யோசனையை செயல்படுத்துவதற்காக கொலாசல் என்ற அமைப்பை நிறுவுவதில் லாம் முனைப்பு காட்டினார்.

இரண்டு மீட்டுருவாக்கத் தொழில்நுட்பங்கள்

அழிந்த விலங்குகளை இரண்டு வழிகளில் மீட்டுருவாக்கம் செய்ய முடியும். ஒன்று குளோனிங், இரண்டாவது மரபணுப் பொறியியல்.

முதலாவது நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த செம்மறியாடு டாலியை உருவாக்கப் பயன்பட்ட அதே தொழில்நுட்பம்தான். ஒரு விலங்கின் டி.என்.ஏவை இன்னொரு விலங்கின் கருவுற்ற முட்டைக்குள் செலுத்திவிட்டு, அந்த முட்டை ஒரு வாடகைத்தாயின் வயிற்றுக்குள் வைக்கப்படும். பைரேனியன் ஐபிக்ஸ் என்ற விலங்கினம் 2000ம் ஆண்டுகள் முன்பு அழிந்தது. அந்த விலங்கிற்கு இந்த முறையைப் பயன்படுத்த முடியுமா என்று விஞ்ஞானிகள் முயற்சி செய்தனர்.

ஐபெக்ஸின் உறைந்த தோல் பகுதியிலிருந்து டி.என்.ஏ எடுக்கப்பட்டது. வாடகைத்தாயான ஆடு ஒரு ஐபெக்ஸைப் பெற்றெடுத்தது. ஒரு முழு இனமே மீட்டெடுக்கப்பட்ட முதல் நிகழ்வு இது. ஆனால் அந்தக் குட்டி 7 நிமிடங்கள் மட்டுமே உயிரோடு இருந்தது என்பதால் இரண்டு முறை ஒரு விலங்கு அழிந்த முதல் நிகழ்வாகவும் இது மாறிவிட்டது.

சைபீரியாவின் பனிப் பரப்பில் மாமதங்களின் பல உடல் எச்சங்கள் உள்ளன என்றாலும் நீண்டகாலமாக உறைந்த நிலையிலேயே இருப்பதால் டி.என்.ஏ சிதைந்துபோயிருக்கிறது.

விஞ்ஞானிகள் ஏற்கனவே மாமத யானையின் மரபணுக்களைப் படித்துவிட்டார்கள். ஆனால் அந்த இனம் உயிரோடு இருந்தபோது எப்படி இருக்குமோ அந்த வடிவத்திலேயே முழு டி.என்.ஏவை மீட்டுருவாக்கம் செய்ய முடியவில்லை.

இங்குதான் இரண்டாவது மீட்டுருவாக்க முறை உதவுகிறது. இதை கிரிஸ்பர் மரபணு தொகுப்பு தொழில்நுட்பம் என்று அழைக்கிறார்கள். உயரத்தில் வசிக்க யானைகளுக்கு உதவும் குறிபிட்ட மரபணுக்களை மட்டும் மாமத யானைகளிலிருந்து எடுத்துக்கொண்டு, அவற்றின் நெருங்கிய உறவினர்களான ஆசிய யானையில் அந்த மரபணுக்களைச் சேர்த்துவிடுவார்கள். பிறகு இந்த மாற்றப்பட்ட மரபணு, கருவுற்ற ஒரு முட்டையில் செலுத்தப்படும். வாடகைத்தாயான ஒரு யானைக்குள் இது வைக்கப்படும்போது கலப்பினம் உருவாகும்.

இந்த முறையில் சிக்கல்களும் உண்டு. ஆர்க்ட்டிக் பகுதியில் தப்பிப் பிழைக்க எந்த மரபணுக்கள் தேவை என்று பிரித்தெடுக்கும் அளவுக்கு விஞ்ஞானிகளுக்கு இந்த யானைகளின் உயிரியல் தெரியாது.

ரோமங்களால் மூடப்பட்டு, நீள்வட்ட வடிவிலான மண்டையோட்டுடன், தடிமனான கொழுப்புப் படலத்துடன் அந்த விலங்கு இருந்திருக்கவேண்டும் என்பது விஞ்ஞானிகளுக்குப் புரிகிறது. மற்றவை எல்லாம் புதிரானதாகவே இருக்கின்றன.

மரபணு மூலம் வரும் மீட்பர்கள்

தற்போது புவியில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான விலங்கு இனங்களும், தாவர இனங்களும் அழியும் அபாயத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கொலாஸல் திட்டம் மட்டும் வெற்றியடைந்தால், மரபணுத் தொழில்நுட்பம் ஒரு மீட்கும் சக்தியாக அமையும் என்று லாம் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

அழிந்துவரும் இனங்களில் மரபணுப் பொறியியல் அல்லது க்ளோனிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன்மூலமாக மரபணுப் பன்மைத்துவத்தை அதிகரிக்கும் முயற்சி மரபணு மீட்பு (Genetic Salvation) என்று அழைக்கப்படுகிறது.

எத்தனையோ விலங்குகள் மீட்கப்படுவதற்காகக் காத்திருக்கும் நிலையில் மாமத யானை மீது கொலாசல் ஆர்வம் காட்டுவது ஏன்?

“இது ஒரு வகையான பரிசோதனை. இது நடக்கிறதா என்று முதலில் பார்க்கலாம்” என்கிறார் லாம்.

இந்த நோக்கம் நிறைவேறாவிட்டாலும் விலங்குகளின் அழிவைத்தடுக்கும் தொழில்நுட்பங்கள் இதனால் உருவாக்கப்படலாம். அதற்கு உரிமம் பெற்று விற்பனைக்கும் கொண்டுவரலாம். மாமத யானையைத் திரும்பக் கொண்டுவருவதை விட இலகுவான சில தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஒரு முயற்சி இது.

(நன்றி BBC TAMIL)