எம்எம்2எச் கடுமையான நிபந்தனைகள் : ஜொகூர் சுல்தான் வருத்தம், பிரதமரைச் சந்திக்க விருப்பம்

‘மலேசியா எனது இரண்டாவது வீடு’ திட்டத்தின் (மலேசியா மை செகண்ட் ஹோம் -எம்எம்2எச்) புதிய கடுமையான நிபந்தனைகளை மறுஆய்வு செய்ய உள்துறை அமைச்சு (கேடிஎன்) மறுத்ததால், ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் ஏமாற்றம் அடைந்தார்.

சுல்தான் இப்ராகிமின் கூற்றுப்படி, புதிய நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் முன்பு உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினிடம் கூறியிருந்தார்.

“இருப்பினும், நாடாளுமன்றத்தில் நாம் கேட்பது, எம்எம்2எச் பங்கேற்பாளர்களின் விண்ணப்பங்களை ஒவ்வொரு வழக்கு அடிப்படையில் பரிசீலிக்கும் ஒரு வாக்குறுதியாகும், இது எதிர்பாராதது மற்றும் ஏமாற்றமளிக்கிறது.

“புதிய அளவுகோல்களுக்குப் பாதுகாப்பு முக்கிய நியாயமாக இருந்தால், குற்றவாளியாகக் கருதப்படும் எம்எம்2எச் பாஸ் வைத்திருப்பவர்களின் விசாக்களை மட்டுமே அமைச்சு இரத்து செய்ய வேண்டும், அதைவிடுத்து அனைத்து பங்கேற்பாளர்களையும் அதில் ஈடுபடுத்தக்கூடாது,” என்று அவர் ராயல் பிரஸ் அலுவலகத்திடம் (ஆர்பிஓ) கூறினார், இச்செய்தி அவரது முகநூலிலும் வெளியானது.

அதே நேரத்தில், இந்தப் பிரச்சினையை தனிப்பட்ட முறையில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பிடம் விரைவில் எழுப்ப உள்ளதாகவும் சுல்தான் இப்ராகிம் கூறினார்.

ஜொகூர் எம்எம்2எச்-இன் பிரபலமான இடங்களில் ஒன்றாகும், மேலும் மாநிலத்தின் வருவாய்க்கும் அது பங்களிக்கிறது.

புதிய எம்எம்2எச் தகுதி நிபந்தனைகளின் கீழ், பங்கேற்பாளர்களின் குறைந்தபட்ச மாத வருமானம் RM10,000 முதல் RM40,000 வரை என, 400 விழுக்காடு அதிகரிக்கப்படுகிறது.

குறைந்தபட்ச நிலையான வைப்புத்தொகை, RM150,000-இலிருந்து RM1 மில்லியனாக அதிகரிக்கப்பட்டது.

செப்டம்பர் 14-ம் தேதி, மக்களவையில் முஹம்மது பக்தியார் வான் சிக் (பாலிக் புலாவ் – பிகேஆர்) கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது, ​​எம்எம்2எச் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் புதிய பங்கேற்பாளர்களுக்குத் தற்போதைய நடைமுறையை மேம்படுத்தும் நோக்கத்தை அது கொண்டுள்ளது என்று ஹம்சா தற்காத்தார்.

அதே நேரத்தில், பழைய பங்கேற்பாளர்களும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஒவ்வொருவராக ஆய்வு செய்யப்படுவார்கள் என்றும் அந்த லாருட் எம்.பி. விளக்கினார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், எம்எம்2எச் திட்டம் முன்பு நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதால், புதிய கடுமையான நிபந்தனைகள் நாட்டை மட்டுமே பாதிக்கும் என்றும் ஜொகூர் சுல்தான் தெரிவித்தார்.

“எம்எம்2எச் என்பது மலேசியப் பொருளாதாரம், மக்கள் மற்றும் அரசாங்கத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டமாகும்.

“பங்கேற்பாளர்களைப் பாதிக்கும் வகையில், நாம் இப்போது கடுமையான நிபந்தனைகளை விதித்தால், அது உலகின் பார்வையில் நாட்டின் பிம்பத்தைப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

“இந்தத் திட்டத்தில் கடுமையான முடிவை எடுக்காமல், இந்த விஷயம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.