ஒப்பந்த மருத்துவர் பிரச்சனை : 100 நாட்களுக்குள் தீர்க்கப்படும் என்ற கேஜே வாக்குறுதியில் நம்பிக்கை

ஒப்பந்த மருத்துவர்கள் பணிநிறுத்த இயக்கம் (கெராக்கான் ஹர்த்தால் டாக்டர் கொன்ராக்ட் – எச்.டி.கே.) அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள புதிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனுக்கு இடம் தருவதாக இன்று கூறியது.

எச்.டி.கே. செய்தி தொடர்பாளர் டாக்டர் முஸ்தபா கமல் ஏ அஸிஸ், நேற்று நடந்த இயங்கலை சந்திப்பின் போது ஒப்பந்த டாக்டர்கள் எதிர்கொண்ட பிரச்சனை குறித்து அரசாங்கம் கைரிக்கு விளக்கம் அளித்ததாகவும், தீர்வுகாண அவர்கள் தொடர்ந்து விவாதிக்க உள்ளதாகவும் மலேசியாகினியிடம் கூறினார்.

“இதுவரை, எதுவும் ஒப்புக்கொள்ளப்படவில்லை.

எச்.டி.கே. மற்றும் சுகாதார அமைச்சு இடையே விவாதிக்கப்பட்ட திட்டம் குறிப்பிட்டு, “நாங்கள் தொடர்ந்து சந்திப்புகளை நடத்துவோம். அந்த நேரத்தில், ஆலோசனைகளை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

நேற்று, கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் நடந்த ஹர்த்தால் குறித்து ஒப்பந்த மருத்துவர்கள் குழுவுடன் இயங்கலை சந்திப்பை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சந்திப்பின் போது, ​​எழுப்பப்பட்ட ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒரு சிறந்த தீர்வைக் கொடுக்கப் பாடுபடுவதற்கு தனது உறுதிப்பாட்டை கைரி வெளிப்படுத்தினார்.

ஒன்றரை மணிநேரக் கூட்டத்தில் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மற்றும் சுகாதார அமைச்சின் பொதுச் செயலாளர் முகமட் ஷபிக் அப்துல்லா உட்பட சுமார் 20 ஒப்பந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

2016-ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இப்பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள கைரிக்கு நேரம் வழங்கப்பட வேண்டும் என்று முஸ்தபா நம்புகிறார்.

“கைரி தனது வார்த்தையைக் கடைபிடிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம், அவர் இந்தப் பிரச்சினையை 100 நாட்களுக்குள் தீர்ப்பார் (சுகாதார அமைச்சராக),” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் ஒப்பந்த சுகாதார பணியாளர்கள் ஜூலை 26 அன்று நாடு முழுவதும் ஹர்த்தால் நடத்தியதால் எச்டிகே இயக்கம் வேகம் பெறத் தொடங்கியது.

அவர்களது கோரிக்கைகளில் 2016-இல் தொடங்கிய ஒப்பந்த அமைப்பில் உள்ள பலவீனங்களுக்கான தீர்வுகள், வேலை பாதுகாப்பின்மை மற்றும் நிச்சயமற்ற தொழில் வாய்ப்புகள் போன்றவையும் அடங்கும்.