பணக்கார நாடுகளிடம் கோவிட் தடுப்பூசி குவியல்: 241 மில்லியன் தடுப்பூசிகள் வீணாகுமா?

உலகத் தலைவர்கள் அனைவருமாகச் சேர்ந்து உலகின் மொத்த மக்கள்தொகையில் 70% பேருக்குத் தடுப்பூசி வழங்குவதாக உறுதியளிக்குமாறு அதிபர் பைடன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் பல வளர்ந்த நாடுகளில் தேவைக்கதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதால், அவை வீணாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கோடைகாலத்தில் இரானை நோக்கிச் செல்லும் விமானத்தில் ஏறினார் பஹார். நான்கு வருடம் கழித்து தன்னுடைய தந்தையை சந்திக்க இருப்பதால் மகிழ்ச்சியாக இருந்தார். கொரோனா இரண்டாவது அலை இரானையும் பஹாரின் குடும்பத்தையும் கடுமையாக பாதிக்கப்போகிறது என்று அவர் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்.

மகனுக்குத் திருமண ஏற்பாடு செய்துகொண்டிருந்த ஒரு குடும்ப நண்பர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இறந்தார். அப்பாவின் மாமா, அத்தை என்று பலரும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டார்கள். பாட்டிக்கு ஒரு தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தியிருப்பதை நினைத்து பஹார் மிகவும் பயந்துவிட்டார். 20 வயதான பஹார் அமெரிக்காவில் வசிக்கிறார். ஏப்ரலில் இவருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டது.

தடுப்பூசியால் தான் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரிந்தாலும், குடும்பத்தில் வேறு யார் நோய்வாய்ப்படுவார்கள் என்று நினைத்தபடியே அப்பாவின் வீட்டில் பஹார் தங்கியிருந்தார். இரானில் தடுப்பூசித் தட்டுப்பாடு இருந்தது என்பதால் பஹாரின் குடும்பத்தில் ஒருசிலருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தது. இரான் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பியவுடன் தன் அப்பாவுக்குத் தொற்று ஏற்பட்டதாக பஹாருக்குத் தெரியவந்தது. பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த பஹார் பயத்தில் உறைந்துபோனார்.

“அது ஒரு வகையான குற்ற உணர்வு. இரண்டு டோஸ் ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அங்கிருந்து கிளம்பும்போது நான் ஆரோக்கியமாக இருந்தேன்” என்கிறார் பஹார். அவரது தந்தை குணமடைந்துவிட்டார் என்றாலும் பல மூத்த உறவினர்கள் கொரோனாவால் இறந்துவிட்டார்கள். “அது எனக்குக் குற்ற உணர்வைத் தருகிறது” என்கிறார்.

தடுப்பூசி கையிருப்பில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வு, புள்ளிவிவரங்களில் துல்லியமாகத் தெரிகிறது. உலகில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் ஒரு தவணை தடுப்பூசி கூடப் பெறவில்லை.

மொத்த தடுப்பூசிகளில் 75% 10 நாடுகளுக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கிறது ஹ்யூமன் ரைட் வாட்ச் அமைப்பு. இதுவரை உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளில் 50%, உலகின் 15% மக்களுக்கு சென்றிருக்கிறது என்று கணக்கிட்டிருக்கிறது எக்கனாமிக் இன்டெலிஜென்ஸ் அமைப்பு. உலகின் பணக்கார நாடுகள், ஏழை நாடுகளை விட 100 மடங்கு அதிக மக்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கியிருக்கின்றன.

கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய ஜி-7 நாடுகள், அடுத்த ஆண்டுக்குள் ஏழை நாடுகளுக்கு ஒரு பில்லியன் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதாக ஜூன் மாதம் அறிவித்தன.

“அந்த அறிவிப்பைப் படித்தவுடன் சிரிப்புதான் வந்தது. இதுபோல நிறைய படித்திருக்கிறேன். அதெல்லாம் நடக்காது என்பது தெரிந்ததுதான்” என்கிறார் எக்கனாமிக் இன்டெலிஜென்ஸின் அறிக்கையை உருவாக்கிய முக்கிய ஆராய்ச்சியாளரும் முன்னாள் தூதருமான அகாதெ டெமரைஸ்.

ஜி-7 நாடுகளின் அறிவிப்பின்போது அதில் 100 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க இருப்பதாக பிரிட்டன் உறுதியளித்திருந்தது. இதுவரை அது 9 மில்லியன் தடுப்பூசிகளை மட்டுமே வழங்கியிருக்கிறது.

அமெரிக்கா 580 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் என்று அதிபர் பைடன் அறிவித்தார். இதுவரை அமெரிக்காவிலிருந்து 140 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. ஐரோப்பிய யூனியன் 250 மில்லியன் தடுப்பூசிகள் தருவதாக உறுதியளித்திருந்த நிலையில், அதில் 8% தடுப்பூசிகள் மட்டுமே பிற நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்டிருக்கின்றன.

பல நாடுகளைப் போலவே இரானும் கோவாக்ஸ் திட்டத்தின்மூலம் தடுப்பூசிகளை வாங்கியிருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆதாரவோடு அவசியமாகத் தேவைப்படும் நாடுகளுக்குத் தடுப்பூசிகளைக் கொண்டு சேர்க்கும் திட்டம் இது. இந்தத் திட்டத்தின்மூலம் தடுப்பூசிகள் வாங்கப்பட்டு மத்தியதர பொருளாதாரம் கொண்ட நாடுகளுக்குக் குறைந்த விலையில் அவை விற்கப்படுகின்றன. ஏழை நாடுகளுக்குக் கோவாக்ஸ் திட்டத்தின்மூலம் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆனால் கோவாக்ஸ் திட்டம் கடுமையான தட்டுப்பாட்டை சந்தித்துவருகிறது. 2021ல் இரண்டு பில்லியன் தடுப்பூசிகளை விநியோகம் செய்ய வேண்டும் என்ற இலக்கு இருந்தது. இதில் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து வரும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் மே மாதம் இந்தியாவில் கடுமையான கோவிட் இரண்டாம் அலை இருந்ததால், இந்திய அரசு ஏற்றுமதிக்குத் தடை விதித்தது.

தடைவிதிக்கப்பட்ட பின்பு, பணக்கார நாடுகளின் தடுப்பூசி நன்கொடையை நம்பியிருக்கும் கட்டாயத்துக்குக் கோவாக்ஸ் திட்டம் தள்ளப்பட்டது. ஆனால் போதுமான தடுப்பூசிகள் வரவில்லை. சில நாடுகளில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 2% பேருக்குக் கூட தடுப்பூசி வழங்கப்படவில்லை.

“இப்போதைக்குக் குறைவான எண்ணிக்கையில் திடீரென்று தடுப்பூசிகள் வருகின்றன. அவற்றின் காலாவதி தேதிகளும் உடனடியாக அந்த மருந்துகளைத் தீர்க்கும்படி இருக்கின்றன. தேவைப்படும் நாடுகளுக்குப் பயனளிக்கும்படி இவற்றை உடனே கொண்டு செல்வதற்கு அதிகமான திட்டமிடலும் உழைப்பும் தேவைப்படுகிறது” என்கிறார் கோவாக்ஸின் நிர்வாக இயக்குநர் ஆரெலியா ந்யூகென்.

உலக அளவில் தடுப்பூசிகள் குறைவு என்று இதை சொல்ல முடியாது. பணக்கார நாடுகள் தேவைக்கதிகமான தடுப்பூசிகளை வைத்திருக்கின்றன என்கிறது இந்த தடுப்பூசிகளின் உலகளாவிய நிலையை ஆராய்ந்துவரும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான ஏர்ஃபினிடி. ஒவ்வொரு மாதமும் 1.5 பில்லியன் தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் 11 பில்லியன் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும்.

“பெரிய எண்ணிக்கையில் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த மூன்று, நான்கு மாதங்களில் உற்பத்தி விகிதம் பெருமளவில் அதிகரித்திருக்கிறது” என்கிறார் ஏர்ஃபினிட்டியைச் சேர்ந்த முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் மேட் லின்லி.

பூஸ்டர் தவணை தடுப்பூசிகளை வழங்கினால்கூட, உலகின் பணக்கார நாடுகளிடம் தேவைக்கு அதிகமாக 1.2 பில்லியன் தடுப்பூசிகள் மீதமிருக்கும்.

அவற்றில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 241 மில்லியன் தடுப்பூசிகளை உடனே பயன்படுத்தாவிட்டால் அவை காலாவதியாகிவிடும் என்று குறிப்பிடும் லின்லி, காலாவதி தேதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தத் தடுப்பூசிகள் தேவைப்படும் நாடுகளுக்கு வழங்கப்பட்டால் மட்டுமே அவை தடுப்பூசிகளை ஏற்கும் என்கிறார்.

“பணக்கார நாடுகள் பேராசையுடன் இருக்கின்றன என்றூ நான் நினைக்கவில்லை. எந்தத் தடுப்பூசி வேலை செய்யும் என்று தெரியாததால் பல தடுப்பூசிகளை வாங்கி வைத்திருக்கிறார்கள்” என்கிறார் லின்லி.

தங்களது அறிக்கையின்மூலம் போதுமான அளவில் தடுப்பூசிகள் கிடைப்பதால் கூடுதல் கையிருப்பு வைத்திருக்கவேண்டாம் என்று அரசுகளுக்குப் புரியவைக்க முடியும் என்று ஏர்ஃபினிட்டி நம்பிக்கை தெரிவிக்கிறது. இப்போது இருக்கும் தேவைக்கதிகமான தடுப்பூசிகளை இலவசமாக பிற நாடுகளுக்கு வழங்கிவிட்டு, அடுத்தடுத்த மாதங்களில் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளுக்காக அவை காத்திருக்கலாம்.

“திடீரென்று தட்டுப்பாடு ஏற்படும் என்று அந்த நாடுகள் நினைக்கின்றன. தவிர, தங்களுக்கே தடுப்பூசி தேவைப்படும் நிலையில், வாக்காளர்கள் இலவச தடுப்பூசி நன்கொடையை விரும்ப மாட்டார்கள் என்பதால் அரசுகளுக்கு அரசியல் அழுத்தமும் இருக்கிறது” என்று அகாதே தெரிவிக்கிறார்.

தங்களிடம் கூடுதல் தடுப்பூசிகள் இல்லை என்றும் ஆஸ்திரேலியாவுடன் 4 மில்லியன் தடுப்பூசிகளைப் பகிரப்போவதாகவும் பிரிட்டன் அறிவித்திருக்கிறது.

“பிரிட்டனில் தடுப்பூசி கையிருப்பு மற்றும் விநியோகத்தை கவனமாக நிர்வகித்துவருகிறோம். தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதியான அனைவருக்கும் உடனடியாகத் தடுப்பூசி வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்” என்கிறார் உடல்நலம் மற்றும் சமூக நலத்துறையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர்.

அரசுகள் மட்டும் இதில் கவனம் செலுத்தினால் போதாது என்கிறார் ஆரெலியா ந்யூகென்.

“உற்பத்தியாளர்கள், கோவாக்ஸ் திட்டத்துக்குத் தங்களின் பங்களிப்பைச் செய்ய வேண்டும். ஏற்கனவே போதுமான தடுப்பூசிகளை வைத்திருக்கும் நாடுகளுடனான ஒப்பந்தத்தை விட இதன்மீது கவனம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு மாதமும் 1.5 பில்லியன் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றால், ஏன் மிக்குறைந்த அளவிலான தடுப்பூசிகள் மட்டுமே ஏழை நாடுகளுக்கு வந்து சேர்கின்றன? கோவாக்ஸ் திட்டத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. வரிசையில் தங்களது இடத்தை அரசுகள் விட்டுக்கொடுக்கவேண்டும். அப்போதுதான் எங்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் வந்து சேரும்” என்கிறார்.

பஹார் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பொறுத்தவரையில், தடுப்பூசி என்பது எண்களும் கையிருப்புகளும் அல்ல, நண்பர்களும் உறவினர்களும் பாதுகாப்பாக இருப்பது.

சில நாட்களுக்கு ஒருமுறை, கொரோனாவால் உறவினர் இறந்த செய்தியை அவர் கேள்விப்படுகிறார். பல்கலைக்கழக நண்பர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று சொல்லும்போது முன்பெல்லாம் அவர் வாதாடுவார், ஆனால் இப்போது அவருக்கு அது கவலையளிப்பதாகக் கூறுகிறர்.

“இந்த உணர்விலிருந்து விடுபட நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. வசதி வாய்ப்புள்ளவர்கள் அதைப் பயன்படுத்தாமல் இருப்பதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது” என்கிறார் அவர்.

(நன்றி BBC TAMIL)