ஸ்பெயினின் லா பால்மா எரிமலை வெடிப்பு; தொடர்ந்து வெளியாகும் நெருப்புக் குழம்பு

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் வடமேற்கு ஆப்பிரிக்க கடற்கரையையொட்டி அமைந்துள்ள கானெரி தீவுகளில் லா பால்மா எரிமலை அமைந்துள்ளது. சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இந்த தீவில் கடந்த ஞாயிறன்று 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியது.

இந்த எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட கரும்புகையானது சில கிலோ மீட்டர்கள் தூரம் வரை வானத்தில் பரவியது. இதன் பின்னர் அந்த எரிமலையில் இருந்து தொடர்ச்சியாக நெருப்பு குழம்பு வெளியாகி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 2-வது முறையாக லா பால்மா எரிமலை வெடித்துள்ளது.

எரிமலை வெடிப்பிற்கு முன்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டதால், அங்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதுவரை 190 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 6 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து வெளியாகும் நெருப்புக் குழம்பு, அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கி செல்லும் நிலையில், எரிமலைக் குழம்பு கடலில் கலக்கும் போது ஆபத்தான வாயுக்கள் வெளியாகலாம் என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி Dailythanthi)