விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கேரளாவில் 27-ந்தேதி முழு அடைப்பு

திருவனந்தபுரம்,

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்திற்கு டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு பல்வேறு மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கேரளாவிலும் வருகிற 27-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் விஜயராகவன் நிருபர்களிடம் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

அதில் 27-ந்தேதி நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 100 அமைப்புகள் பங்கேற்க உள்ளன. கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும்’ என்று தெரிவித்தார்.

(நன்றி Dailythanthi)