இந்தியா-இங்கிலாந்து இடையே தடுப்பூசி சான்றிதழ் தொடர்பாக பேச்சுவார்த்தை

 இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரிக்காத இங்கிலாந்து, இந்த தடுப்பூசியை போட்டு செல்லும் இந்தியர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்துமாறு கட்டாயப்படுத்தியது. எனவே இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கேட்டு மத்திய அரசு இங்கிலாந்துக்கு அழுத்தம் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து அங்கீகரித்து நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. அதேநேரம் இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கு 10 நாட்கள் தனிமை என்ற அறிவிப்பு இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில் தடுப்பூசி சான்றிதழ் வினியோகம் தொடர்பாக இந்தியாவும், இங்கிலாந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘கொரோனா சான்றிதழ் வினியோகம் தொடர்பாக இந்தியாவின் தேசிய சுகாதார ஆணைய தலைமை அதிகாரி சர்மாவுடன் சிறந்த தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சான்றிதழ் செயல்முறைக்கு தொழில்நுட்ப கவலைகளை எழுப்பவில்லை. பயணத்தை எளிதாக்குவது மற்றும் இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் பொது சுகாதாரத்தை முழுமையாக பாதுகாப்பது ஆகியவையே எங்கள் கூட்டு நோக்கத்தின் முக்கிய அம்சம் ஆகும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.முன்னதாக கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்து இங்கிலாந்து வெளியிட்ட புதிய அறிவிப்பு குறித்து எல்லிஸ் கூறுகையில், கோவிஷீல்டு ஒரு பிரச்சினையே இல்லை என்பதில் இங்கிலாந்து தெளிவாக இருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

(நன்றி Dailythanthi)