சரக்கு பட்டுவாடா நிறுவனங்களின் உரிமத்திற்கு ஆபத்து ! அரசாங்கம் ஒருதலை பட்சமாகச் செயல்படுகிறது! -குலா கண்டனம்

சரக்கு பட்டுவாடா நிறுவனங்கள் 51 % பங்குகளை  பூமிபுத்ராக்களுக்கு வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் புதிய நிபந்தனை பல  சர்ச்சைகளையும்  கேள்விகளையும் எழுப்பியுள்ளது.  ஆரம்பத்தில் வருட இறுதிக்குள் இதைச் செய்யத்தவறினால் உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என்று அரசாங்கம் கூறியிருந்தது.இது எந்த விதத்தில் நியாயம் என்று சமூகத்தில் பலர் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர் .

இந்த சரக்கு  பட்டுவாடா நிறுவனங்கள் பெரும்பாலும் சீனர்கள் ஆதிக்கத்திலிருந்தாலும் , 30 % மேற்பட்டவர்கள்  இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழிலைப்  பெரும்பாலானவர்கள் , அதிலும் குறிப்பாக  இந்தியர்கள் பாரம்பரிய குடும்ப தொழிலாகப் பல வருடங்களாகச் செய்து வருகிறார்கள். சட்டம் என்ற போர்வையில் அவர்களைக் கட்டாயப்படுத்தி  அவர்களின் உழைப்பில் பாதியை  மற்றவருக்குக் கொடு என்றால் , அதனால் ஏற்படும்  கஷ்ட நஷ்டங்களுக்கும் மன உளைச்சல்கலுக்கும்  ஆதங்கத்திற்கும் யார் பதில் சொல்வது?  அரசாங்கம் எல்லாப் பிரஜைகளையும் சமமாக நடத்துமென்றுதானே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதுதானே அரசியல் சட்டமும் கூட.

அதை விடுத்து “முத்து”விடம் இருந்து பறித்து “முகமது”விடம்  தாரை வார்ப்பது எப்படி  ஜனநாயக நெறியாகும் ?

வருடக்கணக்கில் தங்களது உழைப்பையும் , வியர்வையும் சிந்தி  தொழிலை ஆரம்பித்து  முன்னுக்கு வந்தவர்களைப் பார்த்து சுளையாக  51 % பூமிபுத்ராக்களுக்குக் கொடு என்று சொல்வதில் என்ன நியாயம் ?

பாக்கதாத்தன் ஆட்சி காலத்தில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்ட போது அதை  முன்னாள் நிதி அமைச்சர்  லிம் குவான் எங்   நிராகரித்து விட்டார் என்பதை அவரே அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார். அன்றைய  பாக்கத்தான் அரசு  அது நியாயமில்லை என்று கருதித்தானே அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை , எல்லா மக்களும் ஒரு குடும்பத்தைப் போல என்று கூறும் இஸ்மாயில் சப்ரி அரசாங்கம் எதற்கு இந்த கொள்கைக்கு முரண்பாடான செயலில் இறங்க வேண்டும் ?

இந்த சட்டம் உள்நாட்டுச் சரக்கு பட்டுவாட  நிறுவனங்களுக்கு மட்டுமே  பொருந்தும். வெளி நாட்டினர் நடத்தும் இதே  தொழில்களுக்கு இந்த  சட்டம் பொருந்தாது.

அப்படி என்றால் வெளிநாட்டினரைச் சுதந்திரமாகத்  தொழில் செய்ய விடும்  இந்த அரசாங்கம் அதே சலுகையை உள்நாட்டினருக்கு  கொடுக்க தவறுகிறது என்றுதானே பொருள் படும். இதனால்  உள்நாட்டுத்  தொழில் நிறுவனங்கள்  வர்த்தக  ரீதியா வெளிநாட்டினருடன் போட்டியிடும் தன்மையை இழந்துவிடுவார்கள்.   நாளடைவில்  வெளிநாட்டினரே இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை கூட வரலாம்.

பாக்காத்தான் அரசு செய்த நியாயமான முடிவை  இஸ்மாயில் சப்ரி தலைமையிலான புதிய அரசு  மாற்றி  வர்த்தகர்களுக்கு மாபெரும் துரோகத்தை  இழைத்துள்ளது.

இந்த முடிவை அடுத்த வருடம் , 2022 டிசம்பர் வரை  தள்ளிப் போடுவதாக அரசு  அறிவித்துள்ளது என்ற செய்தி ஆறுதலுக்குப்  பதிலாக  வேதனையை இன்னும் அதிகரிக்கச் செய்கிறது.

இந்த தொழிலை விரிவாக்கம் செய்ய எண்ணுவோர் , மேலும் வாகனங்களிலும் , புதிய தொழில் நுட்பத்திலும்  முதலீடு செய்ய உள்ளோருக்கு இது ஒரு பேரிடி. இந்த குறுகிய ஓராண்டை நம்பி யாரும்  அதிக முதலீடுகளைச்  செய்யப்போவதில்லை .

இதனால் வேலை வாய்ப்புகள் உருக்கப்படுவது குறையும், உள்நாட்டு உற்பத்தி குறைந்து நாட்டின் வருமானமும்  பாதிப்படையும்.

ஒரு தேசிய இனம் மற்றொரு  தேசிய இனத்தின் மீது கட்டுப்பாடுகளை  விதிப்பதென்பது நாட்டை  பொருளாதார ரீதியில்  பெரிதும் பாதிப்படையச் செய்யும்  என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த இந்தியர்களையும் நாங்கள்தான்   பிரதிநிதிக்கின்றோம் என்று   கூறினால் அரசாங்கத்தில் பதவி வகிப்போர் இதற்கென்ன பதில் கூறப் போகிறார்கள் ?

இது குறித்து  நான் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விளக்கம் கேட்க உள்ளேன் .

மு.குலசேகரன்,

ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர்.