கேஜே : பிபிவியில் ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்

குடிநுழைவு நிலையைப் பொருட்படுத்தாமல், தடுப்பூசி பெற தடுப்பூசி மையத்திற்கு (பிபிவி) வரும் யாரையும் சுகாதார அமைச்சு நிராகரிக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ மாட்டாது.

இந்த உத்தரவைச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் நேற்று தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதே அமைச்சின் முன்னுரிமை.

“நாங்கள் யாரையும் நிராகரிக்க மாட்டோம். மலேசியர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் இங்கு இருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் நாங்கள் தடுப்பூசியை இலவசமாக கொடுக்கிறோம்.

நேற்று, புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பின் போது, ​​”பிபிவிக்குத் தடுப்பூசி போட வரும் எவருக்கும் எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை,” என்று அவர் சொன்னார்.

பிபிவிகள் மற்றும் சுகாதார வசதிகளில் ஆவணமற்ற வெளிநாட்டவர்கள் இருந்தால் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறு சுகாதார ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, நேற்று மக்களவையில் உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜைனுடின் கூறியதைத் தொடர்ந்து இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஜூலை 30-ம் தேதி, அமைச்சரவையால் ஒப்புக்கொள்ளப்பட்ட தடுப்பூசிக்கான செந்தர இயங்குதல் நடைமுறையின் (எஸ்ஓபி) ஒரு பகுதி இது என்று ஹம்சா கூறினார்.

எனினும், சுகாதார வசதிகள் மற்றும் பிபிவிகளில் ஆவணமில்லாத வெளிநாட்டவர்கள் இருப்பதைச் சுகாதார ஊழியர்கள் தெரிவிக்க வேண்டியதில்லை என்பதைத் தெளிவாக கூறும்படி கேட்டபோது கைரி அதற்குப் பதிலளிக்கவில்லை.

“நான் முன்பு கூறியது போல், எங்கள் முக்கியக் கவனம் தடுப்பூசி, அவர்களின் குடியேற்ற நிலையை நாங்கள் பொருட்படுத்தவில்லை,” என்று அவர் கூறினார்

முடிந்தவரை அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ள சுகாதார அமைச்சுக்கு, வெளிநாட்டவர்களுக்கு எதிரான அரசின் அமலாக்கம் ஒரு பிரச்சினையாகக் கருதப்படுகிறது.

கடந்த பிப்ரவரியில், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் (பிக்) தொடங்கியதில் இருந்து, ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர்களைத் தடுப்பூசி பெற முன்வருமாறு சுகாதார அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

இறுக்கமான இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு (பி.கே.பி.டி.) உட்பட்ட பகுதிகளில், உள்துறை அமைச்சின் கீழ் உள்ள ஏஜென்சிகளால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளால் கவலை மேலும் அதிகரித்தது.

ஆவணப்படுத்தப்படாத வெளிநாட்டவர்கள், திரையிடல் மற்றும் சிகிச்சை சோதனைகளுக்கு முன் வரும்போது சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்று அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு எதிராக அது அமைந்துள்ளது.