பேட்டரி தொழிற்சாலையை மீண்டும் திறக்க கம்போங் ஜென்ஜாரோம் நகரவாசிகள் எதிர்ப்பு

சிலாங்கூர், கோல லங்காட்டில் உள்ள கம்போங் ஜென்ஜாரோம் குடியிருப்புவாசிகளில் ஒரு குழுவினர், அங்கு பேட்டரி தொழிற்சாலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று காலை, கோல லங்காட் நகராட்சி மன்ற (எம்.பி.கே.எல்.) அலுவலகத்தில் கூடிய குடியிருப்பாளர்களும் ஆர்வலர்களும் எம்.பி.கே.எல். தலைவர், அமீருல் அஸிஸான் அப்து இரஹீமைச் சந்தித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகலில், அவர்கள் எம்.பி.கே.எல். அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் துறை (ஜாஸ்) ஆகியோருடன் ஜாலான் சுகேபியில் அமைந்துள்ள தொழிற்சாலைக்குச் சென்றனர். அவர்களின் வருகையைத் தொழிற்சாலை நிர்வாகத்தின் பிரதிநிதி வரவேற்றார், பின்னர் அவர் தொழிற்சாலையின் நிலையைக் காட்டினார்.

2019-இல், தொழிற்சாலையின் முந்தைய உரிமையாளர் மாசுபாட்டிற்குக் காரணம் என்று கண்டறிந்ததை அடுத்து, அத்தொழிற்சாலை அதிகாரிகளால் மூடப்பட்டது, ஆலையின் நிலைமையைக் கண்காணிக்க காவல்துறையினர் நியமிக்கப்பட்டனர்.

மற்றொரு நிறுவனமான, ஃபெடரல் பவர் ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட் இந்த ஆலையை வாங்கியதாகவும், இந்த முறை சோலார் பேட்டரி உற்பத்திக்காக அதை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

ஆலையின் செயல்பாட்டால் தங்கள் உடல்நலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்கள் தங்கள் கவலையைக் கூறினர்.

“ஆலையைச் சுற்றியுள்ள மாசுபாடு மட்டுமல்ல பிரச்சினை.

“3,000-க்கும் மேற்பட்ட இடைநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் 150 மழலையர் பள்ளிகள் குழந்தைகள் உட்பட 9,000-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் ஆரோக்கியம் எங்களின் முக்கிய அக்கறை,” என்று தொழிற்சாலையை ஆய்வு செய்தபின், குடியிருப்பின் பிரதிநிதி முகமட் நஸ்ரி அஃப்ரிசல் மலேசியாகினியிடம் கூறினார்.

அவர்களின் குரலுக்குச் செவிசாய்க்காமல், ஆலையின் செயல்பாட்டிற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தது, அவருக்கும் மற்ற குடியிருப்பாளர்களுக்கும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளித்ததாக நஸ்ரி கூறினார்.

“நாங்கள் ஒரு பயனும் இன்றி இங்கு அழைக்கப்பட்டோம், நாங்கள் வந்தோமோ இல்லையோ, தொழிற்சாலை அங்கீகரிக்கப்பட்டது.

“மக்களின் ஆரோக்கியம் ஒரு முக்கியமான பிரச்சினை அல்ல என்று சிலாங்கூர் அரசாங்கம் நினைக்கலாம்,” என்று அவர் வருத்தப்பட்டார்.

குடியிருப்பாளர்கள் நிர்வாகத்திற்கு இடையே வாய்ச்சண்டை

தொழிற்சாலையின் ஆய்வின்போது, ​​தொழிற்சாலையின் பாதுகாப்பு நிலை குறித்து நிர்வாக பிரதிநிதிகள் நஸ்ரி மற்றும் கோல லங்காட் சுற்றுச்சூழல் நடவடிக்கை சங்க உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

எம்.பி.கே.எல்.-லிருந்து இயக்க உரிமத்திற்கான விண்ணப்பத்தில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்ய, அவர்கள் உரிய விடாமுயற்சியுடன் செயல்படுவதாக நிர்வாகம் கூறியது, அதை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.

ஆனால், ஆலை நிர்வாகத்தின் திறனைச் சந்தேகித்து குடியிருப்பாளர்கள் அவர்களின் விளக்கத்தை வரவேற்கவில்லை. வழங்கப்பட்ட ஒப்புதல் தொடர்பாக அவர்கள் எம்.பி.கே.எல். அதிகாரிகளுடன் சண்டையிட்டனர்.

முந்தைய நிர்வாகத்திற்குச் சொந்தமான பெரும்பாலான இயந்திரங்கள் இன்னும் அங்கே காணப்படுகின்றன. எனினும், புதிய நிரிவாகம் அதை விரைவில் அகற்றுவதாக உறுதியளித்தது.

எம்.பி.கே.எல். உரிமத் துறை தலைவர் நோர்டிலா யாசிர் புதிய நிரிவாகத்திற்கு இயக்க உரிமம் வழங்கும் முடிவைப் பாதுகாத்தார்.

எம்.பி.கே.எல்.-க்கு மனு

எம்.பி.கே.எல். அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கிராமவாசிகளை ஆதரிக்கும் அரசுசாரா அமைப்புகளின் (என்ஜிஓ) பிரதிநிதிகளும் அமிரூலுக்கு ஒரு மனுவை வழங்கினர்.

சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்க தொழிற்சாலையின் மோசமான செயல்பாட்டை வலியுறுத்தி, வழங்கப்பட்ட இயக்க உரிமத்தை எம்.பி.கே.எல். திரும்பப் பெற வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

மக்களின் பாதுகாப்பையும் சுற்றுச்சூழலின் சமநிலையையும் அச்சுறுத்தும் எந்தவொரு திட்டத்தையும் பற்றிய கருத்துக்களைப் பெற, எதிர்காலத்தில் சிவில் சமூக அமைப்புகளை எம்.பி.கே.எல். அழைக்க வேண்டும் என்றும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய ஆலை இனி பேட்டரிகளை உற்பத்தி செய்யவில்லை என்றாலும், அது குடியிருப்பாளர்களுக்கு இன்னும் உத்தரவாதமாக இல்லை என்று அந்த என்ஜிஓ-க்கள் கூறியன.

“பழைய ஆலை (நிர்வாகம்) அவர்கள் ஈயத்தை உருக்குவதை வெளிப்படுத்தவில்லை, ஆனால் அது செய்யப்பட்டது,” என்று அவர்கள் கூறினர்.

2019-இல் அரசு நிறுவனங்களின் அனைத்து ஆய்வு அறிக்கைகளையும், எம்.பி.கே.எல்.  காட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், இது பேட்டரி தொழிற்சாலையின் உரிமத்தை இரத்து செய்யும் முடிவுக்கு வழிவகுத்தது.

கனரகத் தொழில் தொழிற்சாலைகள், இலகுரகத் தொழிற்சாலைகளில் செயல்பட அனுமதிக்கப்படக்கூடாது என்று அவர்கள் கூறினர்.

“குறிப்பாக, சட்டத்தை மீறிய மற்றும் சுற்றியுள்ள பகுதியை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு,” அவர்கள் மேலும் கூறினர்.

சி4 செண்டர், ஃபைன் ஆர்ட்ஸ் செண்டர், கிரீன்பீஸ் மலேசியா, மலேசிய சோசலிசக் கட்சி, சஹாபாட் ஆலாம் சூழல் சிறப்பு மற்றும் சுவாராம் போன்ற அமைப்புகள் இந்த மனுவிற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தன.