ஐநா பொதுச்சபையில் பிரதமரின் தொடக்க உரை

உலகெங்கிலும் உள்ள பயங்கரவாதத்தைத் தடுக்கும் முயற்சிகளில், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

இன்று, நியூயார்க்கில் நடந்த 76-வது ஐக்கிய நாடுகள் சபையின் (யுஎன்ஜிஏ) பொது விவாத அமர்வில், வீடியோ பதிவு மூலம் ஆற்றிய உரையில்​​ பிரதமராக இஸ்மாயில் சப்ரி இதனைத் தெரிவித்தார்.

பல இடங்கள் இன்னும் நிலையற்ற சூழ்நிலையில் இருப்பதால், உலகளாவிய போர்நிறுத்தக் கனவை நனவாக்குவதில் இருந்து வெகு தொலைவில் நாம் இருக்கிறோம், இது உலகிற்கு துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் கூறினார்.

“மலேசியா தனது வெளியுறவுக் கொள்கையின் மூலம், அமைதியை வளர்க்கவும் மோதலைத் தடுக்கவும் தன்னால் முடிந்ததைச் செய்யும்.

“இது சம்பந்தமாக, இந்த ஆண்டு ஜூன் மாதம் உலகளாவிய போர்நிறுத்தம் குறித்த கூட்டு அறிக்கையை வெளியிடுவதற்கான முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதன் மூலம், உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கான தனது உறுதிப்பாட்டை மலேசியா வலுப்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.

இஸ்மாயில் சப்ரி, மலேசியா எப்போதும் பல்வேறு இனங்கள், நம்பிக்கைகள் மற்றும் மதங்களுடன் இணக்கமாக வாழ்ந்து, உலக நாடுகளுக்கிடையே அமைதியான சகவாழ்வுக்கான எந்தவொரு முயற்சிகளிலும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றார்.

உலகளாவிய போர்நிறுத்தம் மற்றும் மோதல்கள் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், மியான்மரில், பிப்ரவரி 1-ம் தேதி, இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து அங்குள்ள நிலைமை குறித்து மலேசியா கவலைப்படுவதாகக் கூறினார்.

“மலேசியா, மியான்மாரில் கோவிட் -19 தொற்றுநோயுடன் போராடும் சூழ்நிலை குறித்து கவலை கொண்டுள்ளது.

“உதவிகள் தேவைப்படுபவர்களைச் சென்றடைவது மிகவும் முக்கியம்,” என்று கூறிய இஸ்மாயில் சப்ரி, தற்போது 154,000 மியான்மர் அகதிகள் அல்லது அந்நாட்டின் அகதி மக்களில் 84 விழுக்காட்டினர் மலேசியாவில் உள்ளனர் என்றார்.

மியான்மருக்கான ஆசியான் சிறப்புத் தூதுவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மலேசியா வலுவாக ஆதரவளிப்பதாக அவர் கூறினார். ஆனால், அந்தத் தூதுவர் அங்குச் செல்வதற்கு அந்நாட்டு அதிகாரிகள் இதுவரை அனுமதி அளிக்காவில்லை என்றார்.

“அதிகாரிகளை அனுமதித்து, சிறப்புத் தூதுவர் தனது கடமைகளைச் செய்ய உதவுவதோடு, ஆசியானால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஐந்து குறிப்புகளின் ஒருமித்த கருத்தை விரைந்து செயல்படுத்த உதவுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

பிராந்திய முகாமின் மொத்தம் 10 உறுப்பு நாடுகள், மியான்மருக்கான ஆசியானின் சிறப்பு தூதராக, புருணை வெளியுறவு அமைச்சர் II, எரிவான் முகமட் யூசோப்பை நியமித்து, ஒரு மத்தியஸ்தராகச் செயல்பட்டு உரையாடல் செயல்முறையை ஏற்பாடு செய்துள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களின் (ஓ.பி.தி.) பிரச்சினையைத் தொட்டுப் பேசிய பிரதமர், மே மாதம் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல பாலஸ்தீனியப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு மலேசியா மிகவும் ஏமாற்றமும் வருத்தமும் அடைவதாகக் கூறினார்.

“பாலஸ்தீனிய மக்கள் நீண்டகாலமாக பாகுபாடு, மக்களின் மனித உரிமைகளைப் புறக்கணித்தல், கொடூரமான விதிகளை விதித்தல், பெரிய அளவிலான நில அபகரிப்பு மற்றும் மனிதாபிமானமற்ற கொள்கை ஆகியவற்றின் மூலம் திட்டமிட்ட ஒடுக்குமுறையை அனுபவித்து வருகிறார்கள், இது நிறவெறி குற்றம் என்பதைத் தெளிவாக காட்டுகிறது,” என்று அவர் சொன்னார்.

கூடுதலாக, சர்வதேச சட்டங்களைத் தெளிவாக மீறும் நடவடிக்கைகள் உட்பட, அனைத்து தவறுகளுக்கும் இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று மலேசியா மீண்டும் வலியுறுத்தியது.

11 நாள் நெருக்கடி தொடர்பாக சர்வதேச மனித உரிமைச் சட்ட மீறல்களை விசாரிக்க, மனித உரிமைகள் மன்றத்தால் சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதை மலேசியா வரவேற்றுள்ளது.

  • பெர்னாமா