ஷாஹீன் புயலில் இரான், ஓமன் நாடுகளுக்கு மோசமான பாதிப்பு: 32 அடி உயரம் எழுந்த அலைகள்

இதில் குறைந்தது 13 பேர் இறந்தனர். ஞாயிற்றுக்கிழமை இந்த புயல் கரையைக் கடந்த நிலையில், ஓமனின் வடக்குக் கடற் கரையோரம் நெடுகிலும் 150 கி.மீ. வேகம் வரையில் காற்று வீசியது, கடும் மழை பொழிந்தது. இதனால், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வடக்கில் உள்ள அல் படினா மாகாணத்தில் 7 பேர் உயிரிழந்ததாக ஓமன் அதிகாரிகள் தெரிவித்தனர். நீரில் மூழ்கியோ, நிலச்சரிவினாலோ மேலும் 4 பேர் இறந்தனர்.

இரண்டு மீனவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு மாகாணமான சிஸ்டான் – பலுசெஸ்தானில் இருந்து சென்ற மேலும் 3 மீனவர்களைக் காணவில்லை. இந்தப் பகுதி பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ளது.

6 பேர் தங்கள் நாட்டில் கொல்லப்பட்டதாக, தொடக்கத்தில் இரான் நாடாளுமன்ற துணை அவைத்தலைவர் கூறியிருந்தார். மின் இணைப்புகள் சாலைகள் இந்த புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புயல் தென் மேற்கு திசையில் நகர்ந்து நிலப்பகுதியில் நுழைந்து பலவீனமடைந்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிக அவசரத் தேவை இருந்தால் ஒழிய, அல் அவின் நகர மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மஸ்கட் நகரில் புயல் கரையைக் கடந்த நிலையில், கடலில் பிரும்மாண்ட அலைகள் தோன்றி கரையை மோதின. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகிய காரணங்களால் ஓமனில் மட்டும் 11 பேர் இறந்தனர்.மஸ்கட் நகரில் புயல் கரையைக் கடந்த நிலையில், கடலில் பிரும்மாண்ட அலைகள் தோன்றி கரையை மோதின. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகிய காரணங்களால் ஓமனில் மட்டும் 11 பேர் இறந்தனர்.

ஓமனின் வட பகுதியில் அரபிக் கடற்கரையில் இவ்வளவு பலமான புயல் தாக்குவது மிக அரிதானது.

32 அடி உயர அலைகள்

மஸ்கட் நகரில் 200 மி.மீ. மழை பதிவானது என்றும், அங்கிருந்து வட மேற்கு திசையில் உள்ள அல் கொபூரா என்ற இடத்தில் 369 மி.மீ. மழை பதிவானது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புயலால் கடற்கரையில் 10 மீட்டர் அதாவது 32 அடி உயரம் வரையில் அலைகள் எழுந்தன.

Mapஞாயிற்றுக்கிழமை புயல் கரையைக் கடப்பதற்கு முன்பாக மஸ்கட் மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டதாக அவசர நிலை மேலாண்மைக்கான தேசியக் குழு (NCEM) அறிவித்தது.

வெள்ளம் சூழ்ந்த தெரு ஒன்றில் நீரில் மூழ்கிக் கிடக்கும் கார் ஒன்று.

மீட்புப் பணிகள்

வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஆயுதப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஓமனின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தேவையான இடங்களுக்கு உதவிகளைக் கொண்டு செல்ல வழி செய்யும் வகையில் சேதமான சாலைகளையும் ஆயுதப் படையினர் சரி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாகாணங்களில் அமைக்கப்பட்ட 80 முகாம்களில் 5 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புயல், நிலப்பகுதிக்குள் நுழைந்துள்ள நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அந்நாட்டின் இயற்கை இடர் எச்சரிக்கை அமைப்பான நேஷனல் மல்டி ஹசார்ட் ஏர்லி வார்னிங் சிஸ்டம் எச்சரித்தது. வாடிகள் என்று சொல்லப்படும் பள்ளத்தாக்குகள், ஓடைகள் நிரம்பிய பகுதிக்கு செல்லவேண்டாம் என்று மக்கள் எச்சரிக்கப்பட்டனர்.

(நன்றி BBC TAMIL)