இலங்கையில் தமிழர்கள் அதிகாரத்தை பெற ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்திய இந்திய வெளிவிவகார செயலாளர்

இலங்கை மத்திய அரசாங்கத்திடமிருந்து தமிழர்களுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து சிறுபான்மை சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு கொழும்பில் நேற்று (அக்டோபர் 4) நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை, இந்திய வெளிவிவகார செயலாளர் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, அவர் தம்மிடம் கேட்டறிந்து கொண்டதாக சந்திப்பில் கலந்து கொண்ட கட்சி பிரதிநிதிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கவலை

இந்திய வெளியுறவுத் துறை செயலருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகின்ற நிலையில், அது சிறுபான்மை சமூகத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகள், இந்திய வெளியுறவுத்துறையிடம் தெரிவித்தனர் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

மாகாண சபையில் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி, 25 பிரதிநிதிகள் உள்ளதாகவும், புதிய தேர்தல் முறைமையில் அது 2 அல்லது 3ஆக குறையும் அபாயம் காணப்படுவதாகவும் தாம், இந்திய அதிகாரியிடம் சுட்டிக்காட்டியதாக அவர் கூறினார்.

இந்த பிரதிநிதித்துவம் நாடாளுமன்றம் மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறான புதிய தேர்தல் முறைமை அமல்படுத்தப்படும் பட்சத்தில், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் முழுமையாக இல்லாது போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தல் முறை மாற்றம், சிறுபான்மை சமூகத்தை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என இந்தியா, இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தாம் கோரியதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

இலங்கையில்; வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே இந்திய வெளிவிவகார செயலாளரும் உள்ளதாக அவர் கூறுகின்றார்.

புதிய தேர்தல் முறை அமல்படுத்தப்படும் பட்சத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களை விடவும், மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கே பாதிப்பு அதிகம் என்பதனையும் அவர் ஏற்றுக்கொண்டதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், புதிய தேர்தல் முறைமை மாற்றம் குறித்து, இந்திய வெளிவிவகார செயலாளர், பிரதமருடனான சந்திப்பில் வலியுறுத்தியதாக அவர் கூறுகின்றார்.

மேலும், பெருந்தோட்ட பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள பாடசாலைகளின் அபிவிருத்தி பணிகள், மலையக மக்களுக்கான வீடமைப்பு திட்டம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்தும் தமது கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

13-ஆவது திருத்தத்தை வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இந்திய வெளியுறவுத் துறை செயலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு இந்தியா, இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என தாம் வலியுறுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது குறித்தும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என தாம் கோரியதாகவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒத்துழைப்புக்களை இந்திய வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை பொருளாதார ரீதியில் முன்னேறச் செய்வதற்கு இந்தியா, தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்பது குறித்தும் தாம் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்திடமிருந்து உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு, பொது விடயங்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை, இந்திய வெளிவிவகார செயலாளர் தம்மிடம் வலியுறுத்தியதாக அவர் கூறுகின்றார்.

தனித்து செயற்படும் பட்சத்தில், அதற்கான தீர்வு கிடைக்காது எனவும், ஒன்றிணைந்து செயற்படும் பட்சத்தில், தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அதற்கான ஒத்துழைப்புக்களை தாம் வழங்குவதாகவும் இந்திய வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அகதிகளுக்கு குடியுரிமை தர வேண்டும்: தமிழ் முற்போக்கு கூட்டணி

இந்திய வெளியுறவுத் துறை செயலருடன் தமிழ் முற்போக்கு கூட்டணிஇலங்கையின் மொழி உரிமை தொடர்பில் தமது கலந்துரையாடலின் போது பேசப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது எனவும், அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க இந்திய முன்வர வேண்டும் எனவும் தாம் கோரியதாக அவர் கூறுகின்றார்.

மலையகத்தை அபிவிருத்தி செய்து, அங்கு வாழும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவது குறித்தும் உதவிகளை வழங்க இந்தியா முன்வர வேண்டும் என்பதனை தாம் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் யுத்த காலத்தின்போது இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து அங்கு அகதிகளாக வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு ‘இந்திய பிரஜாவுரிமை’ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம், இந்திய வெளிவிவகார செயலாளரிடம் கோரிக்கை முன்வைத்ததாக அவர் தெரிவிக்கின்றார்.

தேர்தல் முறை மாற்றத்தின் போது, அது சிறுபான்மை சமூகத்தை பாதிக்காத வகையில் உருவாக்குவதற்கு இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேர்தல் முறை மாற்றமானது உள்நாட்டு விவகாரம் எனவும், அது குறித்து உள்நாட்டில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறும் இந்திய வெளிவிவகார செயலாளர் தம்மிடம் பதில் வழங்கியதாக கூறிய அவர், தாமும் இது குறித்து இலங்கை அரசிடம் பேசுவதாக குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, நுவரெலியாவிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தின் நிர்மாணப் பணிகளுக்கான உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்தின் புனர்நிர்மாணப் பணிகளை இந்தியா பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

இதற்கான திட்டத்தை இந்தியாவிடம், விரைவில் கையளிக்குமாறு, இந்திய வெளிவிவகார செயலாளர், தம்மிடம் கோரியதாக வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல், மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துதல், நல்லிணக்கத்தை அடைதல் மற்றும் இந்தியாவுடனான தொடர்புகளை புதுப்பித்தல் ஆகியவற்றினூடாக தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்திய வெளிவிவகார செயலாளர், தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றில் ஊடாக இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கலாஇந்தியாவின் குஷிநகர் விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்பட்டவுடன், இலங்கையிலேயே முதலாவது யாத்ரீக விமானம் வருகைத் தரும் என தான் நம்புவதாக இந்திய வெளிவிவகார செயலாளர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பௌத்த உறவை மேம்படுத்துவதற்கு இந்தியாவினால் வழங்கப்பட்ட 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை குறித்தும், பௌத்த உறவை மேம்படுத்த இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு குறித்தும், பிரதமர் மஹிந்த ராஜபகேஷ, இந்திய வெளிவிவகார செயலாளருடன் கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் தற்போது செயற்பாட்டிலுள்ள திட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறை, பௌத்த உறவினை மேம்படுத்தல் உள்ளிட்ட பரஸ்பர ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் பல்வேறு துறைகள் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

பிரதமருடனான சந்திப்பில் பின்னர், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரையும் நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

இந்திய திட்டங்கள் குறித்து ஆலோசனை

இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய – இலங்கை ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு ஆகியவற்றின் வலுவான உறவை இந்த சந்திப்பின் ஊடாக மீள உறுதிப்படுத்தியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

இப்பரந்த பங்குடைமையை சகல மட்டங்களிலும் முன்னேற்றும் வழிமுறைகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 3ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலாளர், கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்திய நிதியுதவியின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தை பார்வையிட்டதுடன், சிலர் தமிழ் தரப்புடன் அன்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

திருகோணமலையிலுள்ள இலங்கை ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு சொந்தமான எரிப்பொருள் தாங்கிகளையும் அவர் அன்றைய தினம் பார்வையிட்டிருந்தார்.

அதன்பின்னர், நேற்றைய தினம், மலையகத்திற்கான வீட்டுத் திட்டத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்விலும் அவர் கலந்துக்கொண்டிருந்தார்.

(நன்றி BBC TAMIL)