பிபிஎன் : ஜொகூர் 3-ஆம் கட்டத்திற்கும் பகாங் 4-ஆம் கட்டத்திற்கும் நகர்கின்றன

எதிர்வரும் அக்டோபர் 8 முதல், தேசிய மீட்புத் திட்டத்தின் (பிபிஎன்) மூன்றாம் கட்டத்திற்கு ஜொகூரும், நான்காம் கட்டத்திற்குப் பஹாங் மாநிலமும் நகரவுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்தார்.

இன்று நடந்த கோவிட் -19 தொற்றுநோய் மேலாண்மை சிறப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

“பிபிஎன், சுகாதார அமைச்சு மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) ஆகியவற்றின் தற்போதைய இடர் மதிப்பீட்டைக் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு, இந்த மாற்றம் செய்யப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

மூன்றாம் மற்றும் நான்காம் கட்டத்தில் நுழையும் மாநிலங்களுக்கான செந்தர இயங்குதல் நடைமுறைகள் (எஸ்.ஓ.பி.) முன்பு போலவே இருக்கும். சமீபத்திய எஸ்.ஓ.பி. விவரங்கள், எம்.கே.என்.-இன் www.mkn.gov.my என்ற இணையதளத்தில் புதுப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அக்டோபர் 9 முதல், பிபிஎன் காலத்தில், மொத்தச் சந்தைகளின் செயல்பாட்டு நேரம், கோயில்களில் திருமணம் உட்பட, பல புதிய நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கவும் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக ஹிஷாமுதீன் தெரிவித்தார்.

அது தவிர, வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட அடகுக்கடைத் துறையின் கீழ் உள்ள இணை பொருட்களுக்கான பொது ஏல நடவடிக்கைகள் சில நிபந்தனைகளுடன் அக்டோபர் 9 முதல் அனுமதிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து எஸ்.ஓ.பி.க்களை கடைபிடிக்குமாறும், தங்களையும் சுற்றியுள்ள சமூகத்தையும் கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்க, சுய மதிப்பீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் ஹிஷாமுதீன் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

“பாதிகாப்பாக மீண்டும் திறக்கும் (#ReopeningSafely) தேசிய முயற்சியில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் அனைவரும் வசதியாகவும் கவனமின்றியும் இருந்துவிடக்கூடாது.

“அறிவிக்கப்பட்ட அனைத்து சலுகைகளும் இருக்கும் என்றபோதிலும், நாம் அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், நாம் கோவிட்-19 கோரணி நச்சிலுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா